வெனிசூலா அதிபர் தேர்தலில் நிகோலஸ் மதுரோ வெற்றி.. எதிர்க்கட்சிகள் ஏற்க மறுப்பு

காரகஸ்:

வெனிசூலா நாட்டில் நேற்று அதிபர் தேர்தல் நடைபெற்றது. இந்த தேர்தலில் தற்போதைய அதிபர் நிகோலஸ் மதுரோ மீண்டும் போட்டியிட்டார். எதிர்க்கட்சிகள் கூட்டணி வேட்பாளர் எட்மண்டோ கான்சலஸ் மற்றும் 8 பேர் களத்தில் இருந்தனர். எனினும் நிகோலஸ் மதுரோவுக்கும், எட்மண்டோ கான்சலசுக்கும் இடையே நேரடி போட்டி நிலவியது.

சமூகப் பொருளாதார மற்றும் அரசியல் நெருக்கடி, வாய்ப்பு தேடி நாட்டை விட்டு வெளியேறும் மக்கள், அரசுக்கு எதிரான அதிருப்தி அலை ஆகிய அம்சங்கள் தேர்தல் பிரசாரத்தில் எதிரொலித்தது. வெளிநாடுகளில் வசிக்கும் வெனிசூலா மக்கள் தாயகம் திரும்பவும் அவர்களது குடும்பங்களுடன் மீண்டும் ஒன்றிணைக்கவும் போதுமான வேலைகள் உருவாக்கப்படும் என இரண்டு வேட்பாளர்களும் வாக்குறுதி அளித்துள்ளனர்.

இந்த பரபரப்பான சூழ்நிலைக்கு மத்தியில் நடைபெற்ற இந்த தேர்தலில் பதிவான வாக்குகள் உடனடியாக எண்ணப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்பட்டன. இதில் நிகோலஸ் மதுரோ 51.2 சதவீத வாக்குகள் பெற்றார். எட்மண்டோ கான்சலஸ் 44.2 சதவீத வாக்குகள் பெற்றார். இதனால் மதுரோ வெற்றி பெற்றதாக தேர்தல் ஆணையம் அறிவித்தது. இந்த வெற்றியை மதுரோவின் ஆதரவாளர்கள் கொண்டாடி வருகின்றனர்.

ஆனால், மதுரோவின் வெற்றியை எதிர்க்கட்சிகளும், சில அண்டை நாடுகளும் ஏற்கவில்லை.

மதுரோவின் விசுவாசமான தேர்தல் ஆணையம் வெளியிட்டுள்ள இந்த புள்ளிவிவரங்களை எதிர்க்கட்சி கூட்டணி நிராகரித்துள்ளது. தாங்கள் 70 சதவீத வாக்குகளைப் பெற்றதாக திட்டவட்டமாக கூறி உள்ளது.

“நாங்கள் தான் வெற்றி பெற்றோம், வெனிசுலாவின் புதிய அதிபராக எட்மண்டோ கான்சலஸ் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார்” என எதிர்க்கட்சித் தலைவர் மரியா கொரினா மச்சாடோ, செய்தியாளர்களிடம் கூறினார்.

இந்த தேர்தல் முடிவு மோசடியானது என கோஸ்டா ரிகா அதிபர் ரோட்ரிகோ சாவ்ஸ் விமர்சனம் செய்துள்ளார். இந்த தேர்தல் முடிவை நம்ப முடியவில்லை என சிலி அதிபர் தெரிவித்தார். தேர்தல் முடிவுகள் குறித்து ஆலோசனை நடத்துவதற்காக தூதரை திரும்ப அழைத்ததாக பெரு நாடு கூறியிருக்கிறது.

இந்த தேர்தல் முடிவு வெனிசூலா வாக்காளர்களின் விருப்பத்தை பிரதிபலிக்கவில்லை என்று அமெரிக்க வெளியுறவு மந்திரி ஆண்டனி பிளிங்கன் தெரிவித்தார்.

செய்திகளை எக்ஸ் தளத்தில் அறிந்துகொள்ள… https://x.com/dinathanthi


Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.