மத்தியப் பிரதேசத்தின் ரேவா மாவட்டத்தில், ஒரு வீட்டில் ஒன்பது வயது சிறுமி சடலமாக மீட்கப்பட்ட சம்பவத்தின் விசாரணையில் திடுக்கிடும் வகையில், சிறுமியின் 13 வயது சகோதரன் அவரை பாலியல் வன்கொடுமை செய்து, கொன்றதும், அவரின் தாயார் அதை மறைத்ததும் தெரியவந்திருக்கிறது.
இந்த சம்பவமானது ஜூலை 24-ம் தேதி இரவு நடைபெற்றிருக்கிறது. இதில், சிறுமி உறங்கிக்கொண்டிருந்தபோது அவரின் அருகில் படுத்துக்கொண்டு செல்போனில் ஆபாச படம் பார்த்த சகோதரன், சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்திருக்கிறார்.
இதை தந்தையிடம் தெரிவிப்பதாக சிறுமி கூறியபோது, சகோதரன் சிறுமியை கழுத்தை நெரித்துக் கொன்றார். பின்னர், சகோதரன் தனது தாயிடம் இதனைத் தெரிவிக்க அவரும், மற்ற இரண்டு சகோதரிகளும் அப்படியே மூடி மறைத்தனர். பின்னர், இதில் சுமார் 50 பேரிடம் விசாரணையில் ஈடுபட்ட போலீஸார், சிறுமியின் சகோதரன், 17 மற்றும் 18 வயது இரண்டு சகோதரிகள், தாய் ஆகியோர்மீது சந்தேகத்தின்பேரில் தீவிர விசாரணை மேற்கொண்டனர். இறுதியில் அவர்கள் தங்களின் குற்றத்தை போலீஸாரிடம் ஒப்புக்கொண்டனர்.
இது குறித்த விவரங்களைத் தெளிவாக எடுத்துரைத்த போலீஸ் சூப்பிரண்டு அதிகாரி விவேக் சிங், “ஏப்ரல் 24 அன்று ஜாவா காவல் நிலைய எல்லைக்கு உட்பட்ட பகுதியில், ஒரு வீட்டின் முற்றத்தில் ஒன்பது வயது சிறுமியின் சடலம் மீட்கப்பட்ட வழக்கில் போலீஸார் வழக்குப் பதிவு செய்து விசாரணையைத் தொடங்கினர். குடும்ப உறுப்பினர்களிடம் தீவிர விசாரணை நடத்தப்பட்டதில், சிறுமியின் 13 வயது சகோதரர் இரவில் அவர் அருகில் தூங்கியது தெரியவந்தது. அதோடு, அவர் செல்போனில் ஆபாச வீடியோக்களைப் பார்த்துவிட்டு தனது சகோதரியை பாலியல் வன்கொடுமை செய்தது கண்டுபிடிக்கப்பட்டது.
அப்போது, சிறுமி தனது தந்தையிடம் கூறப்போவதாகத் தெரிவித்தபோது, சகோதரன் அவர் சுயநினைவை இழக்கும் வரை கழுத்தை நெரித்துவிட்டு தனது தாயை எழுப்பியிருக்கிறார். பிறகு, சிறுமி உயிரோடிருப்பதைப் பார்த்த சகோதரன் மீண்டும் கழுத்தை நெரித்துக் கொன்றுவிட்டார். இதற்கிடையில் விழித்துக்கொண்ட சகோதரிகள், இதனை மூடி மறைக்கும் எண்ணத்தில் போலீஸுகு தெரிவதற்குள் தாங்கள் உறங்கும் இடத்தை மாற்றினர்.
முதலில், விஷப் பூச்சி கடித்ததால் சிறுமி இறந்ததாக போலீஸாரிடம் குடும்பத்தினர் கூறியிருக்கின்றனர். இருப்பினும், பிரேத பரிசோதனை அறிக்கையில் பாலியல் வன்கொடுமை மற்றும் கொலை தொடர்பான ஆதாரங்கள் கண்டுபிடிக்கப்பட்டன. பிறகு இதில், சிறப்பு விசாரணைக் குழு அமைக்கப்பட்டது. மொத்தமாக 50 பேரிடம் விசாரணை நடத்தியதில், குடும்பத்தினர் வாக்குமூலத்தில் மாறுதல்கள் தெரியவந்தது. அதையடுத்து, சந்தேகத்தின் அடிப்படையில் அவர்களிடம் தீவிர விசாரணை நடத்தப்பட்டபோது, அவர்கள் குற்றத்தை ஒப்புக்கொண்டனர்” என்று கூறினார்.