படப்பிடிப்பு நிறுத்தம்?! வேகமெடுக்கும் தயாரிப்பாளர் சங்க விவகாரம் – நடிகர் சங்கம் சொல்லும் பதில்!

தமிழ்த் திரைப்படத் தயாரிப்பாளர்கள் சங்கத்தின் கூட்டுக் கலந்தாய்வுக் கூட்டத்தின் சார்பில் விஷாலைத் தொடர்ந்து தனுஷுக்கும் கட்டுப்பாடு விதித்தனர். புதிய படப்பிடிப்புகள் தொடங்கக் கூடாது உட்படச் சில தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. தயாரிப்பாளர்கள் சங்கத்தின் அந்தத் தீர்மானம் குறித்து விவாதிக்க நடிகர் சங்கத்தில் அவசர கூட்டம் நடந்தது. நேற்று நடந்த அந்தக் கூட்டத்திற்குப் பொருளாளர் கார்த்தி, துணைத் தலைவர்கள் பூச்சி எஸ்.முருகன், கருணாஸ் உட்படப் பலரும் வந்திருந்தார்கள். தனுஷுக்குக் கட்டுப்பாடு, படப்பிடிப்பு நிறுத்தம் தொடர்பான பல தீர்மானங்களுக்குக் கண்டனம் தெரிவித்தனர்.

நடிகர் சங்கத்தின் தீர்மானங்கள்..
நடிகர் சங்கத்தின் தீர்மானங்கள்..

முன்னதாக சென்னையில் நேற்று தமிழ்த் திரைப்படத் தயாரிப்பாளர்கள் சங்கத்தின் தலைமையில் தமிழ்த் திரைப்பட நடப்பு தயாரிப்பாளர்கள் சங்க நிர்வாகிகள், தமிழ்நாடு திரையரங்க உரிமையாளர் சங்க நிர்வாகிகள், தமிழ்நாடு திரையரங்க மல்டிபிளக்ஸ் உரிமையாளர் சங்க நிர்வாகிகள், தமிழ்நாடு திரைப்பட விநியோகஸ்தர்கள் சங்க நிர்வாகிகள் எனப் பல சங்கத்தினர் பங்கேற்ற கூட்டத்தின் முடிவில் சில தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

அதில், “நடிகர் தனுஷ் அவர்கள் பல தயாரிப்பாளர்களிடம் முன்பணம் பெற்றிருக்கும் சூழ்நிலையில் இனிவரும் காலங்களில் தயாரிப்பாளர்கள், நடிகர் தனுஷ் நடிக்கும் புதிய திரைப்படங்களின் பணிகளைத் தொடங்குவதற்கு முன்பாக தமிழ்த் திரைப்படத் தயாரிப்பாளர் சங்கத்தைக் கலந்தாலோசிக்க வேண்டும். சங்கத்தின் சார்பில் புதிய விதிமுறைகள் உருவாக்கப்பட உள்ளன. அந்தப் புதிய விதிமுறைகள் நடைமுறைக்கு வந்த பிறகு படப்பிடிப்புகள் ஆரம்பிக்கலாம். இப்போது நடைபெற்று வரும் படப்பிடிப்புகளை வரும் அக்டோபர் 30-ம் தேதிக்குள் முடித்துக் கொள்ளுமாறு தயாரிப்பாளர்களைக் கேட்டுக்கொள்கிறோம்” என்பது உட்பட சில தீர்மானங்களை நிறைவேற்றினார்கள்.

இது குறித்து நடிகர் சங்கத்தின் பொருளாளரான கார்த்தி, “திரைத்துறையில் தயாரிப்பாளர் சங்கமும், நடிகர் சங்கமும் நல்ல உடன்பாட்டுடன் தொடர்ந்து நல்ல முறையில் பணியாற்றி வருகிறோம். நடிகர்கள் சார்ந்த பிரச்னைகளுக்கும், தயாரிப்பாளர்கள் சார்ந்த பிரச்னைகளுக்கும் இருதரப்பும் கலந்து பேசி குழுக்கள் அமைத்துத்தான் முடிவுகள் எடுக்கப்பட்டு வந்துள்ளன. ஆனால் தயாரிப்பாளர் சங்கம் எங்களிடம் கலந்து ஆலோசிக்காமல் தன்னிச்சையாக ஓர் அறிக்கையை வெளியிட்டுள்ளனர்.

கார்த்தி

புகார், வேலைநிறுத்தம் என அவர்களாகவே ஒரு முடிவை எடுத்துள்ளனர். இது எங்களுக்கு மிகுந்த வருத்தத்தைத் தருகிறது. இதற்கு முன் இரண்டு சங்கங்களும் இதுவரைக்கும் பேசிய விஷயங்களுக்குத் தகுந்த பதில்கள் அளிக்கப்பட்டு வந்துள்ளன. தயாரிப்பாளர்கள் சங்கத்தின் புகார் இதுவரை எழுத்துபூர்வமாக எங்களுக்கு வரவில்லை. இந்நிலையில் திடீர் என இப்படி ஓர் அறிக்கை வெளியிட்டிருப்பது எங்களுக்குமே ஆச்சரியமாக உள்ளது. தொடர்ந்து இனிமேல் பணியாற்ற முடியாதது தவறான ஒரு வார்த்தை பிரயோகம் என நினைக்கிறேன்” என்றும் பேசியிருந்தார்.

இந்நிலையில் நடிகர் சங்கத்தின் துணைத் தலைவரான பூச்சி எஸ். முருகனிடம் பேசினோம்.

