Rahul Dravid IPL Return : ராகுல் டிராவிட் மீண்டும் ஐபிஎல் தொடரில் ஆலோசகராக திரும்ப இருக்கிறார். இந்திய கிரிக்கெட் அணியின் பயிற்சியாளர் பொறுப்பில் இருந்து விலகிய அவர், கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியுடன் இணைவார் என கூறப்பட்டது. அதற்காக ஆரம்பக்கட்ட பேச்சுவார்த்தைகள் நடைபெற்ற நிலையில், இப்போது மற்றொரு அணியும் ராகுல் டிராவிட்டுடன் பேச்சுவார்த்தை நடத்தி வருகிறது. ராஜஸ்தான் ராயல்ஸ் தான் அந்த அணி. ஆர்ஆர் அணிக்காக விளையாடிய டிராவிட் அந்த அணியின் ஆலோசகராகவும் இருந்திருக்கிறார். அதனால் அந்த அணியுடனே மீண்டும் ஐபிஎல் தொடரில் இணைய இருக்கிறார். பேச்சுவார்த்தைகள் ஏறத்தாழ முடிந்துவிட்டதாகவும், ஓரிரு மாதங்களில் அறிவிப்பு வெளியாக இருப்பதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.
ராகுல் டிராவிட் ஏற்கனவே ஐபிஎல் தொடரில் டெல்லி டேர்டெவில்ஸ் அணிக்காக பயிற்சியாளராக இருந்தார். அந்த அணி உரிமையாளர்களுடன் கருத்து வேறுபாடு ஏற்பட்டதால், டெல்லி அணியின் பயிற்சியாளர் பொறுப்பில் இருந்து விலகிய ராகுல் டிராவிட் இந்திய கிரிக்கெட் ஜூனியர் அணிக்கு பயிற்சியாளராகவும், பெங்களுருவில் இருக்கும் தேசிய கிரிக்கெட் அகாடமி என்சிஏவுக்கு தலைவராகவும் இருந்தார். இதனையடுத்து தான் இந்திய கிரிக்கெட் அணியின் தலைமை பயிற்சியாளர் பதவி அவரைத் தேடிச் சென்றது.
ராகுல் டிராவிட் பயிற்சியின் கீழ் இந்திய கிரிக்கெட் அணி ஒருநாள் உலகக்கோப்பை போட்டியில் இறுதிபோட்டிக்கும், உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் தொடரில் இறுதிப் போட்டிக்கும் முன்னேறியது. அண்மையில் வெஸ்ட் இண்டீஸில் நடந்த டி20 உலக்கோப்பை தொடரில் சாம்பியன் பட்டத்தையும் கைப்பற்றி ரோகித் சர்மா தலைமையிலான இந்திய அணி சாதனை படைத்தது. அத்துடன் இந்திய அணியின் பயிற்சியாளர் பொறுப்பில் இருந்து விலகிக் கொள்வதாக அறிவித்தார் ராகுல் டிராவிட். சாம்பியன்ஸ் டிராபி வரை பயிற்சியாளராக தொடருமாறு ரோகித் சர்மா கோரிக்கை வைத்தபோதும், மறுத்துவிட்டார் ராகுல் டிராவிட்.
இந்த சூழலில் தான் ஐபிஎல் போட்டிக்கு கம்பேக் கொடுக்க இருக்கிறார் டிராவிட். ராஜஸ்தான் ராயல்ஸ் அணிக்கு ஆலோசகராக செயல்படுவாரா? அல்லது பயிற்சியாளராக இருப்பாரா? என்ற தகவல் இன்னும் உறுதியாகவில்லை. இன்னொருபுறம் டிராவிட் இடத்துக்கு கம்பீர் சென்றிருக்கிறார். அவரை இந்திய அணியின் புதிய பயிற்சியாளராக நியமித்திருக்கிறது பிசிசிஐ. கவுதம் கம்பீர் இலங்கை அணிக்கு எதிரான டி20 தொடரில் இருந்து தன்னுடைய பயிற்சியாளர் பொறுப்பை அதிகாரப்பூர்வமாக ஏற்றுக் கொண்டிருக்கிறார். இந்தியா, இலங்கை அணிகளுக்கு இடையிலான முதல் 20 ஓவர் போட்டி ஜூன் 27 ஆம் தேதி நடக்க இருக்கிறது.