கட்சியில் ரெளடிகள் லிஸ்ட்:
குற்றப்பின்னணியில் இருப்பவர்களைத் தொடர்ந்து பாஜக-வில் இணைத்துக் கொண்டிருக்கிறார்கள் என்று திமுக-வில் பலரும் தொடர் குற்றச்சாட்டுகளை முன்வைத்து வந்தனர். அதற்கேற்றாப்போலவே படப்பை குணா தொடங்கி தற்போது ஆம்ஸ்ட்ராங் கொலையில் கைது செய்யப்பட்டிருக்கும் அஞ்சலை வரை குற்றப்பின்னணியிலிருந்த பலரும் பாஜக-வில் உறுப்பினர்களாக இணைந்த சம்பவமும் நடந்தது. இது குறித்து சமீபத்தில் பேசிய காங்கிரஸ் மாநில தலைவர் செல்வப்பெருந்தகை, `பாஜகவில் உள்ள 261 பேர் குற்றவாளிகள் எனவும் அவர்கள் மீது 1977 வழக்குகள் நிலுவையில் இருப்பதாகவும்’ குற்றச்சாட்டை முன்வைத்திருந்தார்.
இந்தநிலையில், செய்தியாளர்களைச் சந்தித்த தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை, `குற்றப்பின்னணி கொண்டவர்கள் யாராக இருந்தாலும் அவர்கள் சார்ந்துள்ள கட்சி நடவடிக்கை எடுக்கவேண்டும். ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் தொடர்புடையவர்களை நாங்கள் கட்சியிலிருந்து நீக்கியிருக்கிறோம். திமுகவில் குற்றப்பின்னணி கொண்டவர்களின் பட்டியலை வெளியிடுகிறேன்’ என்று சொன்னவர் ‘தி கிரைம் முன்னேற்றக் கழகம்‘ என்ற 112 பேர் பட்டியலை வெளியிட்டிருந்தார். அதில் பல்வேறு திமுக உறுப்பினர்களின் பெயர்கள் இடம்பெற்றிருந்தது குறிப்பிடத்தக்கது.
“தமிழக பாஜக ரெளடிகளின் கூடாரம்”
தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை திமுக மீது வைத்திருக்கும் குற்றச்சாட்டுத் தொடர்பாக திமுக-வின் செய்தித் தொடர்பு செயலாளர் கான்ஸ்டன்டைன் ரவீந்திரனிடம் பேசினோம். “பாஜக-வில் ரெளடிகள் இருக்கிறார்கள் என்று நாங்கள் சொல்வது ஒருபுறமிருக்கட்டும். பாஜக மாநில தலைவராக இருந்த தமிழிசை சௌந்தரராஜன் ‘நான் தலைவராக இருந்தபோது சமூக விரோதிகளைக் கட்சிக்குள் அனுமதிக்கவில்லை. இப்போது அப்படிப்பட்ட ரெளடிகள் சிலர் கட்சியில் சேர்ந்திருக்கிறார்கள்’ என்று சொல்லியிருக்கிறார். உண்மைதானே… குற்றப்பின்னணியில் இருப்பவர்கள் பாஜகவில் இருக்கிறார்கள் என்பதை யாருமே மறுக்க முடியாது. கட்சியில் சேர்ந்த பலரும் காவல்துறையினரால் தேடப்படும் குற்றவாளிகளாகவே இருந்தனர். தன் வீட்டுக்கு தானே பெட்ரோல் குண்டு வீசிக்கொள்பவர்கள் எல்லாம் பாஜகவில் மட்டுமே இருக்கிறார்கள். கிட்டத்தட்டத் தீவிர குற்றப் பின்னணியில் இருக்கும் 260-க்கும் மேற்பட்டவர்களுக்குக் கட்சியில் பதவி கொடுத்து அடைக்கலம் கொடுத்திருக்கிறார் அண்ணாமலை.
