கரூர் மாவட்டம், வாங்கல் காவல் நிலையத்துக்கு உட்பட்ட காட்டூரைச் சேர்ந்த பிரகாஷ் என்பவருக்கு சொந்தமான ரூ.100 கோடி மதிப்புள்ள 22 ஏக்கர் நிலத்தை போலி ஆவணம் மூலம் பத்திரப்பதிவு செய்த வழக்கில், முன்னாள் அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கரை சி.பி.சி.ஐ.டி போலீசார் கடந்த 16-ம் தேதி கேரள மாநிலம், திருச்சூரில் கைதுசெய்தனர். அதோடு, அவரை கரூர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி கடந்த 17-ம் தேதி திருச்சி மத்திய சிறையில் அடைத்தனர். அதனைத் தொடர்ந்து, 15 நாள் நீதிமன்றக் காவலில் அடைக்கப்பட்டிருந்த முன்னாள் அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் ஜாமீன் கேட்டு கரூர் குற்றவியல் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்திருந்தார். இந்த ஜாமீன் மனு மீதான விசாரணை நேற்று நடைபெற்றது. அப்போது, சொத்து ஆவணங்கள் மோசடி வழக்கு தொடர்பாக எம்.ஆர்.விஜயபாஸ்கரை மூன்று நாட்கள் கஸ்டடியில் எடுத்து விசாரணை செய்வதற்காக சி.பி.சி.ஐ.டி போலீஸார் அனுமதி கேட்டு மனு அளித்திருந்தனர். இந்நிலையில், முன்னாள் அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கார் தரப்பு வழக்கறிஞர் மற்றும் சி.பி.சி.ஐ.டி போலீஸார் தரப்பு வழக்கறிஞர் வாதங்களைக் கேட்ட நீதிபதி பரத்குமார், முன்னாள் அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கரை 2 நாட்கள் போலீஸ் காவலில் எடுத்து விசாரிக்க அனுமதி அளித்து உத்தரவிட்டார்.
இதனைத் தொடர்ந்து, நேற்று மாலை கரூர் காந்திகிராமம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் எம்.ஆர்.விஜயபாஸ்கர் மருத்துவ பரிசோதனைக்கு அழைத்துச் செல்லப்பட்டு, கரூர் மாவட்ட சி.பி.சி.ஐ.டி அலுவலகம் அமைந்துள்ள கரூர் காந்திகிராமம் திண்ணப்பா நகர் அலுவலகத்திற்கு அழைத்து வரப்பட்டார். இதனால், அங்கு பாதுகாப்புக்காக போலீஸார் குவிக்கப்பட்டனர். இந்நிலையில், சி.பி.சி.ஐ.டி மேற்கு மண்டல எஸ்.பி-யான ஸ்ரீதேவி அவரிடம் நில மோசடி பதிவு தொடர்பாக, சி.பி.சி.ஐ.டி தனிப்படை போலீஸார் திரட்டிய ஆவணங்கள் அடிப்படையில் விசாரணை நடத்தினார்.
தொடர்ந்து இன்று காலை 8 மணி முதல், ஆவணம் தொலைந்து விட்டதாக சான்று அளித்த வில்லிவாக்கம் காவல் ஆய்வாளர் பிரிதிவிராஜிடம் சான்று வழங்க பேசியது குறித்து விசாரணை நடந்ததாக சொல்லப்பட்டது. தொடர்ந்து, சி.பி.சி.ஐ.டி போலீஸாரால் ஏற்கெனவே கைது செய்யப்பட்டுள்ள தொழிலதிபர் பிரகாஷின் உறவினர் பிரவீன், காவல் ஆய்வாளர் பிரிதிவிராஜ் ஆகியோரிடமும் விசாரணை நடத்தப்பட உள்ளது என தகவல்கள் வெளியாகியுள்ளன. இதற்கிடையில், இரண்டு நாள் விசாரணை நிறைவடைந்து, நாளை மீண்டும் கரூர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு எம்.ஆர்.விஜயபாஸ்கர் திருச்சி மத்திய சிறையில் மீண்டும் அடைக்கப்பட உள்ளார்.