பிறந்தநாளை 86 மரக்கன்றுகள் நட்டு கொண்டாடிய பாமக நிறுவனர் ராமதாஸ்

விழுப்புரம்: பாமக நிறுவனர் மருத்துவர் ராமதாஸுக்கு இன்று (ஜூலை., 25) 86-வது பிறந்த நாள். இதையொட்டி 86 மரக் கன்றுகளை நட்டு அவர் தனது பிறந்த நாளைக் கொண்டாடினார்.

திண்டிவனம் அருகே கோனேரிகுப்பத்தில் இன்று (ஜூலை., 25) பாமக நிறுவனர் ராமதாஸின் 86-வது பிறந்தநாளையொட்டி நிறுவனர் நாள் விழா, மரக்கன்று நடும் விழா, பாவரங்கம் என முப்பெரும்விழா பாமக கவுரவத்தலைவர் ஜி.கே.மணி தலைமையில் நடைபெற்றது. முதலில், வன்னியர் சங்கத்தலைவர் மறைந்த காடுவெட்டி குரு சிலை அருகே 86 மரக்கன்றுகளை ராமதாஸ் நட்டுவைத்தார்.

அதைத் தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய அவர், “அறத்தில் சிறந்தது மரம் நடுவது. அந்தவகையில் இந்நாளில் மரக்கன்றுகள் நடப்பட்டுள்ளது. வருங்காலத்தில் இங்கு 5 ஆயிரம் மரக்கன்றுகள் நடப்படும். பசுமையான சூழலே நிலவ வேண்டும்” என்றார்.



இவ்விழாவில் சரஸ்வதி ராமதாஸ், புதா அருள்மொழி, ஸ்ரீகாந்தி பரசுராமன், கல்லூரி முதல்வர்கள் வீரமுத்து, அசோக்குமார், ஜெயபிரகாஷ், பரமகுரு, சமூக முன்னேற்ற சங்கத்தலைவர் சிவபிரகாசம், சிவகுமார் எம்எல்ஏ, பாமக மாவட்டச் செயலாளர் ஜெயராஜ், கவிஞர்கள் கண்மணி குணசேகரன், பச்சியப்பன், இயற்கை, செஞ்சி தமிழினியன், விநாயகமூர்த்தி உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.