100+ வீடுகள் கட்டித்தர காங்கிரஸ் குடும்பம் உறுதி: வயநாட்டில் ராகுல் காந்தி தகவல்

வயநாடு: வயநாடு நிலச்சரிவில் பாதிக்கப்பட்ட மக்களுக்கான உதவிகள் தொடர்பாக மத்திய அரசிடமும் கேரள அரசிடமும் வலியுறுத்தப் போவதாக எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி தெரிவித்துள்ளார்.

வயநாட்டில் செய்தியாளர்களிடம் பேசிய ராகுல் காந்தி, “நேற்று முதல் நான் இங்கே இருக்கிறேன். நான் நேற்று சொன்னது போல், இது ஒரு பயங்கரமான சோகம். நேற்று நாங்கள் பாதிக்கப்பட்ட இடங்களுக்குச் சென்றோம். முகாம்களுக்கு சென்றோம். அங்குள்ள நிலைமையை மதிப்பீடு செய்தோம்.

இன்று பேரூராட்சி மற்றும் ஊராட்சி நிர்வாகத்தினருடன் ஆலோசனை நடத்தினோம். எதிர்பார்க்கும் உயிரிழப்புகளின் எண்ணிக்கை, சேதமடைந்த வீடுகளின் எண்ணிக்கை மற்றும் எடுக்கப்பட வேண்டிய நடவடிக்கைகள் குறித்து அவர்கள் எங்களிடம் கூறினர்.



பாதிக்கப்பட்ட மக்களுக்கு முடிந்த எல்லா வகை உதவிகளையும் அளிக்க நாங்கள் இருக்கிறோம் என்று கூறியுள்ளோம். இங்கு 100க்கும் மேற்பட்ட வீடுகள் கட்டித்தர காங்கிரஸ் குடும்பம் உறுதியளிக்கிறது.

கேரளாவில் இதுபோன்ற ஒரு சோகம் வேறு எங்கும் நிகழ்ந்ததில்லை என்று நினைக்கிறேன். இது ஒரு வித்தியாசமான சோகம். வித்தியாசமான முறையிலேயே இதற்கு தீர்வு காணப்பட வேண்டும். இதுதொடர்பாக மத்திய அரசிடமும், கேரள முதல்வரிடமும் வலியுறுத்த உள்ளேன்.

பாதிக்கப்பட்ட மக்களுக்கான மறுவாழ்வு தொடர்பாகவும் நாங்கள் விவாதித்தோம். இப்போதைக்கு நமது முன்னுரிமை, தேடுதல்தான். இன்னும் உயிரோடு யாரேனும் இருக்கிறார்களா என்பதை தீவிரமாக தேட வேண்டும்.

அதேபோல், முகாம்களில் இருப்பவர்களுக்குத் தேவையான வசதிகளை அளிக்க வேண்டும். அதோடு, பாதிக்கப்பட்ட மக்களுக்கு மறுவாழ்வும் அளிக்கப்பட வேண்டும். மறுவாழ்வு அளிப்பது என்பது மிகவும் முக்கியமான விஷயம்.

பாதிக்கப்பட்ட மக்களில் பலர், மீண்டும் அங்கே செல்ல விரும்பவில்லை என என்னிடம் தெரிவித்தனர். எனவே, அவர்கள் பாதுகாப்பான இடங்களில் மறுகுடியமர்த்தப்பட வேண்டும். அவர்களை மீண்டும் அங்கே செல்ல வலியுறுத்தக்கூடாது. இது குறித்தும் கேரள அரசிடம் வலியுறுத்த உள்ளேன்” என தெரிவித்தார்.

முன்னதாக, தனது சகோதரி பிரியங்கா காந்தியுடன் நேற்று வயநாடு வந்த ராகுல் காந்தி, நிலச்சரிவால் கடுமையாக பாதிக்கப்பட்ட சூரல்மாலா உள்ளிட்ட பகுதிகளுக்குச் சென்று பார்வையிட்டார். ரெயின் கோட் அணிந்தபடி ஆற்றின் ஒரு கரையில் இருந்து மறு கரைக்குச் செல்வதற்காக அமைக்கப்பட்டிருந்த தற்காலிக பாலத்தின் வழியாக சென்ற அவர்கள், அங்கும் பாதிக்கப்பட்ட பகுதிகளைப் பார்வையிட்டனர். மேலும், மேப்படி என்ற இடத்தில் நிவாரண முகாமாக மாற்றப்பட்டுள்ள செயின்ட் ஜோசப் பள்ளிக்குச் சென்ற ராகுல் காந்தி மற்றும் பிரியங்கா காந்தி ஆகியோர், பாதிக்கப்பட்ட மக்களுக்கு ஆறுதல் தெரிவித்தனர்.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.