விருதுநகர் அருகே வீடு கட்டுவதற்கு பிளான் அப்ரூவல் வழங்க லஞ்சம் வாங்கிய புகாரில், ஊராட்சி மன்றத் தலைவர் லஞ்ச ஒழிப்புத்துறை போலீஸாரால் கைதுசெய்யப்பட்டார். இது குறித்து போலீஸிடம் விசாரித்தோம். அப்போது நம்மிடம் பேசியவர்கள், “விருதுநகர்-கோவில்பட்டி தேசிய நெடுஞ்சாலையில் ஆர்.ஆர்.நகர் அருகே உள்ள ஊர், துலுக்கப்பட்டி. இங்கு, தே.மு.தி.க-வைச் சேர்ந்த நாகராஜன் (வயது 55) என்பவர் ஊராட்சி மன்றத் தலைவராக உள்ளார். இந்த நிலையில், விருதுநகர் கத்தாளம்பட்டியைச் சேர்ந்த 108 ஆம்புலன்ஸ் ஓட்டுநரான மணிமாறன், துலுக்கப்பட்டியில் புதிதாக வீடு கட்டுவதற்கு திட்டமிட்டுள்ளார்.
இதற்கான பிளான் அப்ரூவல் சான்றிதழ் கேட்டு ஆன்லைனில் விண்ணப்பித்துள்ளார். தொடர்ந்து, விண்ணப்பநிலை குறித்து விசாரிப்பதற்காக துலுக்கப்பட்டி ஊராட்சி மன்ற அலுவலகத்துக்கு நேரில் சென்ற அவர், ஊராட்சித் தலைவர் நாகராஜனைச் சந்தித்துப் பேசி உள்ளார். இந்த நிலையில், வாய்ப்பைப் பயன்படுத்தி லஞ்சம் வாங்க நினைத்த நாகராஜன், பிளான் அப்ரூவல் சான்றிதழ் வழங்க ரூ.15,000 லஞ்சமாக தரவேண்டும் என மணிமாறனிடம் கேட்டுள்ளார். ஆனால், லஞ்சம் கொடுக்க விரும்பாத மணிமாறன், ஊராட்சி மன்றத் தலைவர் லஞ்சம் கேட்டது குறித்து விருதுநகர் லஞ்ச ஒழிப்பு போலீஸில் புகார் அளித்தார். அதன்பேரில் விசாரணை நடத்திய அதிகாரிகள், ரசாயனம் தடவிய ரூபாய் நோட்டுகளை கொடுக்கும்படி மணிமாறனுக்கு ஆலோசனை கூறி அனுப்பி வைத்தனர்.
அதன்படி, ரசாயனம் தடவிய ரூபாய் நோட்டுகளில் 5 ஆயிரத்தை எடுத்துக்கொண்டு துலுக்கப்பட்டி ஊராட்சித் தலைவர் நாகராஜனை நேரில் சந்தித்த மணிமாறன் லஞ்சப்பணத்தை வழங்கியபோது, அங்கு மறைந்திருந்த லஞ்ச ஒழிப்புத்துறை ஏ.டி.எஸ்.பி ராமச்சந்திரன், ஆய்வாளர்கள் பூமிநாதன், சால்வன்துரை ஆகியோர் தலைமையிலான போலீஸார், நாகராஜனை கையும் களவும் கைதுசெய்தனர்” என்றனர்.