Niti Aayog: பட்ஜெட் அதிருப்தி… நிதி ஆயோக் கூட்ட புறக்கணிப்பு; கொந்தளித்த ஸ்டாலின்! – பின்னணி என்ன?

நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தாக்கல் செய்த மத்திய பட்ஜெட்டில் தமிழ்நாடு உட்பட எதிர்க்கட்சிகள் ஆளும் மாநிலங்களுக்கு உரிய நிதி ஒதுக்கீடு செய்யப்படாத விவகாரம், விஸ்வரூபம் எடுத்திருக்கிறது. நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் பட்ஜெட் தாக்கல் செய்தபோது, பட்ஜெட்டில் பாரபட்சம் காட்டியிருப்பதாக குற்றம்சாட்டிய எதிர்க்கட்சி எம்.பி-க்கள், நாடாளுமன்றத்திலிருந்து வெளிநடப்பு செய்தனர்.

நிர்மலா சீதாராமன்

இந்தப் பரபரப்பான சூழலில், பிரதமர் நரேந்திர மோடி தலைமையில் நிதி ஆயோக் கூட்டம் ஜூலை 27-ம் தேதி (இன்று) நடைபெறவிருக்கிறது. இந்த நிலையில், மத்திய பட்ஜெட்டைக் கண்டித்து தமிழக முதல்வர் ஸ்டாலின் உட்பட ஏழு மாநில முதல்வர்கள், நிதி ஆயோக் கூட்டத்தைப் புறக்கணிக்க முடிவுசெய்திருக்கிறார்கள்.

‘நிதி ஆயோக் கூட்டத்தில் பங்கேற்கப் போவதில்லை’ என்று முதலில் அறிவித்தவர் தமிழக முதல்வர் ஸ்டாலின். பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்ட தினத்திலேயே அந்த அறிவிப்பை ஸ்டாலின் வெளியிட்டார். பின்னர், கர்நாடகா முதல்வர் சித்தராமையா, இமாச்சலப் பிரதேச முதல்வர் சுக்விந்தர் சிங் சுகு, தெலங்கானா முதல்வர் ரேவந்த் ரெட்டி ஆகியோரும் நிதி ஆயோக் கூட்டத்தைப் புறக்கணிக்கப் போவதாக அறிவித்தனர்.

சித்தராமையா

மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியைச் சேர்ந்த கேரள முதல்வர் பினராயி விஜயன், ஜே.எம்.எம். கட்சியைச் சேர்ந்த ஜார்க்கண்ட் முதல்வர் ஹேமந்த் சோரன், ஆம் ஆத்மி கட்சியைச் சேர்ந்த பஞ்சாப் முதல்வர் பகவந்த் மான் ஆகியோரும் நிதி ஆயோக் கூட்டத்தைப் புறக்கணிப்பது குறித்த அறிவிப்பை வெளியிட்டனர்.

‘இந்தியா’ கூட்டணியின் முக்கியத் தலைவர்களில் ஒருவராக விளங்கும் முதல்வர் ஸ்டாலின், மத்திய பட்ஜெட்டைக் கண்டித்து நிதி ஆயோக் கூட்டத்தில் பங்கேற்பதில்லை என்ற முடிவை மற்ற எதிர்க்கட்சிகளின் முதல்வர்களையும் எடுக்க வைப்பதற்கு காரணமாக இருந்திருக்கிறார்.

மம்தா பானர்ஜி

மத்திய பட்ஜெட்டில் தமிழ்நாட்டுக்கான அறிவிப்புகள் இல்லை என்பது தெரிந்தவுடன், சூட்டோடு சூடாக சென்னை அண்ணா அறிவாலயத்தில் செய்தியாளர்களைச் சந்தித்த முதல்வர் ஸ்டாலின், ‘மத்திய பட்ஜெட்டில் நடுத்தர மக்களுக்கு எந்தவொரு நன்மையும் இல்லை. பெயரவுக்கு வருமான வரி குறைக்கப்பட்டிருக்கிறது. தமிழ்நாட்டில் ஏற்பட்ட பேரிடருக்கு ரூ.276 கோடி மட்டுமே வழங்கிய மத்திய அரசு, பீகார் வெள்ளத் தடுப்பு பணிகளுக்கு ரூ.11,500 கோடி ஒதுக்கியிருப்பது, தமிழக மக்களுக்கு செய்யும் அநீதி’ என்று சாடினார்.

மேலும், சென்னை மெட்ரோ ரயில் திட்டத்துக்கு இந்த பட்ஜெட்டிலும் நிதி ஒதுக்கீடு செய்யவில்லை. கோவை, மதுரை மெட்ரோ ரயில் திட்டங்கள் பற்றி பட்ஜெட்டில் எந்த அறிவிப்பும் இல்லை.

