பழமையான பொருட்கள் கடத்தப்படுவதைத் தடுக்க இந்தியா – அமெரிக்கா இடையே கலாச்சார சொத்து ஒப்பந்தம்

புதுடெல்லி: சுதந்திரத்துக்கு முன்னதாகவும், அதற்குப் பின்பும் இந்தியாவில் இருந்து பல்வேறு விலைமதிக்க முடியாத பழங்காலப் பொருட்கள்,கலைச் சிற்பங்கள் வெளிநாடுகளுக்குக் கடத்திச் செல்லப்பட்டன. இந்த அரிய பொக்கிஷங்கள் உலகம் முழுவதிலும் உள்ள பல்வேறு நாடுகளின் அருங்காட்சியங்கள், நிறுவனங்கள், தனிநபர்களின் பாதுகாப்பில் உள்ளன.

1970-ல் நடந்த யுனெஸ்கோ மாநாட்டில் செய்துகொள்ளப்பட்ட ஒப்பந்தத்தின்படி, ஒரு நாட்டிலிருந்து பழங்கால பொருட்கள், பொக்கிஷங்களை கடத்திச் செல்வது தடுக்கப்பட்டு வருகிறது.

இந்நிலையில் 46-வது யுனெஸ்கோ உலக பாரம்பரிய கமிட்டி கூட்டம் இந்தியாவில் நடைபெற்று வருகிறது. இந்தக் கூட்டத்தில் நேற்று முன்தினம், பழமையான பொருட்களை மீட்டெடுப்பது தொடர்பாக இந்தியா, அமெரிக்கா இடையே கலாச்சார சொத்து ஒப்பந்தம் (சிபிஏ) கையெழுத்தானது.

இந்தியாவிலிருந்து பழமையான பொருட்கள், கலைச் சிற்பங்கள், கலைப் பொக்கிஷங்களை அமெரிக்காவுக்குக் கடத்திச் செல்வதைத் தடுக்க இந்த ஒப்பந்தம் வழிவகை செய்கிறது. மத்திய கலாச்சாரம், சுற்றுலாத்துறை அமைச்சர் கஜேந்திர சிங் ஷெகாவத் முன்னிலையில் இந்த ஒப்பந்தத்தில் மத்திய அரசின் கலாச்சாரத்துறை செயலர் கோவிந்த் மோகன், இந்தியாவுக்கான அமெரிக்க தூதர் எரிக் கார்செட்டி ஆகியோர் கையெழுத்திட்டனர்.



கலாச்சாரப் பொருட்கள், பொக்கிஷங்கள், சொத்துகளை ஒரு நாட்டிலிருந்து மற்றொரு நாட்டுக்கு சட்டவிரோதமாக கடத்துவது நீண்ட நாட்களாக உள்ளபிரச்சினையாகப் பார்க்கப்படுகிறது. இந்நிலையில் இந்த ஒப்பந்தம் கையெழுத்தானதன் மூலம்இதுபோன்ற கலைப் பொக்கிஷங்கள் இந்தியாவிலிருந்து வெளிநாடுகளுக்குக் கடத்துவது தடுக்கப்படும்.

இதுகுறித்து மத்திய அமைச்சர் கஜேந்திர சிங் ஷெகாவத் கூறும்போது, “இந்த சிபிஏ ஒப்பந்தமானது, நமது நாட்டின் வளமான மற்றும் பன்முகத்தன்மை வாய்ந்த கலாச்சார பாரம்பரியத்தையும் நமதுமகத்தான வரலாற்றின் விலைமதிப்பற்ற கலைப்பொருட்களையும் பாதுகாப்பதற்கான மற்றொரு நடவடிக்கையாகும். கலாச்சார சொத்துக்களை சட்டவிரோதமாக கடத்துவதை தடுக்கவும், பழங்கால பொருட்களை அவற்றின் பூர்வீகஇடத்துக்குப் திரும்பப் பெறுவதற்கும் எடுக்கப்பட்ட நடவடிக் கைதான் இது” என்றார்.

இந்தியாவிலிருந்து கடத்திச் செல்லப்பட்ட பொக்கிஷங்களில் 358 கலைப்பொருட்கள் திரும்ப இந்தியாவுக்குக் கொண்டு வரப்பட்டுள்ளன. இதில் 345 கலைப்பொருட்கள் 2014-க்குப் பிறகு இந்தியாவுக்கு கொண்டு வரப்பட்டுள்ளன. இவற்றில் பெரும்பாலானவை அமெரிக்காவிலிருந்து மீட்டு இந்தியாவுக்கு எடுத்து வரப்பட்டுள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.