வெற்றிக்கு பின்… தோனி பாணியை பின்பற்றிய சூர்யகுமார் யாதவ்… என்ன தெரியுமா?

IND vs SL T20 Series: இலங்கைக்கு எதிரான மூன்றாவது மற்றும் கடைசி டி20 போட்டி நேற்று (ஜூலை 30) நடைபெற்றது. ஏற்கெனவே, இரண்டு டி20 போட்டிகளில் இந்தியா வெற்றி பெற்று தொடரையும் கைப்பற்றிய சூழலில், இந்த மூன்றாவது போட்டி சம்பிரதாயமாக நடைபெற்றது எனலாம். இதனால், இந்திய அணியில் பல மாற்றங்கள் செய்யப்பட்டன. 

சுப்மான் கில் மீண்டும் பிளேயிங் லெவனில் இடம்பெற்றார், இருப்பினும் சஞ்சு சாம்சன் தொடர்ந்து விளையாடினார். ரிஷப் பண்ட், ஹர்திக் பாண்டியா, அக்சர் படேல், அர்ஷ்தீப் சிங் ஆகியோருக்கு நேற்று ஓய்வு அளிக்கப்பட்டது. ஷிவம் தூபே, வாஷிங்டன் சுந்தர், கலீல் அகமது ஆகியோருக்கு வாய்ப்பு கிடைத்தது. டாஸ் வென்ற இலங்கை பந்துவீச்சை தேர்வு செய்தது.

இலங்கை அணியின் சொதப்பல்

அதில் இந்திய அணி 137 ரன்களை அடித்தது. சுப்மான் கில் அதிகபட்சமாக 39 ரன்களை அடித்திருந்தார். தொடர்ந்து விளையாடிய இலங்கை அணியில் தொடக்கம் சிறப்பாக இருந்தது. ஒரு கட்டத்தில் அந்த அணி 110 ரன்களுக்கு 1 விக்கெட்டை மட்டும் இழந்து 29 பந்துகளில் 27 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற நிலைமையில் இருந்தது.  கையில் 9 விக்கெட்டுகளும் இருந்தன.

ஆனால், கடைசி கட்ட ஓவர்களில் இலங்கை அணியால் இந்திய அணியின் சுழற்பந்துவீச்சை தாக்குபிடிக்க முடியவில்லை. ரவி பிஷ்னோய், வாஷிங்டன் சுந்தர் ஆகியோர் சிறப்பாக வீசிய நிலையில், 18ஆவது ஓவரை வீசிய கலீல் அகமது மட்டும் அந்த ஓவரில் 5 வைடுகள் உள்பட மொத்தம் 12 ரன்களை கொடுத்து சொதப்பினார். இதனால் கடைசி 2 ஓவர்களில் 9 ரன்களே தேவைப்பட்டன.

ரின்கு, சூர்யகுமாரின் ‘சுழல் ஜாலம்’

இந்த இடத்தில் கலீல் அகமதை பாடமாக எடுத்துக்கொண்டு கேப்டன் சூர்யகுமார் வேகப்பந்துவீச்சாளருக்கு வாய்ப்ளிக்காமல் பார்ட் டைம் ஸ்பின்னரான ரின்கு சிங்கிற்கு வாய்ப்பளித்தார். ரின்கு சிங் சர்வதேச அளவில் வீசும் முதல் ஓவர் அதுதான். அதில் ரின்கு சிங் 3 ரன்களை மட்டும் கொடுத்து 2 விக்கெட்டுகளை கைப்பற்றினார். கடைசி ஓவரை சூர்யகுமார் யாதவ் (Suryakumar Yadav) ஆப் ஸ்பின் வீசினார். அந்த ஓவரில் 6 ரன்கள் இலங்கைக்கு தேவைப்பட்டது. 

அந்த ஓவரில் முதல் பந்தில் ரன்னேதும் வராத நிலையில் 2ஆவது மற்றும் 3ஆவது பந்துகளில் அடுத்தடுத்து விக்கெட் விழுந்தது. இருப்பினும் கடைசி 3 பந்தில் 5 ரன்களுடன் ஆட்டம் சூப்பர் ஓவருக்கு சென்றது. அந்த சூப்பர் ஓவரிலும் இந்தியா சுழற்பந்துவீச்சு ஆப்ஷனுக்கே சென்றது. 

சூப்பர் ஓவரில் வெற்றி 

வாஷிங்டன் வீசிய அந்த ஓவரில் குஷால் பெரேரா மற்றும் பதும் நிசங்கா டக் அவுட்டாகினர். 2 ரன்கள் எடுக்கப்பட்ட நிலையில் 2 விக்கெட்டுகளும் வீழ்ந்ததால், இந்திய அணி வெற்றிக்கு 3 ரன்கள் இலக்காக நிர்ணயிக்கப்பட்டது. சூர்யகுமார் யாதவ் முதல் பந்திலேயே பவுண்டரி அடித்து வெற்றியை உறுதி செய்தார். இதன்மூலம் 3-0 என்ற கணக்கில் இந்தியா டி20 தொடரை வைட்வாஷ் செய்து இலங்கையை வீழ்த்தியது. வாஷிங்டன் சுந்தர் (Washington Sundar) ஆட்ட நாயகனாகவும், சூர்யகுமார் யாதவ் தொடர் நாயகனாகவும் தேர்வானார்கள். 

— BCCI (@BCCI) July 30, 2024

தோனியை போல் சூர்யகுமார்…

ஆடுகளம் டெத் ஓவர்களிலும் கூட சுழற்பந்துவீச்சுக்கு உகந்ததாக இருப்பதை அறிந்த உடன் தயக்கமின்றி, அழுத்தம் நிறைந்த சூழலில் ரின்கு சிங்கிற்கும், தனக்கும் பந்துவீச்சில் வாய்ப்பளித்தது என்பது பாராட்டத்தக்கது. முதிர்ச்சி பெற்ற கேப்டன்ஸியை அங்கு பார்க்க முடிந்தது எனலாம். தோனியின் கேப்டன்ஸியில் யுவராஜ், ரெய்னா ஆகியோர் பார்ட்-டைம் ஸ்பின்னர்களாக ஜொலித்தனர். இந்திய அணி அத்தகைய சுழற்பந்துவீச்சாளர்களை பெறாத நிலையில், ரின்கு சிங், யஷஸ்வி ஜெய்ஸ்வால், ரியான் பராக் உள்ளிட்டோர் பந்துவீச்சு ஆப்ஷனில் சூர்யகுமார் யாதவிற்கு நிச்சயம் வருங்காலத்திலும் கைக்கொடுக்கும். 

டி20 தொடருக்கான கோப்பையை பெற்ற சூர்யகுமார், அதனை ரியான் பராக், ரின்கு சிங் ஆகிய இளம் வீரர்களிடம் ஒப்படைத்தார். தோனியும் (MS Dhoni) இதேபோலவே கோப்பையை பெற்றதும் அதனை இளம் வீரர்களிடம் ஒப்படைப்பார். அந்த வகையில், போட்டியிலும் சரி, போட்டி முடிந்த பின்னரும் சரி தோனியை போன்ற கேப்டன்ஸி செய்த சூர்யகுமார் யாதவிற்கும், இளம் அணிக்கு பக்கபலமாக இருக்கும் புதிய தலைமை பயிற்சியாளர் கௌதம் கம்பீருக்கும் தற்போது பாராட்டுக்கள் குவிந்து வருகின்றன.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.