`வேற்றுமையில் ஒற்றுமை நம் சிறப்பு கிடையாது, ஆனால்…' – குமரியில் RSS தலைவர் மோகன் பகவத் பேசியதென்ன?

ஆர்.எஸ்.எஸ் தலைவர் மோகன் பகவத், கன்னியாகுமரி விவேகானந்தா கேந்திராவில் 3 நாள்கள் தங்கியிருந்து, பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்துகொண்டுவருகிறார். அதன் ஒருபகுதியாக கன்னியாகுமரி விவேகானந்தா கேந்திர வளாகத்தில் நிறுவப்பட்டுள்ள தியாகச்சுவரை திறந்து வைத்தார். அந்த நிகழ்ச்சியில் மோகன் பகவத் பேசுகையில், “பாரத நாடு மிகவும் பழமையானது, சீனாவைவிடவும் மிகவும் பழமையான நாடு நம் பாரத நாடு. ரோம், கிரேக்கம் போன்ற சாம்ராஜ்யங்கள் எல்லாம் உலகில் இருகந்தன. அவையெல்லாம் இன்று வெறும் மண்ணாக இருக்கின்றன. அங்கு, நாகரிகம் ஒன்றும் காணப்படவில்லை. நம் நாடு இன்றும் உயிரோட்டத்துடன் இருக்கிறது. இப்படிப்பட்ட பாரத நாட்டில் பிறந்திருக்கிறோம் என்பதில் பெருமைப்பட வேண்டும். உலகில் பல நாடுகள் காணாமல் போனாலும்,  நாம் தலைநிமிர்ந்து நிற்கிறோம். வருங்காலத்திலும் நாம் தலை நிமிர்ந்து நிற்போம். பல லட்சம் தலைமுறைகள் ஒவ்வொரு விஷயத்தையும் ஆணித்தரமாக செயல்படுத்தி, உணர்ந்து உருவாக்கி கொடுத்தது பாரத பண்பாடு. இந்த பண்பாட்டை  உருவாகக்குவதற்கு பல கோடி பலிதானங்கள் கொடுக்கப்பட்டுள்ளன. எத்தனையோ வெளிநாட்டு தாக்குதல் நடந்திருக்கின்றன. அதை அனைத்தையும் எதிர்கொண்டு வெற்றி கொண்டவர்கள் நாம். அந்த பெருமை பாரத நாட்டுக்கு மட்டுமே உண்டு.

தியாகச் சுவர் குறித்த புத்தகத்தை வெளியிட்ட ஆர்.எஸ்.எஸ் தலைவர் மோகன் பகவத்

பிரயாக்ராஜில் முன்பு ஒரு ஆலமரம் இருந்தது. அனைத்து மக்களும் வந்து பூஜை செய்வார்கள். மரத்தை, கொடியை, செடியை, விலங்குகளை, நதியை பூஜை செய்வது நம்முடைய வழக்கம். ஏனென்றால் அவற்றை நாம் இறைவனாக பார்க்கிறோம். அப்படி பார்த்து தான் ஆலமரத்தை பூஜை செய்தார்கள். டில்லி பாதுஷாவுக்கு அது பிடிக்கவில்லை. உடனே அவர் அந்த மரத்தை வெட்டி மண்ணுடன் வேரை அகற்றினார். அங்கு அந்த மரம் மீண்டும்  முளைக்க கூடாது என்பதற்காக இரும்பைக் காச்சி ஊற்றி விட்டு சென்றார். ஆனால் சில மாதங்களுக்கு பிறகு அங்கு அந்த மரம் துளிர்த்தது.  இப்போது பிரமாண்டமாக அந்த மரம் வளர்ந்து நிற்கிறது. பாரத நாட்டின் பண்பாட்டை யாராலும் அழிக்க முடியாது என்பதை நாம் இதன் மூலம் புரிந்து கொள்ள வேண்டும். பாரத நாட்டின் பண்பாட்டை காப்பாற்றுவதற்காக இங்கு பல தியாகிகள் இருந்திருக்கிறார்கள். உலகத்தை ஒரு குடும்பமாக பார்க்கும் பண்பாடு நம்முடையது. வேற்றுமையில் ஒற்றுமை என்பது நம் சிறப்பு கிடையாது. ஒரே பாரத பண்பாட்டில் இருந்து வந்ததுதான் இந்த வேற்றுமை என்பதை நாம் புரிந்து கொள்ள வேண்டும். பல்வேறு உணவு முறைகள், பழக்கவழக்கங்கள் இருந்து வருகின்றன. பாரத பண்பாடு என்று வரும்போது அதை காக்க நாம் உழைக்கிறோம், ஒன்றுபடுகிறோம், ரத்தம் சிந்துகிறோம். ஒற்றுமை உணர்வை பாரதத்திடம் இருந்து உலகம் எதிர்பார்க்கிறது. இது போன்ற ஒரு சூழ்நிலை உலகத்திற்கு வேண்டும் என்று எதிர்பார்க்கிறது. அதை கொடுக்க நம்மால் தான் முடியும்.

