கேரள மாநிலம, மலப்புரம், பாண்டிக்காடு பகுதியைச் சேர்ந்த 16 வயது சிறுவன் நிபா வைரஸ் பாதிப்பால் உயிரிழந்ததை சுகாதாரத்துறையினர் கண்டறிந்து உறுதி செய்துள்ளனர். நிபா வைரஸ் பரவலைத் தடுக்கும் வகையில் கேரள மாநிலம் முழுவதும் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை தீவிரமாக மேற்கொண்டு வருகின்றனர். மலப்புரத்தில் கடுமையான கட்டுப்பாடுகளும் விதிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில், கேரள எல்லையில் அமைந்துள்ள தமிழக சோதனைச் சாவடிகளில் கண்காணிப்பு பணிகளை தமிழக சுகாதாரத்துறை தீவிரப்படுத்தியிருக்கிறது. கேரளாவில் இருந்து நீலகிரி மாவட்டம் வழியாக தமிழகத்திற்கு வரும் பயணிகளுக்கு உடல் வெப்ப பிரிசோதனை செய்த பின்னரே அனுமதித்து வருகின்றனர். பயணிகளின் விவரங்களையும் சேகரித்து வருகின்றனர்.
நிபா வைரஸ் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்து தெரிவித்த சுகாதாரத்துறையினர், “கேரளாவில் இருந்து நீலகிரி வழியாக தமிழகத்திற்குள் நாடுகாணி, சோலாடி, பாட்ட வயல், தாளூர் போன்ற சோதனைச் சாவடிகள் வழியாக வருகின்றனர்.
ஒவ்வொரு சோதனைச் சாவடியிலும் 3 பேர் நியமிக்கப்பட்டு நிபா வைரஸ் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளில் ஈடுபட்டு வருகின்றனர். பேருந்துகள் மற்றும் தனியார் வாகனங்களில் வரும் பயணிகளை தெர்மா மீட்டர் மூலம் உடல் வெப்ப பரிசோதனை செய்த பின்னர் அனுமதிக்கிறோம். முகக்கவசம் அணியவும் அறிவுறுத்தி வருகிறோம். மக்கள் யாரும் அச்சப்படத் தேவையில்லை” என்றனர்.