அமராவதி: புதிய ஆந்திர மாநிலத்தின் தலைநகரமாக அமராவதி அறிவிக்கப்பட்டு, கடந்த 2015 அக்டோபரில் அடிக்கல் நாட்டப்பட்டது. தற்காலிக பேரவை மற்றும் தலைமைச் செயலக கட்டிடங்கள் கட்டப்பட்டு, அங்கிருந்தே ஆட்சி தொடங்கியது. நிரந்தர கட்டிடங்களுக்கான பணிகள் மும்முரமாக நடைபெற்று வந்தன.
ஆனால் 2019-ல் ஜெகன்மோகன் ரெட்டி ஆட்சிக்கு வந்ததும், 3 தலைநகரங்கள் அமைக்கும் திட்டத்தை அறிவித்து, அதிர்ச்சியூட்டினார். இதனால் அமராவதிக்கு நிலம் வழங்கிய விவசாயிகள் போராட்டத்தில் ஈடுபட்டனர். அவர்கள் சட்டப் போராட்டமும் நடத்தி, 3 தலைநகர திட்டத்துக்கு முட்டுக்கட்டை போட்டனர்.
இந்நிலையில் சமீபத்திய தேர்தலுக்குப் பிறகு ஆந்திராவில் ஆட்சி மாற்றம் ஏற்பட்டது. தெலுங்கு தேசம் கட்சியின் தலைவர் சந்திரபாபு நாயுடு மீண்டும் ஆந்திர முதல்வராக பதவியேற்றார். மத்தியில் ஆளும் பாஜக கூட்டணி அரசில் அவரது கட்சி அங்கம் வகிக்கிறது.
இந்நிலையில் சமீபத்திய மத்தியபட்ஜெட்டில், அமராவதி தலைநகரப் பணிகளுக்கு ரூ.15,000 கோடி ஒதுக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டது. இதனால் அமராவதி தலைநகர திட்டம் புத்துயிர் பெற்றது.
இதையடுத்து கடந்த வெள்ளிக்கிழமை ஹைதராபாத் ஐஐடி நிபுணர் குழு அமராவதிக்கு வந்து, பாதியில் நின்றுபோன கட்டிடப் பணிகளை ஆய்வு செய்தது. அதில் கம்பிகள் துருப் பிடித்தும், சில கட்டிட தூண்களில் பிளவுகளும் ஏற்பட்டுள்ளதை இக்குழு ஆய்வு செய்தது.
இந்நிலையில், சென்னை ஐஐடி நிபுணர் குழுவும் நேற்று அமராவதியில் ஆய்வு மேற்கொண்டது. பாதியில் நின்றுபோன தலைமைச் செயலகம், உயர் நீதிமன்ற கட்டிடம், உயர் அதிகாரிகளுக்கான குடியிருப்பு உள்ளிட்ட கட்டிடங்களை நிபுணர் குழுவினர் ஆய்வு செய்தனர். கடந்த 5 ஆண்டுகளாக இக்கட்டிடங்கள் வெயிலில் காய்ந்தும், மழையில் நனைந்தும் பாழாகியுள்ளன.
ஆதலால் இதே கட்டிடங்களை சரிசெய்து கட்டுமானப் பணியை தொடரலாமா அல்லது முழுவதுமாக இடித்து விட்டு புதிதாக கட்ட வேண்டுமா என்பது குறித்து ஆய்வறிக்கை அளிக்க உள்ளனர். அமராவதிக்கான பணிகள் தொடங்கப்பட்டிருப்பதால் ஆந்திர மக்களுக்கு தலைநகர் மீதான நம்பிக்கை துளிர்விடத் தொடங்கிஉள்ளது.