ஹேமந்த் சோரன்

ஆனால், மத்தியில் பா.ஜ.க ஆட்சியமைப்பதற்கு முக்கியக் காரணமான சந்திரபாபு நாயுடு முதல்வராக இருக்கும் ஆந்திராவுக்கும், நிதிஷ் குமார் முதல்வராக இருக்கும் பீகாருக்கும் பல ஆயிரம் கோடிகளை பட்ஜெட்டில் அறிவித்திருக்கிறார் நிதியமைச்சர்.

இந்த நிலையில், தமிழ்நாட்டுக்கு பெரிய அறிவிப்புகளோ, நிதி ஒதுக்கீடோ இல்லை என்பதால், தமிழ்நாட்டின் எதிர்ப்பைப் பதிவு செய்வதற்காக நிதி ஆயோக் கூட்டத்தை முதல்வர் ஸ்டாலின் புறக்கணிக்கிறார் என்று தி.மு.க வட்டாரத்தில் கூறுகிறார்கள்.

ரேவந்த் ரெட்டி

மத்திய பட்ஜெட்டையும், பா.ஜ.க அரசையும் கடுமையாக விமர்சித்திருக்கும் மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி, நிதி ஆயோக் கூட்டத்தில் பங்கேற்கவிருக்கிறார். அந்தக் கூட்டத்தில் பங்கேற்று தன்னுடைய எதிர்ப்பைப் பதிவு செய்வது என்று அவர் முடிவுசெய்திருக்கிறார். மேலும், ‘நிதி ஆயோக் என்ற அமைப்பைக் கலைத்துவிட்டு, முன்பு இருந்த திட்ட கமிஷனை மீண்டும் கொண்டுவர வேண்டும்’ என்று மம்தா பானர்ஜி வலியுறுத்தியிருக்கிறார்.

இந்த விவகாரம் குறித்து மூத்த பத்திரிகையாளர் ப்ரியனிடம் பேசினோம். “இதற்கு முன்பு இருந்த திட்ட கமிஷன் நிதி ஒதுக்கீடு செய்யும் அதிகாரங்களை வைத்திருந்தது. ஆனால், வெறும் கொள்கை வகுக்கும் அமைப்பாகத்தான் நிதி ஆயோக் இருக்கிறது. மத்திய பட்ஜெட்டில் தமிழ்நாட்டுக்கு நிதி ஒதுக்கீடு செய்யாத நிலையில், நிதி ஆயோக் கூட்டத்தில் பங்கேற்பதால் எந்தப் பயனும் இருக்கப்போவதில்லை. ஜெயலலிதா முதல்வராக இருந்தபோது, நிதி ஆயோக் கூட்டத்தை அவர் புறக்கணித்திருக்கிறார். 2021-ல் எட்டு முதல்வர்கள் நிதி ஆயோக் கூட்டத்தைப் புறக்கணித்திருக்கிறார்கள்.

நிதி ஒதுக்கும் அதிகாரத்தை மத்திய அரசே வைத்துக்கொண்டிருக்கிறது. அப்படியிருக்கும்போது, நிதி ஆயோக் கூட்டத்தில் கலந்துகொண்டு என்ன பயன்? பிரதமர் தலைமையில் நடைபெறும் கூட்டத்தைப் புறக்கணிப்பதன் மூலமாக, தங்கள் மாநிலங்களின் எதிர்ப்பையும், கண்டனத்தையும் தமிழக முதல்வர் ஸ்டாலின் உள்ளிட்ட முதல்வர்கள் வெளிப்படுத்தவிருக்கிறார்கள்.

ப்ரியன்

ஆந்திராவுக்கும், பீகாருக்கும் கடந்த பத்தாண்டுகளில் இல்லாத அக்கறை இப்போது ஏன் மத்திய பா.ஜ.க அரசுக்கு வந்திருக்கிறது? இது அரசியல் தானே. இந்த பட்ஜெட்டில் தமிழ்நாட்டுக்கு புதிய திட்டங்களையும் கொண்டுவரவில்லை. இரண்டாம் கட்ட மெட்ரோ திட்டத்துக்கும் நிதி தரவில்லை. எனவே, மாநில அரசுக்கு எதிர்ப்பைத் தெரிவிப்பதைத் தவிர வேறு என்ன வழி இருக்கிறது? எனவே, நிதி ஆயோக் கூட்டத்தைப் புறக்கணிப்பதன் மூலமாக, மத்திய அரசின் மாற்றான்தாய் மனப்பான்மையை முதல்வர் ஸ்டாலின் கண்டிக்கிறார் என்றுதான் பார்க்க வேண்டும். இது சரியான முடிவுதான்” என்கிறார் ப்ரியன்.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.