"டிஜிட்டல் வந்த பின் சினிமா மட்டமாகிடுச்சு. ஆனால் அக்காலத்தில்.." -'நினைக்காத நாளில்லை' பட இயக்குநர்

கடந்த 2001-ம் ஆண்டு இரா.பார்த்திபன், தேவயானி நடிப்பில் வெளியான படம் ‘நினைக்காத நாளில்லை’. இப்படத்தை இயக்கிய ஏ.எல்.ராஜா, இப்போது ‘சூரியனும் சூரியகாந்தியும்’ என்ற படத்தை இயக்கி, தயாரித்திருக்கிறார்.

சூரியனும் சூரியகாந்தியும் படத்தில்..

”நான் இயக்குநர் ஆவதற்கு முன்னர் இணை இயக்குநராக வேலை செய்த படங்கள் எல்லாமே சூப்பர் ஹிட் படங்கள். ‘வியட்நாம் காலனி’, ‘எங்கிருந்தோ வந்தான்’, ‘சின்ன மாப்ள’, ‘செங்கோட்டை’, ‘கண்ணுபடப்போகுதய்யா’னு இப்படி வெற்றி படங்கள்ல வேலை செய்ததால, என் முதல் படமான ‘நினைக்காத நாளில்லை’க்கு தயாரிப்பாளர் எளிதா அமைஞ்சிட்டார். அந்தக் காலகட்டம் சினிமாவில் பொற்காலம்னு சொல்லலாம். கலைமணி சார், கிரேஸி மோகன் சார்னு கதைகள் எல்லாமே எழுத்துக்கு முக்கியத்துவம் கொடுத்த படங்களாகவும் இருந்தது. எழுதுறவங்களுக்கும் மதிப்பு இருந்தது. டிஜிட்டல் வந்த பின் சினிமா படுமட்டமாகிடுச்சு. பணம் இருந்தால் போதும், யார் வேண்டுமானாலும் டைரக்ட் பண்ணலாம்.

ஶ்ரீஹரி, ரித்தி, சூரியனும் சூரியகாந்தியும்

பணம் இருந்தால் போதும் யார் வேணா ஹீரோவாகிடலாம்னு ஆச்சு. சினிமா தெரியாதவங்க இந்த துறைக்கு வந்து, என்னை மாதிரி அனுபவசாலிகளை நசுக்குறவங்களா இருக்கறதும் சகஜமாகிடுச்சு. சினிமாவை நேசிக்கறவங்களே குறைஞ்சிட்டாங்க. ஒரு நெருக்கடியான காலகட்டத்தில் சினிமா இருக்கு. இங்கே திறமைக்கு மதிப்பில்லை. சினிமா இப்ப பிசினஸ் ஆகிடுச்சு. கதை பத்தி யாரும் கவலைப்படுறதில்லை. ஒண்ணு போட்டால், பத்தா திரும்பி வருமானு மட்டும்தான் பார்க்குறாங்க. ஆனா, பக்கத்து மாநிலமான கேரளாவுல சினிமா இப்பவும் நல்லா இருக்கு. அங்கே ஒரு ஹீரோவுக்கு ஒரு படம் ஜெயித்தால், அடுத்த படத்துக்குச் சம்பளம் உயர்ந்திடாது. பழைய சம்பளம் தான். அதே மதிப்புதான். ஆனா, இங்கே அப்படியா!

சரி, என் விஷயத்துக்கு வர்றேன். ‘நினைக்காத நாளில்லை’ படம் வெளியாகி 23 வருஷம் ஆகிடுச்சு. இப்பவும் அதன் பாடல்கள் வரவேற்பா இருக்குது. அந்த படத்தை அடுத்து ‘தீக்குச்சி’னு ஒரு படத்தை இயக்கினேன். ஜெய்வர்மா நாயகன். அதுல ஆஷிஷ் வித்யார்த்தி, வடிவேலு, சிங்கமுத்துனு நிறைய நட்சத்திரங்கள் இருப்பாங்க. வடிவேலுவின் காக்க சுடும் ஹிட் காமெடி அதுல இருக்கும். அப்புறம் தெலுங்கில் ஒரு ரீமேக் படம் இயக்கினேன். அதன் பிறகு தெலுங்கில் ஒரு படம் இயக்கினேன். இப்ப ‘சூரியனும் சூரியகாந்தி’யும்னு ஒரு படம் பண்ணியிருக்கேன். மதுரையைச் சுற்றி நடக்கும் கதைக்களம் என்பதால் மதுரை, திருவண்ணாமலை, மேல்மலையனூர் எனப் பல இடங்கள்ல இந்த படத்தை இயக்கியிருக்கேன். கதையின் நாயகனாக ஶ்ரீஹரி நடிச்சிருக்கார். இவருக்கு வாய் பேச முடியாது. காதும் கேட்காது. மங்களநாத குருக்களின் மகன் இவர். தவிர சந்தானபாரதி, அப்புக்குட்டி, ராஜசிம்மன், கதையின் நாயகியாக புதுமுகம் ரிதி உமையாள் ஆகியோர் நடிக்கிறாங்க.

ஏ.எல்.ராஜா

இதன் கதை, ஆணவக்கொலைக்கு எதிரான படம்னு சொல்லலாம். என் ஜாதி உசத்தி, உன் ஜாதி உசத்தினு கொடி பிடிக்கிறவங்களுக்கு அதெல்லாம் தேவையில்லை உழைப்புதான் உயர்வுனு சொல்ற கதையாகவும் இதை எடுத்துக்கலாம். ஆர்.எஸ்.ரவிப்பிரியன் இசையமைச்சிருக்கார். திருவாரூர் ராஜா ஒளிப்பதிவு செய்திருக்கார். இத்தனை வருஷ காலமாகச் சினிமாவை அதே நேசிப்புடன்தான் நகர்த்துறேன். ‘சூரியனும் சூரியகாந்தி’யும் அனைத்து தரப்பினரையும் கவரும் படமாக கொண்டு வந்திருக்கோம். வரும் 9ம் தேதி படத்தைத் திரைக்கு கொண்டு வர்றதால, போஸ்ட் புரொடக்‌ஷன் வேலைகள்ல தீவிரமாக இப்ப இருக்கோம்” என்கிறார் இயக்குநர் ஏ.எல்.ராஜா.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.