இந்தூர்: மத்தியப் பிரதேசத்தில் மத நிகழ்வில் சுற்றுச்சுவர் இடிந்து விழுந்ததில் 9 குழந்தைகள் உயிரிழந்தனர். மத்தியப் பிரதேச மாநிலம் சாகர் மாவட்டம் ஷாபூர் கிராமத்தில் இத்துயரச் சம்பவம் நடந்துள்ளது.
இது தொடர்பாக சாகர் பகுதி காவல் ஆணையர் வீரேந்திரா சிங் ராவத் கூறுகையில், “எங்களுக்குக் கிடைத்த தவலின்படி சாகர் மாவட்டம் ஷாபூரில் நடந்த ஹர்தல் பாபா மத நிகழ்வின்போது நிகழ்ச்சி நடந்த அரங்கின் சுற்றுச்சுவர் இடிந்து விழுந்ததில் இந்த விபத்து நடந்துள்ளது. இதுவரை 9 குழந்தைகள் உயிரிழந்ததும் உறுதியாகியுள்ளது. அவர்கள் அனைவரும் 10 முதல் 15 வயதுக்கு உட்பட்டவர்களாவர்.” என்றார்.
இந்த விபத்தில் காயமடைந்தவர்கள் மீட்கப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். சம்பவ இடத்தில் உடனடியாக காவல்துறை, உள்ளூர்வாசிகள் இடிபாடுகளை அகற்றினர். தொடர்ந்து மீட்புப் பணிகள் நடைபெற்று வருகின்றன.
இந்நிலையில் விபத்து குறித்து முதல்வர் மோகன் யாதவ் கூறுகையில், “விபத்தில் காயமடைந்தவர்கள் விரைவில் மீண்டுவர வாழ்த்துகிறேன். உயிரிழந்தோரின் குடும்பங்களுக்கு எனது ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்கிறேன். அரசு சார்பில் உயிரிழந்தோரின் குடும்பங்களுக்கு தலா ரூ.4 லட்சம் இழப்பீடு வழங்கப்படும்” என்று கூறியுள்ளார்.
கடந்த ஜூலை மாதம் உத்தரப் பிரதேசத்தில் ஒரு வழிபாட்டு நிகழ்ச்சியின்போது ஏற்பட்ட கூட்ட நெரிசலில் சிக்கி 120க்கும் மேற்பட்டோர் உயிரிழந்தனர் என்பது நினைவுகூரத்தக்கது.