“ராகுல் காந்தியிடம் வெளிப்படுவது ஆதங்கமே…” – வானதி சீனிவாசன் கருத்து

கோவை: “மிகவும் பிற்படுத்தப்பட்ட குடும்பத்தில் இருந்து வந்த நரேந்திர மோடி மூன்றாவது முறையாக பிரதமரானதை ஐந்தாம் தலைமுறை வாரிசான ராகுல் காந்தியால் ஜீரணிக்க முடியவில்லை” என பாஜக தேசிய மகளிரணி தலைவி வானதி சீனிவாசன் தெரிவித்துள்ளார்.

இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், “ஜனநாயகத்திற்கு எதிரான குடும்ப அரசியலில் மூழ்கி திளைக்கும் ராகுல் காந்திக்கு பாஜகவைப் பற்றி பேச உரிமை இல்லை. மத்திய நிதிநிலை அறிக்கை மீதான விவாதத்தில் பங்கேற்ற மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி ஜி.எஸ்.டி., பண மதிப்பிழப்பு நடவடிக்கையால் பாதிப்பு, முதலாளிகளுக்கான பட்ஜெட் என எப்போதும் பேசுவதையே பேசியுள்ளார்.

ஐந்து தலைமுறை குடும்பத்தை, மிகவும் பிற்படுத்தப்பட்ட, ஏழை குடும்பத்தில் பிறந்த, தேநீர் விற்ற பிரதமர் நரேந்திர மோடி, ஆட்சிக்கு வரவிடாமல் தடுத்து விட்டாரே என்ற ஆதங்கம்தான் வெளிப்படுகிறது. எளிய குடும்பத்தில் பிறந்த, எந்தப் பின்னணியும் இல்லாமல் நரேந்திர மோடி மூன்றாவது முறையாக பிரதமராகி இருப்பதை ஜீரணிக்க முடியவில்லை.



அக்னிபாத் திட்டம் பற்றி காங்கிரஸ் கட்சி குறிப்பாக ராகுல் காந்தி தொடர்ந்து தவறான தகவல்களை பரப்பி வருகிறார். ராணுவத்தில் அதிகமானோர் பங்கேற்கும் வாய்ப்பை உருவாக்கவே அக்னிபாத் திட்டம் கொண்டு வரப்பட்டுள்ளது. ஜி.எஸ்.டி. வரி விதிப்பை பொறுத்தவரை அனைத்தையும் ஜி.எஸ்.டி. கவுன்சில் தான் முடிவு செய்கிறது. மத்திய அரசு தனியாக எதையும் முடிவு செய்வதில்லை.

பாஜகவில் ஒருவர் மட்டுமே பிரதமராக முடியும். மற்றவர்களுக்கு அந்த உரிமை இல்லை என ராகுல் பேசியிருப்பது நகைப்புக்குரியதாக இருக்கிறது. நாட்டின் விடுதலைக்குப் பின் 75 ஆண்டுகளுக்கும் மேலாக காங்கிரஸ் கட்சி கட்டுக்குள் வைத்திருக்கும் குடும்பத்தின் ஐந்தாம் தலைமுறை வாரிசான ராகுல், இதை பேசுவதற்கு வெட்கப்பட வேண்டும். காங்கிரஸுக்கு ஆட்சி அமைக்கும் வாய்ப்பு கிடைத்தால் நேரு குடும்பத்தைச் சேர்ந்த ஒருவரோ அல்லது அவர்களால் நியமிக்கப்படும் ஒருவர் தான் வர முடியும்.

இப்போதும்கூட ராகுல் எதிர்க்கட்சி தலைவர். அவரது தாயார் சோனியா நாடாளுமன்ற காங்கிரஸ் குழு தலைவர். மாநிலங்களவை உறுப்பினரான பிரியங்கா காந்தி வயநாடு தொகுதியில் போட்டியிடுவார் என அறிவித்துள்ளனர். காங்கிரஸ் காரிய கமிட்டி கூட்டம் நடந்தால் ‘அம்மா – மகன் – மகள்’ தான் பிரதானமாக அமர்ந்திருக்கின்றனர். இப்படி ஒரு கட்சியையே ஒரு குடும்பம் அடிமைப்படுத்தி வைத்திருக்கிறது. ஆனால், பாஜகவில் யார் வேண்டுமானாலும் தலைவராக வரலாம். பிரதமராக வரலாம். ஜனநாயகத்திற்கு எதிரான வாரிசு, குடும்ப அரசியலில் மூழ்கி திளைக்கும் ராகுல் காந்திக்கு பாஜகவைப் பற்றி பேச எந்த உரிமையும் இல்லை” என்று வானதி கூறியுள்ளார்.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.