`கோக் ஸ்டுடியோ தமிழ்’ சீசனின் அடுத்த பாடலாக உருவாகியுள்ளது ‘நம்மாலே’ பாடல். கிரிஷ் ஜி-யின் இசையில், அசல் கோலாரின் டைனமிக் ராப் மற்றும் யான்சன் உருவாக்கிய தனித்துவமான பீட்ஸைக் கொண்டு நட்பைக் கொண்டாடும் வகையில் உருவாகியுள்ளது இந்தப் பாடல்.
நண்பர்களின் விளையாட்டுத்தனமான நகைச்சுவை மற்றும் அன்பின் ஆழமான பிணைப்பைப் பற்றிய இப்பாடல் குறித்து கிரிஷ் ஜி கூறுகையில், “கோக் ஸ்டுடியோ தமிழ் சீசன் 2 தென்னிந்தியாவில் திரைப்படம் அல்லாத இசையின் உணர்வை மறுவரையறை செய்து, அசல் தமிழ் சுயாதீன இசையை உலக அரங்கில் பிரகாசிக்க வைத்திருக்கிறது. ‘ஏலே மக்கா’ மற்றும் ‘நம்மாலே’ போன்ற பாடல்கள் நமது கலாசார வேர்களை உள்ளடக்கியவை.
அந்த வகையில் ‘நம்மாலே’ புதிய இசை அடுக்குகளைக் கொண்டுள்ளது. நட்பு, இந்தத் தலைமுறையில், ஒரு வேடிக்கையான, கிண்டலான போக்கைக் கொண்டுள்ளது. இந்த அம்சத்தைப் பாடலின் மூலம் முன்னிலைப்படுத்த விரும்பினோம்” என்றார்.
பாடகர் அசல் கோலார் பேசுகையில், “இந்த சீசன் திறமையான கலைஞர்களின் அற்புதமான கலவையையும், அற்புதமான அனுபவத்தையும் தருகிறது! நட்பைக் மையமாகக் கொண்ட இப்பாடலை எனது நண்பர்கள் கிரீஷ் மற்றும் யாஞ்சன் ஆகியோருடன் சேர்ந்து உருவாக்கியது ஓர் அற்புதமான அனுபவம்” என்று பேசியிருக்கிறார்.
யாஞ்சன் ப்ரொட்யூஸ்ட் கூறுகையில், “இந்த சீசனில் நான் மிகவும் உற்சாகமாக இருக்கிறேன். இது உலகம் முழுவதிலுமிருக்கும் இசையமைப்பாளர்கள், தயாரிப்பாளர்கள் மற்றும் கலைஞர்களை ஒன்றிணைக்கிறது. இந்தப் பாடலில் குத்து, மிருதங்கம் மற்றும் ஹிப்-ஹாப் ஆகியவற்றின் கலவை ரசிகர்களுக்கு நல்ல இசை விருந்தாக இருக்கும்” என்று பேசியிருக்கிறார்.