விஷாலைத் தொடர்ந்து தனுஷுக்கும் கட்டுப்பாடு?! – தயாரிப்பாளர்கள் சங்கத்தின் கூட்டு நடவடிக்கை

சமீபத்தில் தமிழ் திரைப்பட தயாரிப்பாளர்கள் சங்கத்தின் செயற்குழுவின் பரிந்துரையின் படி நடிகர் விஷாலுக்கு சில கட்டுப்பாடுகள் விதித்தது. விஷாலை வைத்துத் தயாரிக்கும் புதிய திரைப்படங்களின் தயாரிப்பாளர்கள் மற்றும் தொழில்நுட்ப கலைஞர்கள், தமிழ் திரைப்பட தயாரிப்பாளர்கள் சங்கத்தை கலந்தாலோசித்து அதன் பின்னர் தங்களது பணிகளைத் துவங்க வேண்டும் என்று தெரிவித்திருந்தது.

இதற்கு விஷால் தனது சமூக வலைதளத்தில் பதிலும் சொல்லியிருந்தார். இந்நிலையில் இப்போது தனுஷிற்கும் கட்டுபாடுகளை விதித்துள்ளனர்.

தமிழ் திரைப்பட தயாரிப்பாளர்கள் சங்கத்தின் தலைமையில் தமிழ் திரைப்பட நடப்பு தயாரிப்பாளர்கள் சங்க நிர்வாகிகள், தமிழ்நாடு திரையரங்க உரிமையாளர் சங்க நிர்வாகிகள், தமிழ்நாடு திரையரங்க மல்டிபிளக்ஸ் உரிமையாளர் சங்க நிர்வாகிகள், தமிழ்நாடு திரைப்பட விநியோகஸ்தர்கள் சங்க நிர்வாகிகள் எனப் பல சங்கத்தினர் பங்கேற்ற கூட்டம் சென்னையில் இன்று நடைபெற்றது. பேச்சுவார்த்தையின் முடிவில் சில தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. அதில் தெரிவித்திருப்பதாவாது..

அறிக்கையில்..

* இன்றைய காலகட்டத்தில் ஒரு சில நடிகர் மற்றும் தொழில்நுட்ப கலைஞர்கள் ஏற்கனவே அட்வான்ஸ் பெற்ற தயாரிப்பு நிறுவனத்தின் திரைப்படங்களுக்கு பணி புரியாமல் புதியதாக வரும் திரைப்பட நிறுவனங்களுக்கு சென்று விடுகிறார்கள் இதனால் ஏற்கனவே அட்வான்ஸ் கொடுத்துள்ள தயாரிப்பாளர்கள் பெரும் பொருளாதார இழப்பை சந்திக்கும் சூழ்நிலைக்கு தள்ளப்படுகிறார்கள். ஆகையால், இனிவரும் காலங்களில் எந்த ஒரு நடிகர், நடிகை மற்றும் தொழில்நுட்ப கலைஞர்கள் தயாரிப்பாளர்களிடம் அட்வான்ஸ் பெற்று இருந்தால் அந்த திரைப்படத்தை முடித்துக் கொடுத்துவிட்டு, அடுத்த திரைப்படங்களின் பணிகளுக்கு செல்ல வேண்டும் என்று கூட்டத்தில் பேசி முடிக்கப்பட்டது. நடிகர் தனுஷ் அவர்கள் பல தயாரிப்பாளர்களிடம் முன்பணம் பெற்றிருக்கும் சூழ்நிலையில் இனிவரும் காலங்களில் தயாரிப்பாளர்கள், நடிகர் தனுஷ் நடிக்கும் புதிய திரைப்படங்களின் பணிகளை துவங்குவதற்கு முன்பாக தமிழ் திரைப்பட தயாரிப்பாளர் சங்கத்தை கலந்தாலோசிக்க வேண்டும் என்று கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.

அறிக்கையில்..

* முன்னணி நட்சத்திரங்கள் நடிக்கும் திரைப்படங்கள் திரையரங்குகளில் வெளியாகி 8 வாரங்களுக்கு பிறகு OTT தளங்களில் வெளியிட வேண்டும்.

* இன்றைய தேதியில் தயாரிக்கப்பட்ட பல திரைப்படங்கள் திரையரங்குகள் கிடைக்காமல் தேங்கி நிற்கிறது. அந்த நிலையை மாற்ற தமிழ் திரைப்பட தயாரிப்பாளர் சங்கத்தின் சார்பில் புதிய விதிமுறைகள் உருவாக்கப்பட உள்ளது. அந்த புதிய விதிமுறைகள் நடைமுறைக்கு வந்த பிறகு படப்பிடிப்புகள் ஆரம்பிக்கலாம் என்பதால் வருகிற 16.8.2024 முதல் புதிய திரைப்படங்கள் துவங்குவதை தற்காலிகமாக நிறுத்தி வைப்பது என்று கூட்டத்தில் ஏக மனதாக தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது. தற்போது படபடப்பில் உள்ள திரைப்படங்களின் விவரங்களை தமிழ் திரைப்பட தயாரிப்பாளர் சங்கத்திற்கு முறையாக கடிதம் மூலம் தெரிவிக்க வேண்டும் என்று பேசி முடிவெடுக்கப்பட்டது. ஆகையால் தற்போது நடைபெற்று வரும் படபடப்புகளை வருகிற அக்டோபர் 30-ம் தேதிக்குள் முடித்துக் கொள்ளுமாறு தயாரிப்பாளர்களை கேட்டுக்கொள்கிறோம்.

விஷால்

* இனி வரும் காலங்களில் திரைத்துறை சம்பந்தமாக வரும் பிரச்சனைகளுக்கு தீர்வு காணும் வகையில் தயாரிப்பாளர்கள், விநியோகஸ்தர்கள், திரையரங்க உரிமையாளர்கள், உள்ளடக்கிய கூட்டுக் குழு அமைக்கப்பட்டுள்ளது.” என தெரிவித்துள்ளனர்.

இதற்கு தனுஷ் தரப்பில் என்ன பதில் வரவிருக்கிறது? படப்பிடிப்புகளுக்கான கட்டுப்பாடுகளை மற்ற தயாரிப்பாளர்கள் பின்பற்றுவார்களா? என்பதை எல்லாம் பொறுத்திருந்து பார்க்கலாம் என்கிறார்கள்.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.