புதுடெல்லி: பாஜக தலைவர் அமித் ஷா மீதான அவதூறு வழக்கில் ராகுல் காந்தி ஆஜராக கோரி சுல்தான்பூர் நீதிமன்றம் பலமுறை சம்மன் அனுப்பியது. ஆனால், இந்திய ஒற்றுமை நியாய யாத்திரையில் ராகுல் பங்கேற்றிருந்ததால் விசாரணைக்கு அவரால் ஆஜராக முடியவில்லை என்று நீதிமன்றத்தில் தெரிவிக்கப்பட்டது.
இந்த நிலையில் ஜூலை 2-ம்தேதி அவதூறு வழக்கு சுல்தான்பூர்நீதிமன்றத்தில் சிறப்பு நீதிபதி சுபம்வர்மா அமர்வு முன்பு மீண்டும் விசாரணைக்கு வந்தது. அப்போதும் ராகுல் ஆஜராகவில்லை. அவரது சார்பில் ஆஜரான வழக்கறிஞர் காஷி பிரசாத் சுக்லா,” எதிர்க்கட்சி தலைவர் என்ற முறையில் நாடாளுமன்றப் பணிகள் இருப்பதால் ராகுல் காந்தியால் ஆஜராக முடியவில்லை’’ என்று நீதிபதியிடம் தெரிவித்தார்.
இதைக் கேட்ட நீதிபதி கடும் கோபமடைந்து, தொடர்ந்து 12 முறைசம்மன் அனுப்பியும் ராகுல் காந்தியால் ஆஜராக முடியவில்லை. ஜூலை 26-ம் தேதி நடைபெறும் விசாரணையின் போது ராகுல் ஆஜராகவிட்டால் கடும் நடவடிக்கைக்கு உள்ளாக நேரிடும் என நீதிபதி கடுமையாக எச்சரித்தார். இதனைத் தொடர்ந்தே ராகுல் காந்தி நேற்று நீதிமன்றத்தில் நேரில் ஆஜரானார்.
வழக்கு விசாரணை குறித்து ராகுல் காந்தியின் வழக்கறிஞர் காஷி பிரசாத் சுக்லா கூறுகையில், “அமித் ஷா மீதான அவதூறு வழக்கில் நீதிமன்றத்தில் நேரில் ஆஜராகி ராகுல் காந்தி தனது வாக்குமூலத்தை பதிவு செய்தார். தன் மீதான குற்றச்சாட்டுகள் அனைத்தும் பொய்யானவை என்றும், அரசியல் காழ்ப்புணர்ச்சி காரணமாக இந்த வழக்கு பதிவுசெய்யப்பட்டுள்ளதாகவும் ராகுல் விளக்கம் அளித்துள்ளார்” என்றார். ராகுல் காந்தியின் வாக்குமூலத்தை பதிவு செய்து கொண்ட சிறப்பு நீதிமன்றம் வழக்கின் அடுத்த கட்டவிசாரணையை ஆகஸ்ட் 12-ம்தேதிக்கு ஒத்திவைத்து உத்தரவிட்டது. அன்றைய தினம் ராகுல் காந்தி நேரில் ஆஜராக வேண்டிய அவசியமில்லை என்று நீதிமன்ற வட்டாரங்கள் தெரிவித்துள்ளன. கடந்த 2018-ம் ஆண்டு பெங்களூரில் நடந்த செய்தியாளர்கள் சந்திப்பில் பங்கேற்ற ராகுல் காந்தி அமித் ஷா குறித்து கருத்து தெரிவிக்கையில், அவர் ஒரு கொலை வழக்கில் குற்றவாளி என்று குறிப்பிட்டார். ராகுலின் இந்த கருத்து அமித்ஷாவின் நற்பெயருக்குக் களங்கம் ஏற்படுத்துவதாகக் குற்றம்சாட்டி உள்ளூர் பாஜக தலைவரும், மாவட்ட கூட்டுறவுத் தலைவருமான விஜய் மிஸ்ரா இந்த அவதூறு வழக்கை தொடர்ந்தார்.
தொழிலாளியுடன் சந்திப்பு: அவதூறு வழக்கில் ஆஜராக உத்தர பிரதேசம் வந்த காங்கிரஸ் மூத்த தலைவர் ராகுல் காந்தி, சுல்தான்பூரில் செருப்புத் தைக்கும் தொழிலாளி ராம் சேத்தை சந்தித்துப் பேசுவதற்காக தனது காரை நடுவழியில் நிறுத்தினார். தான் மிகவும் கஷ்டப்படுவதாகவும் அதனால் உதவி செய்ய கோரியும் ரேபரேலி எம்.பி.யான ராகுல் காந்தியிடம் ராம் சேத் கோரிக்கை விடுத்திருந்தார். இந்தநிலையில்தான் ராகுல் காந்தி, ராம் சேத் குடும்பத்தினரை ராகுல் காந்தி நேற்று சந்தித்துப் பேசினார்.