ராணுவ மருத்துவ சேவைகள் பிரிவின் முதல் பெண் தலைமை இயக்குநராக சாதனா சக்சேனா நாயர் பொறுப்பேற்பு

புதுடெல்லி: ராணுவ மருத்துவ சேவைகள் பிரிவின் முதல் பெண் தலைமை இயக்குநராக லெப்டினன்ட் ஜெனரல் சாதனா சக்சேனா நாயர் பொறுப்பேற்றுள்ளார்.

இது தொடர்பாக பாதுகாப்பு அமைச்சகம் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு: லெப்டினன்ட் ஜெனரல் சாதனா சக்சேனா நாயர், ஆகஸ்ட் 01, 2024 அன்று, ராணுவத்தின் மருத்துவ சேவைகள் பிரிவின் தலைமை இயக்குநராக பதவி ஏற்றுக்கொண்டார். இந்த மதிப்புமிக்க பதவிக்கு நியமிக்கப்பட்ட முதல் பெண் இவர் என்பது குறிப்பிடத்தக்கது. இதற்கு முன்பு, ஏர் மார்ஷல் நிலையில் மருத்துவமனை சேவைகள் (ஆயுதப்படை) பிரிவின் தலைமை இயக்குநராக பதவி வகித்த முதல் பெண் இவர் ஆவார்.

லெப்டினன்ட் ஜெனரல் சாதனா சக்சேனா நாயர் புனேயின் ஆயுதப்படை மருத்துவக் கல்லூரியில் பட்டம் பெற்றவர். டிசம்பர் 1985-இல் ராணுவ மருத்துவப் படையில் நியமிக்கப்பட்டார். குடும்ப மருத்துவத்தில் முதுநிலை பட்டம், தாய் சேய் நலம் மற்றும் சுகாதார மேலாண்மையில் டிப்ளோமா மற்றும் புதுடெல்லி எய்ம்ஸில் மருத்துவ தகவலியலில் இரண்டு ஆண்டு பயிற்சி திட்டத்தில் தேர்ச்சி பெற்றுள்ளார்.



இவர் இஸ்ரேலிய பாதுகாப்புப் படைகளுடன் வேதியியல், உயிரியல், கதிரியக்க மற்றும் அணுசக்தி போர் மற்றும் ஸ்பீஸில் உள்ள சுவிஸ் ஆயுதப் படைகளுடன் ராணுவ மருத்துவ நெறிமுறைகளில் பயிற்சி பெற்றவர். இவர் மேற்கு விமான கட்டளையின் முதல் பெண் முதன்மை மருத்துவ அதிகாரி மற்றும் இந்திய விமானப்படையின் (ஐ.ஏ.எஃப்) பயிற்சி கமாண்டராகவும் இருந்துள்ளார்.

தேசிய கல்விக் கொள்கையின் மருத்துவக் கல்விக் கூறுகளின் ஒரு பகுதியை வரைவதற்காக டாக்டர் கஸ்தூரி ரங்கன் குழுவின் நிபுணர் உறுப்பினராக லெப்டினன்ட் ஜெனரல் சாதனா சக்சேனா நாயர் பரிந்துரைக்கப்பட்டார். அவரது பாராட்டத்தக்க சேவைக்காக, மேற்கு பிராந்திய விமான பிரிவின் ஏர் ஆபிசர் கமாண்டிங்-இன்-சீஃப் மற்றும் விமானப் படை தளபதியின் விருதுகளை அவர் பெற்றுள்ளார். குடியரசுத் தலைவரின் விஷிஷ்ட் சேவா பதக்கமும் அவருக்கு வழங்கப்பட்டுள்ளது.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.