எத்தியோப்பியாவில் கடும் நிலச்சரிவு.. பலி எண்ணிக்கை 157 ஆக உயர்வு

அடிஸ் அபாபா:

எத்தியோப்பியாவில் ஆண்டுதோறும் பருவமழை சீசனில் நிலச்சரிவுகள் ஏற்பட்டு பெரும் சேதத்தை ஏற்படுத்துகிறது. அவ்வகையில் இந்த ஆண்டும் கடந்த சில தினங்களாக கனமழை பெய்து வரும் நிலையில் ஆங்காங்கே நிலச்சரிவுகள் மற்றும் மண் சரிவுகள் ஏற்பட்டுள்ளன.

குறிப்பாக தெற்கு எத்தியோப்பியாவின் கென்சோ சச்சா கோஸ்டி மாவட்டத்தில் ஏற்பட்ட நிலச்சரிவுகளில் சிக்கி ஏராளமானோர் புதைந்தனர். அங்கு மீட்பு பணிகள் நடைபெற்று வருகின்றன. நேற்று மாலை வரை 55 பேர் இறந்ததாக உறுதி செய்யப்பட்டிருந்தது. அதன்பின்னரும், அடுத்தடுத்து உடல்கள் மீட்கப்பட்டன. இதனால் இன்று பிற்பகல் நிலவரப்படி பலி எண்ணிக்கை 157 ஆக உயர்ந்துள்ளளது. சிலர் மண் சரிவுகளின் இடிபாடுகளில் இருந்து உயிருடன் மீட்கப்பட்டுள்ளனர்.

நிலச்சரிவு ஏற்பட்ட பகுதிகளில் வசித்த பலரை காணவில்லை. எனவே, பலி எண்ணிக்கை அதிகரிக்கலாம் என அஞ்சப்படுகிறது.

நேற்று முன்தினம் நிலச்சரிவு ஏற்பட்ட செங்குத்தான மலைப்பகுதியில் மீட்பு பணி நடைபெற்றபோது அந்த இடத்தில் நேற்று மீண்டும் நிலச்சரிவு ஏற்பட்டுள்ளது. இதனால் உயிர்ப்பலி அதிகரித்துள்ளதாக உள்ளூர் அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.

தெற்கு எத்தியோப்பியாவில் ஏற்பட்ட இந்த பேரழிவு அப்பகுதி மக்களை நிலைகுலையச் செய்துள்ளது.

செய்திகளை எக்ஸ் தளத்தில் அறிந்துகொள்ள… https://x.com/dinathanthi


Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.