“நாமெல்லாம் ஒருதாய் வயிற்றில் பிறக்க முடியவில்லையே தவிர நாம் அனைவரும் ஒன்றுதான் என்பதுபோல இது ஓர் அமைப்பு. எல்லோரும் சேர்ந்துதான் முடிவு எடுக்கணும். தொழிற்சங்கம் என்பது கூடிப்பேசி முடிவு எடுக்குமிடம். தன்னிச்சையாக செயல்படக்கூடாதுனு சொல்றோம்.

கடந்த ஜூன் மாதம் சென்னையில் அக்கார்டு ஹோட்டலில் தயாரிப்பாளர் சங்கத்தோடு ஒரு கூட்டம் நடந்தது. அதுல தயாரிப்பாளர்கள் சங்கம் சார்பில் நடிகர்களுடன் வரும் ஜிம் பாய்ஸ், மேக்கப் மேன் போன்றவர்களால் செலவு அதிகம் ஆகிறது, தயாரிப்பாளர்களுக்கு நஷ்டம் அதிகம் ஏற்படுதுன்னு சொன்னாங்க. அந்த நேரத்தில் கூட தனுஷைப் பத்தி எங்களிடம் எழுத்துபூர்வமாக எந்தப் புகாரும் கொடுக்கல. அவங்க 13 பேர் பத்தி புகார் கொடுத்தாங்க.

பூச்சி முருகன்

இப்படி புகார்களை விசாரித்து தீர்ப்பதற்காகவே எங்களிடம் ஒரு குழு உள்ளது. ஹெல்பிங் கமிட்டி ஒண்ணு வச்சிருக்கோம். அப்படி பேசி, 13 பேர்கள்ல பலரின் பிரச்னைகளையும் தீர்த்து வச்சோம். அதைப் போல, நாங்களும் சில தயாரிப்பாளர்களால சம்பள பிரச்னை இருக்குதுனு சொல்லுவோம். அவங்களும் அதற்கு தீர்வு பண்ணி வைப்பாங்க. இப்படி ஒருத்தருக்கொருத்தர் நட்போடுதான் இருக்கோம். அவங்க பக்கம் பல பேர் சேர்ந்து கூடி பேசட்டும். ஆனா, ஒரு முடிவு எடுக்கறப்ப எங்ககிட்டேயும் கேட்டிருக்கணும்.

அவங்க ஒரு கமிட்டி ஒண்ணு போட்டிருக்காங்க. அதுல நடிகர் சங்கத்தில் இருந்து யாரும் இல்லை. நடிகர் சங்கம் என்பது பாரம்பரிய மிக்க சங்கம், 1948-50 கள்லேயே உருவாக்கப்பட்ட சங்கம். தென்னிந்திய சங்கத்தில் அங்கம் வகிப்பது என்பது என்னைப் பொறுத்தவரை ஒரு கொடுப்பினைனு சொல்லுவேன். இப்படிப் பாரம்பரிய சங்கத்தோடு கலந்து பேசி முடிவு எடுக்கணும்னுதான் விரும்புறோம். அதைப் போல விஷால் குறித்த பேச்சுக்கு நாங்க பதில் சொல்லலை. ஏன்னா, அவர் தயாரிப்பாளர் சங்கத்தின் பொறுப்பில் இருந்திருக்கார். அதனால அது அவங்களுக்கான விஷயமா இருக்கு. அவங்ககிட்ட இப்பவும் நாங்க நட்புணர்வோடுதான் இருக்கோம். அவங்களும் எங்ககிட்ட நட்போடுதான் இருக்காங்க. நேற்று அந்த அறிக்கை வெளியான பின், எல்லோருமே எங்களுக்கு போன் செய்து விசாரிக்க ஆரம்பித்துவிட்டார்கள். அதனாலேயே நாங்களும் பதில் சொல்ல வேண்டியதாகிடுச்சு. மத்தபடி நட்போடுதான் நாங்களும் இருக்கோம்” என்கிறார் பூச்சி எஸ். முருகன்.

தனுஷ்

தயாரிப்பாளர்கள் சங்கத்தில் சிலரிடம் பேசினோம். பெயர் வெளியிட விரும்பாமல் அவர்கள் சொன்னது இது. “தனிப்பட்ட முறையில் தயாரிப்பாளர் சங்கம் மட்டும் இந்தத் தீர்மானத்தை நிறைவேற்றவில்லை. நடப்பு தயாரிப்பாளர்கள், திரையரங்க உரிமையாளர்கள், விநியோகஸ்தர்கள், மல்டிபிளக்ஸ் உரிமையாளர்கள் சங்கத்தினர் எனப் பலரும் சேர்ந்துதான் தீர்மானம் நிறைவேற்றியிருக்கிறோம். இப்போது நடந்து வரும் படப்பிடிப்புகளை நிறுத்தினால் தொழிலாளர்கள் பாதிப்பிற்குள்ளாவார்கள், தயாரிப்பாளர்களும் நஷ்டத்தைச் சந்திப்பார்கள் என்பதால்தான் அக்டோபருக்குப் பிறகு படப்பிடிப்புகள் நடத்த வேண்டாம் எனச் சொன்னோம். தனுஷைத் தொடர்ந்து விரைவில் வேறு சில நடிகர்களின் பெயர்களை அறிவித்தாலும் ஆச்சரியமில்லை. காரணம், நாங்க வட்டி கட்டவே திணறிக்கொண்டிருக்கிறோம். அதனால்தான் இப்படி ஒரு கூட்டமே நடத்த வேண்டியிருந்தது” என்கிறார்கள்.

தயாரிப்பாளர்கள் சங்கம் – பெப்சி – நடிகர்கள் சங்கம் என அத்தனை சங்கமும் சேர்ந்து பேசி, சுமுகமாகத் தீர்வு காணவேண்டும் என்பதுதான் தமிழ் சினிமா ரசிகனின் எதிர்பார்ப்பும் கூட!

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.