நாம் ஒவ்வொருவரும் கஷ்ட நஷ்டங்களை கடந்தும், ஏற்ற இறக்கங்களை சந்தித்தும்தான் வாழ்க்கையை நகர்த்திக் கொண்டிருக்கிறோம். ஆனால் நம் அனைவரின் ஆசை ‘லைஃப் ஸ்மூத்தா போனா நல்லா இருக்கும்ல…’ என்பதுதான். நமது வாழ்க்கையை சம நிலையில் வைக்க ‘5F’ தேவைப்படுகிறது என்கிறார் பில்டிங் டாக்டர் நிறுவனத்தின் நிறுவனர் ஆதன் யோகி.
முதல் எஃப் ஃபிட்னஸ் (FITNESS), 2-வது எஃப் ஃபேமிலி (FAMILY), 3-வது எஃப் ஃபைனாஸ் (FINANCE), 4-வது எஃப் ஃபெயித் (FAITH) மற்றும் 5-வது எஃப் ஃபன் (FUN). நாம் இந்த ஐந்து ‘எஃப்’களையும் சம நிலையில் வைத்திருக்க வேண்டியது மிக மிக அவசியம். இந்த ஐந்திற்கும் நமது நேரத்தை சமமாக ஒதுக்க வேண்டும். அப்போதுதான் நாம் வாழும் வாழ்க்கை மகிழ்ச்சியாக இருக்கும்.
‘என்னிடம் பணம் இல்லை அதனால் நான் முதலில் என்னுடைய ஃபைனான்ஸ் பார்த்துக் கொள்கிறேன், என்னுடைய ஃபேமிலியை அதற்குப் பிறகு பார்த்துக் கொள்வேன். இப்போது என்னால் ஃபிட்னஸ் விஷயங்களை கவனித்துக் கொள்ள முடியாது. அதை பிறகு பார்த்துக் கொள்கிறேன்’ என நினைப்பது முற்றிலும் தவறாகும்.
ஃபிட்ன்ஸ் (FITNESS)
ஃபிட்னஸ் என்ற வார்த்தையை கேட்டவுடன் நமக்கு சிக்ஸ் பேக்குடன் இருக்கும் கட்டுக்கோப்பான உடல்தான் சட்டென நியாபகத்திற்கு வரும். கட்டு கட்டாக உடலை வைத்துக்கொண்டால்தான் ஃபிட்டாக இருக்கிறோம் என்பது அர்த்தமல்ல. சாதாரண உடற்பயிற்சிகளை செய்து உடலை அரோக்கியமாக வைத்துக்கொள்வதும் ஃபிட்னஸ்தான்.
ஒரு நாளைக்கு குறைந்தபட்சம் 30 நிமிடங்களாவது உடற்பயிற்சி செய்ய வேண்டும். வீட்டை விட்டு வெளியே போய் உடற்பயிற்சிகளை மேற்கொள்ள விரும்பாதவர்கள் பால்கனி, மொட்டை மாடி போன்ற இடங்களில் உடற்பயிற்சி செய்யுங்கள். உடற்பயிற்சியின் போது ஏற்படும் வலிகள் நம்மை வலிமைபடுத்தத் தானே தவிர வருத்தப்படவைக்க அல்ல. முதல் எஃப்-ஆன ஃபிட்னஸ் சீராக இருந்தால் மகிழ்ச்சி தானாக வந்து சேரும்.
ஃபேமிலி (FAMILY)
குடும்பத்தை விட நம்மை சந்தோஷமாக பார்த்துக் கொள்ள வேறு யாராலும் முடியாது. குடும்பம் என்பது அன்பின் பிறப்பிடம், மகிழ்ச்சியின் இருப்பிடம், பாசத்தின் வளர்ப்பிடம், பக்குவத்தின் காப்பிடம்.
இக்காலத்தில் நாம் மற்றவர்களுக்காக செலவழிக்கும் நேரத்தை கூட பெற்றவர்களுக்காக செலவழிப்பதில்லை. அன்றோ அவர்கள் நமக்கு தெரியாத முகங்களை சொல்லிக் கொடுத்தார்கள், ஆனால் இன்று நாம் அவர்களுக்கு முதியோர் இல்லத்தை தானே சொல்லிக் கொடுக்கிறோம். முழு நாளும் குடும்பத்துடன் இருக்க வேண்டாம் ஒரு முப்பது நிமிடமாவது குடும்ப உறுப்பினர்களிடம் முகம் கொடுத்து பேசுங்கள்.
ஃபைனான்ஸ் (Finance)
‘பணம் மட்டும் வாழ்க்கை கிடையாது’ என நாம் சொல்லிக் கொண்டாலும், பணம்தான் நம் அனைவரின் வாழ்க்கையையும் நிர்ணயம் செய்கிறது. சில சமயங்களில். பணம் இல்லை என்றால் பக்கத்து வீட்டில் இருப்பவர் கூட மதிக்க மாட்டார் .பணம் அதிகமாக இருந்தால் அது உங்களை தூங்க விடாது, இல்லையென்றால் உங்களை வாழவே விடாது. ஆகையால் தேவையான அளவிற்கு பணத்தை நல்வழியில் சேமியுங்கள். சேமிப்பு, முதலீடு செய்து அந்த பணத்தை பாதுகாப்பான முறையில் பல மடங்கு பெருக்கிக் கொள்ளுங்கள்.
ஃபெயித் (FAITH)
பல அவமானங்களை கடக்கும் ஒருவன் மனதில் ஓடும் ஒரே எண்ணம் ‘நான் என்றாவது ஒரு நாள் ஜெயித்துக் காட்டுவேன்’ என்பதுதான். நம்பிக்கை என்கிற ஆயுதம் மட்டும் உங்களோடு இருந்தால் உங்கள் வாழ்க்கையில் நீங்கள் இழந்த அனைத்தையும் மீட்டு விடலாம். உங்களால் எல்லாவற்றையும் எதிர்கொள்ள முடியும் என்பதை நீங்கள் முதலில் நம்புங்கள்.
ஃபன் (FUN)
உங்களுக்கு ஒன்று தெரியுமா தினமும் சிரிக்க தெரிந்த மனிதன் தன் உடலில் உள்ள கொழுப்பை கரைக்கிறான் . கவலை எங்கிருந்து வேண்டுமானாலும் வரலாம். ஆனால் புன்னகை நம்மிடமிருந்து மட்டும்தான் வர வேண்டும். வாழ்க்கையில் எத்தனை கஷ்டங்கள் இருந்தாலும் அவற்றை சிரிப்போடு கையாளுங்கள். நிலா எவ்வளவு அழகு என்று நம் அனைவருக்கும் தெரியும் ஆனால் உங்களது சிரிப்பு எவ்வளவு அழகு என்று உங்களுக்கு தெரியுமா… ஒருமுறை சிரித்துக் கொண்டே கண்ணாடியை பாருங்கள்.
நம்மிடம் இல்லாத ஒன்றிற்காகவே நமது அதிக நேரத்தை செலவழித்து பழகி விட்டோம், இனிமேலாவது மேலே குறிப்பிட்ட ஐந்து எஃப்-களுக்காக சரிசமமான நேரத்தை செலவழியுங்கள்.