தியாகச் சுவர் முன்பு நின்று போட்டோ எடுத்துக்கொண்டவர்கள்

உலகில் இன்று நாம் தலைநிமிர்ந்து நடக்கிறோம். இது நம்மால் வந்ததல்ல, நம் முன்னோர்களின் கடுமையான உழைப்பு மற்றும் தியாகத்தால் நமக்கு கிடைத்தது. இதனை காத்து அடுத்த தலைமுறைக்கு கொண்டு செல்ல வேண்டும். வீட்டில் முன்பு கொள்ளு தாத்தாவில் ஆரம்பித்து ஐந்து தலைமுறை இருப்பார்கள். நம் பண்பாட்டை 7 முதல் 14 வரை உள்ள தலைமுறைக்கு கொண்டு போய் சேர்க்க வேண்டும். அதற்கான வேலையை நாம் செய்ய வேண்டும். பாரத நாட்டிற்கு பெரியவர்கள் செய்த விஷயங்களை அடுத்த அடுத்த தலைமுறைக்கு கொண்டு போய் சேர்க்க வேண்டிய பொறுப்பு நமக்கு இருக்கிறது. நாட்டின் எல்லையை கடந்து தாக்குதல் வந்தால் போராட தயாராக இருக்கக்கூடியது நம்முடைய குணமாகும். எதிரிகளை நாம் தூங்க விட்டது கிடையாது. சில சமயம் நாம் வென்றிருக்கிறோம், சில சமயம் அவர்கள் வென்று இருக்கிறார்கள். ஆனால் நாம் போராடிக் கொண்டே இருந்தோம். நம்மை அடிமைப்படுத்தியவர்கள் என்றுமே நிம்மதியாக இருந்ததாக சரித்திரமே கிடையாது. இந்த நாட்டின் மீது பலர் படை எடுத்து வந்தார்கள் பலர் நம்மோடு கரைந்தார்கள், பலர் திரும்பிப் போனார்கள். அனைத்து சரித்திரமும் இந்த பாரத நாட்டிற்கு இருக்கிறது. பாரத நாட்டினுடைய 75-வது சுதந்திர தினத்தை கொண்டாடி விட்டோம். இங்கு இருக்கக்கூடிய  கோடிக்கணக்கான மக்களின் தியாகத்தின் விளைவைத்தான் நாம் பார்த்துக் கொண்டிருக்கிறோம். இந்த தியாகச்சுவர் போராட்டத்தில் பலியானவர்களின் விவரங்கள் அடங்கிய சுவர். நம் நாட்டில் 10 கிலோமீட்டர் சுற்றளவு பகுதியில் சுதந்திரத்திற்காக போராடிய வீரர்கள் கண்டிப்பாக இருப்பார்கள். நாடு முழுவதும் எல்லா இடங்களிலும் சுதந்திரத்திற்காக போராடியவர்கள் இருக்கிறார்கள். பணக்காரன், ஏழை என்ற வேறுபாடு இல்லாமல் அனைவரும்  போராடினார்கள். பாரத நாடு என்னுடைய நாடு என்ற எண்ணத்தில் போராடினார்கள்.

தியாகச்சுவர் திறப்புவிழாவில் மோகன் பகவத்

இன்று இந்த பாரதம் இவ்வளவு சிறப்பாக இருக்க, பெருமை மிகுந்த நாடாக இருக்க காரணமான முன்னோர்களை நாம் மறந்து விடக் கூடாது. நாட்டில் யாருக்கும் துக்கமும், ஏழ்மையும் இருக்கக் கூடாது என்பதற்காகத்தான் நாம் வேலை செய்து கொண்டிருக்கிறோம். ஓய்வில்லாமல் நாம் அந்த வேலை செய்ய வேண்டும். உலகம் நன்றாக இருக்க வேண்டும் என்பதற்காகத்தான் பாரதம் நன்றாக இருக்க வேண்டும் என்று நினைக்கிறோம். பாரதம் எந்த அளவிற்கு உயர்கிறதோ, அந்த அளவுக்கு உலகிற்கு நன்மை கிடைக்கும். நாம் நன்றாக படித்து மேலே வரும் போது நம் சுயநலத்தை குறைத்துக் கொள்ள வேண்டும். என்னுடைய ஊருக்காகவாவது நான் நன்மை செய்வேன் என்று உறுதிகொள்ள வேண்டும். நாட்டினுடைய வளமை வருங்காலத்தில் எப்படி இருக்க வேண்டும் என்பதற்கான சின்னமாக தியாகச்சுவரை இங்கு வைத்திருக்கிறோம். இது போன்று நாட்டின் 100 இடங்களில் தியாகச்சுவர்கள் வரவேண்டும். தேசமே நமக்கு எல்லாம் கொடுக்கிறது, நாமும் தேசத்துக்கு சிறிது கொடுக்க பழக வேண்டும். பராசக்தி தவம் செய்த இடம் கன்னியாகுமரி. இங்கு எதை தொடங்கினாலும் வெற்றி அடையும் என்பது எனக்கு தெரியும். விவேகானந்தர் இங்கிருந்து தொடங்கினார், உலகை வென்றார். எனவே இந்த இடத்தில் தொடங்கினால் வெற்றி நிச்சயம். உலகின் குருவாக பாரதம் உருவாக வேண்டும் அதற்கு இதுவும் ஒரு காரணமாக அமையும்” என்றார்.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.