மத்திய பட்ஜெட் கடந்த செவ்வாயன்று தாக்கல்செய்யப்பட்டதைத் தொடர்ந்து ஜூலை 27-ம் தேதி அனைத்து மாநில முதல்வர்களும் கலந்துகொள்ளும் வகையில் டெல்லியில் நிதி ஆயோக் கூட்டம் நடத்த திட்டமிடப்பட்டது. ஆனால், மத்திய பட்ஜெட்டில் பா.ஜ.க மற்றும் அதன் கூட்டணி கட்சிகள் ஆளும் மாநிலங்களுக்கு மட்டும் நிதி ஒதுக்கி பாரபட்சம் காட்டப்பட்டிருப்பதாக, இந்தியா கூட்டணியைச் சேர்ந்த முதல்வர்கள் ஸ்டாலின், சித்தராமையா, ரேவந்த் ரெட்டி, பகவந்த் மான், சுக்விந்தர் சிங் ஆகியோர் நிதி ஆயோக் கூட்டத்தைப் புறக்கணிப்பதாக அறிவித்தனர்.
அதேசமயம், இந்தியா கூட்டணியில் அங்கம் வகிக்கும் மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி, பாஜக அரசின் பாரபட்சமான பட்ஜெட்டை எதிர்க்கவும், தங்களின் குரலைப் பதிவுசெய்யவும் நிதி ஆயோக் கூட்டத்தில் கலந்துகொள்ளப் போவதாக நேற்று டெல்லி புறப்பட்டார். இன்று காலையில் டெல்லியில் நிதி ஆயோக் கூட்டமும் தொடங்கியது.
இந்த நிலையில், கூட்டத்தில் பேச அனுமதி வழங்கப்படாததால் கூட்டத்திலிருந்து மம்தா வெளிநடப்பு செய்திருக்கிறார். கூட்டத்திலிருந்து வெளியேறிய பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய மம்தா, “கூட்டத்தில் நான் பேசிக்கொண்டிருந்போதே மைக்கை அணைத்தனர். ஐந்து நிமிடம் கூட பேச அனுமதிக்கவில்லை.
எதற்காக என்னை நிறுத்துகிறீர்கள் பாரபட்சம் காட்டுகிறீர்கள் என்று கேட்டேன். மேலும், நான் மட்டும்தான் எதிர்க்கட்சிகளிலிருந்து வந்திருக்கிறேன், என்னையும் பேசவிடாமல் தடுக்கிறீர்கள் என்றேன். இது வங்காளத்தை மட்டுமல்ல, அனைத்து பிராந்திய கட்சிகளையும் அவமதிக்கும் செயல்” என்று கூறினார்.