அவரை 8-வது வரிசையில் களமிறக்கியது சரியான முடிவல்ல – ஆகாஷ் சோப்ரா அதிருப்தி

மும்பை,

இலங்கை – இந்தியா இடையிலான முதலாவது ஒருநாள் போட்டி கொழும்புவில் நேற்று நடைபெற்றது. அந்த போட்டியில் டாஸ் வென்று முதலில் பேட்டிங் செய்த இலங்கை 50 ஓவர்களில் 230 ரன்கள் குவித்தது. அதிகபட்சமாக வெல்லலகே 67, நிசாங்கா 56 ரன்கள் எடுத்த நிலையில் இந்தியா சார்பில் அதிகபட்சமாக அக்சர் படேல், அர்ஷ்தீப் சிங் தலா 2 விக்கெட்டுகளை எடுத்தனர். அதைத் தொடர்ந்து 231 ரன்களை துரத்திய இந்தியாவுக்கு கேப்டன் ரோகித் சர்மா அதிரடியாக விளையாடி 58 ரன்கள் குவித்து நல்ல தொடக்கத்தை கொடுத்தார். ஆனால் மற்ற பேட்ஸ்மேன்கள் விரைவில் அவுட்டாகி ஏமாற்றத்தை கொடுத்தனர்.

அதே போல ஆட்டம் சமனில் இருந்தபோது கைவசம் 2 விக்கெட்டுகள் இருந்த நிலையில், ஷிவம் துபே மற்றும் அர்ஷ்தீப் சிங் ஆட்டமிழந்தனர். இதனால் இந்த ஆட்டம் சமனில் முடிவடைந்தது. இலங்கை தரப்பில் அதிகபட்சமாக ஹசரங்கா மற்றும் அசலன்கா தலா 3 விக்கெட்டுகளும், வெல்லலகே 2 விக்கெட்டுகளும் வீழ்த்தினர்.

இந்நிலையில் ஸ்பின்னர்களை அதிரடியாக எதிர்கொள்ளக்கூடிய ஷிவம் துவே தற்சமயத்தில் ஓரளவு நல்ல பார்மில் இருக்கிறார். ஆனால் அப்படிப்பட்ட அவரை முதல் போட்டியில் கவுதம் கம்பீர் 8வது இடத்தில் களமிறக்கியது எந்த வகையிலும் சரியான முடிவல்ல என முன்னாள் வீரர் ஆகாஷ் சோப்ரா அதிருப்தியை வெளிப்படுத்தியுள்ளார். குறிப்பாக 4வது இடத்தில் களமிறங்கிய இடதுகை பேட்ஸ்மேன் வாஷிங்டன் சுந்தருக்கு பதிலாக ஷிவம் துபே விளையாடியிருக்க வேண்டும் என்று அவர் கூறியுள்ளார்.

இது பற்றி அவர் பேசியது பின்வருமாறு:- “வாஷிங்டன் சுந்தர் ஏன் மேல் வரிசையில் வந்தார் என்பது எனக்கு ஆச்சரியமாக இருந்தது. ஒருவேளை உங்களுக்கு இடது கை பேட்ஸ்மேன் தேவைப்பட்டால் ஷிவம் துபே இருக்கிறார். ஆனால் அவரை அனுப்பாத நீங்கள் சுந்தரை அனுப்பினீர்கள். சுந்தர் வெளியேறியதும் ஸ்ரேயாஸ், ராகுல், அக்சர் படேல் ஆகியோர் வந்தனர். அப்போது ஏன் துபே மேலே களமிறங்கவில்லை என்பது கேள்விக்குறியாகும். இந்த விஷயத்தில் கவுதம் கம்பீர் ஏதோ வித்தியாசமாக சிந்திக்கிறார் என்பது தெரிகிறது. ஆனால் ஷிவம் துபே 8வது இடத்தில் பேட்டிங் செய்வதை நீங்கள் விரும்பக் கூடாது. அவரை நீங்கள் மேல் வரிசையில் களமிறக்க வேண்டும். அதை விட்டுவிட்டு நீங்கள் வாஷிங்டன் சுந்தர் மற்றும் அக்சர் படேலுக்கு கீழே களமிறக்கியுள்ளீர்கள்” என்று கூறினார்.


Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.