கோவை: “மின்சாரத் துறையில் சரியான நிர்வாகம் இல்லாததும், ஊழலும்தான் மின் கட்டண உயர்வுக்கு காரணம்” என பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் தெரிவித்துள்ளார்.
சென்னையில் இருந்து விமானம் மூலம் கோவை வந்த அவர், விமான நிலையத்தில் செய்தியாளர்களிடம் கூறியது: “கடந்த 5 ஆண்டுகளில் கொங்கு மண்டலத்தில் 50,000-க்கும் மேற்பட்ட குறு,சிறு தொழில் நிறுவனங்கள் மூடப்பட்டுள்ளன. அதற்கு மின் கட்டண உயர்வு முக்கிய காரணமாகும். தமிழக அரசு கடந்த 23 மாதங்களில் மூன்று முறை மின் கட்டணத்தை உயர்த்தியுள்ளது. நடப்பு மாதம் 4.8 விழுக்காடு மின் கட்டணம் உயர்த்தப்பட்டுள்ளது. முதல்வர் மின் கட்டண உயர்வை திரும்பப் பெற வேண்டும். கட்டணத்தை குறைக்க வேண்டும். திமுக தேர்தல் வாக்குறுதியின்படி, ஆட்சிக்கு வந்ததும் மாதம்தோறும் மின் கட்டண கணக்கெடுப்பு என தெரிவித்தனர். அந்த வாக்குறுதியை நிறைவேற்ற வேண்டும்.
காவிரியில் நீர் வந்து கொண்டிருக்கிறது. மேட்டூர் அணை நிரம்பி வருகிறது. இப்போது விநாடிக்கு ஆயிரம் கன அடி நீர் வந்து கொண்டிருக்கிறது. இத்தனை ஆண்டு காலம் ஆட்சி செய்தும் இந்த நீரை எப்படி பயன்படுத்த வேண்டும் என இவர்கள் தெரிந்து கொள்ளவில்லை. பல்வேறு திட்டங்கள் நிலுவையில் உள்ளன. அதற்கு முக்கியத்துவம் கொடுப்பதில்லை. இப்போது குறுவை சாகுபடி சரியான முறையில் நடைபெறவில்லை. இதற்கு காரணம் தண்ணீர் இல்லாததாகும். ஆண்டுதோறும் மேட்டூர் அணை ஜூன் 12-ம் தேதி திறக்கப்படும். இந்த ஆண்டு திறக்கப்படவில்லை. இப்போது தண்ணீர் வந்துள்ளது. சம்பாவுக்காவது தயார் நிலையில் இருக்க வேண்டும்.
மின் கட்டண உயர்வுக்கு காரணம் மின்சாரத் துறையில் சரியான நிர்வாகம் இல்லாததும், ஊழலும் தான் காரணம். தமிழ்நாட்டின் மின் தேவை உச்சத்தில் கோடைகாலத்தில் 20 ஆயிரம் மெகா வாட்டாக இருக்கும். அதில் 2000 மெகாவாட் தான் தமிழக அரசு தயாரிக்கிறது. மீதி உள்ள 15 ஆயிரம் மெகாவாட்டில் கிட்டத்தட்ட நான்காயிரம் மெகாவாட் மத்திய அரசிடம் பெறுகிறது. 11,000 மெகாவாட் தனியாரிடம் பெறுகிறது. வேண்டுமென்று தமிழக அரசு புதிய மின் திட்டங்களை தொடங்க தயங்குகிறது. இந்த அரசுக்கு நிர்வாகத் திறமை இல்லை.
தமிழ்நாட்டில் கஞ்சா அனைத்து இடங்களிலும் கிடைக்கிறது. தமிழக அரசு சாதிவாரி கணக்கெடுப்பு நடத்த உடனடியாக அறிவிக்க வேண்டும். இதுகுறித்து தமிழக முதல்வர் மற்றும் அமைச்சர் இடம் கூறியுள்ளோம். ஆனால் அவர்கள் அதிகாரம் இல்லை என கூறுகின்றனர். அனைத்து அதிகாரமும் தமிழக அரசுக்கு இருக்கிறது. அரசியல் காரணமாக இந்த விவகாரத்தில் முதல்வர் தயங்குகிறார்” என்றார்.