அவர்கள் மீது 1977 வழக்குகள் நிலுவையில் இருக்கின்றன. அதுவும் சாதாரண வழக்குகள் கிடையாது, கொலை, கொள்ளை, பாலியல் வன்கொடுமை, கஞ்சா கடத்தல், கட்டப்பஞ்சாயத்து போன்ற தீவிர குற்ற வழக்குகள். இதனை அனைத்தையும் மக்கள் மன்றத்தில் திமுக அம்பலப்படுத்தியிருக்கிறது. தமிழக பாஜக ரெளடிகளின் கூடாரமாக மாறிவிட்டது. அண்ணாமலைக்கு அரசியல் தெரிகிறதோ இல்லையே, ஆடியோ, வீடியோ வைத்து அரசியல் செய்யவும், பின்னணியில் இருப்பவர்களை வைத்து அரசியல் செய்யவும் நன்றாகத் தெரியும். அண்ணாமலை வெளியிட்டது ஒரு போலியான பட்டியல், அதில் திமுக நிர்வாகியின் உறவினர், பிரமுகர் என்றுதான் பெரும்பாலான பெயர்கள் இடம்பெற்றிருக்கிறது. நாங்கள் பாஜகவில் மாநில பொறுப்பில், அணியின் தலைவர்களாக இருப்பவர்கள் குற்றப்பின்னணியில் இருக்கிறார்கள் என்று சொல்லிக்கொண்டிருக்கிறோம். திமுக குறித்துப் பேச அண்ணாமலைக்குத் துளியும் அருகதை கிடையாது” என்றார் விரிவாக.
“ரெளடிகளின் ராஜ்ஜியம் என்றால் அது திமுக”
திமுகவின் குற்றச்சாட்டு குறித்து பாஜக-வின் மாநிலத் துணைத் தலைவர் நாராயணன் திருப்பதியிடம் பேசினோம், “திமுக என்றால் ரெளடியிசம், ரெளடியிசம் என்றால் திமுக என்பது தமிழக மக்கள் அனைவருக்குமே நன்றாகத் தெரியும். எப்போதெல்லாம் திமுக ஆட்சிக்கு வருகிறதோ, அப்போதெல்லாம் தமிழகத்தின் சட்டம் ஒழுங்கு நிலை சந்தி சிரிக்கும். நாள்தோறும் கொலை, கொள்ளை, போதைப் பொருள் புழக்கம் அதிகரிப்பு என்பதை நாம் பார்த்துக்கொண்டேதான் இருக்கிறோம். இதுவே திமுக ஆட்சியின் சாதனை. அதேபோல, செல்வப்பெருந்தகை போன்றவர்கள் போகிற போக்கில் இத்தனை பேர் இருக்கிறார்கள். அத்தனை பேர் இருக்கிறார்கள் என்று ஒரு எண்ணிக்கையைச் சொல்லிவிட்டுச் செல்கிறார்கள்.
அவர்களைப் போல பொத்தாம் பொதுவாக இல்லாது, எங்கள் தலைவர் திமுக நிர்வாகியின் பெயர் ஊர் என்று அவர்களின் புகைப்படங்களுடன் ஒரு பட்டியலை வெளியிட்டார். காரணம் நாங்கள் சொல்லும் குற்றச்சாட்டில் உண்மை இருக்கிறது. பணியிலிருந்த பெண் காவலருகே பாலியல் தொல்லை கொடுத்தவர்கள் தானே திமுகவினர். கஞ்சா கடத்தல், கள்ளச்சாராய விற்பனை, மோசடி வழக்கு, கட்டப்பஞ்சாயத்து என்று திமுகவினர் செய்யாத குற்றமே கிடையாது என்கிற அளவிலேயே அந்த கட்சி உறுப்பினர்களின் செயல்பாடுகள் இருக்கும். கொலை வழக்கில் கடலூர் திமுக நாடாளுமன்ற உறுப்பினர் ரமேஷ் சரணடைந்ததை மறந்துவிட்டார்களா என்ன?. இப்படி எத்தனையோ சம்பவங்களை அடுக்கிக்கொண்டே போகலாம். ரெளடிகளின் ராஜ்ஜியம் என்றால் அது திமுக மட்டுமே” என்றார் காட்டமாக.!