மதுரை: “இலங்கை யாழ்ப்பாண தமிழர்களைப் போல் தமிழ் மண்ணில் பிறந்தவர்கள் தமிழை நேசிக்கவில்லை. கொண்டாடவில்லை” என உயர் நீதிமன்ற நீதிபதி ஆர்.சுரேஷ்குமார் பேசினார்.
உயர் நீதிமன்ற மதுரை அமர்வின் மதுரை வழக்கறிஞர்கள் சங்கம் (எம்பிஏ) சார்பில் வழக்கறிஞர் கா.பிரபுராஜதுரை எழுதியுள்ள ‘நும்மினும் சிறந்தது நுவ்வை’ என்ற நூல் அறிமுக விழா நீதியரசர் கே.சுகுணா அரங்கத்தில் நடைபெற்றது. விழாவுக்கு எம்பிஏ சங்கத் தலைவர் எம்.கே.சுரேஷ் தலைமை வகித்தார். பொதுச் செயலாளர் ஆர்.வெங்கடேசன் வரவேற்றார்.
இதில் நீதிபதி ஆர்.சுரேஷ்குமார் பேசியதாவது: ஆங்கிலம் பிழைப்புக்கான மொழி. ஆங்கில மொழியை தவிர்த்துவிட்டு பிழைப்பு நடந்த முடியாத அளவுக்கு ஆங்கிலம் நம் வாழ்வுடன் இரண்டறக் கலந்துவிட்டது. பிழைப்பு என்ற விஷயத்தை தாண்டி பிறப்பு, வளர்ப்பு, வாழ்க்கை, முகவரி என வரும்போது நமக்கு துணை வருவது தமிழ் தான்.
நமக்கு முகவரியாகவும், முகமாகவும் இருக்கும் தமிழ் மொழியை கற்க வேண்டும். அதற்காக தமிழில் புலமை பெற வேண்டிய அவசியம் இல்லை. எண்ணிலடங்கா தமிழ் இலக்கியத்தில் எதாவது ஒரு இலக்கியத்தை படித்துவிட்டாலே பிறந்த பலனை அடைந்ததாக அர்த்தம்.
தமிழ் செம்மொழி. பல செம்மொழிகளில் இருந்து எடுக்கப்பட்ட சொற்களை வைத்து தான் ஆங்கில மொழி உருவாக்கப்பட்டுள்ளது. அந்த ஆங்கில மொழி உலகளவில் ஆட்சிமொழியாக மாறி உலகை ஆட்டிப்படைத்துக் கொண்டிருக்கிறது. சீனா, ஜப்பான் உட்பட பல்வேறு ஐரோப்பிய நாடுகளில் ஆங்கிலம் பேச்சு வழக்கு, எழுத்து மொழியாக இல்லை. அவர்களின் மொழி தான் ஆட்சி செய்கிறது.
வெள்ளைக்காரன் ஆங்கிலத்தை கல்வியில் புகுத்தியதால் வழிவழியாக ஆங்கிலத்தை கற்று வருகிறோம். அனைத்து சட்டங்களும் ஆங்கிலத்தில் தான் உள்ளது. அனைத்து நீதிமன்றங்களிலும் வழக்காடு மொழியாகவும் ஆங்கிலம் தான் உள்ளது. தற்போது வழக்காடு மொழியாக தமிழ் வர வேண்டும் என கோரிக்கை வைக்கிறோம்.
தற்போது நம்மால் முழுமையாக தமிழில் எழுதி வழக்கு தாக்கல் செய்ய முடியுமா? முழுமையாக தமிழில் வாதாட முடியுமா? அந்தளவுக்கு தமிழ் நூல்கள் உள்ளதா? இருக்கும் ஒன்றிரண்டு தமிழ் நூல்களை படித்திருக்கிறீர்களா? என பல்வேறு கேள்விகள் எழுகின்றன. இது தான் நம் நிலை.
இதை கொஞ்சம் கொஞ்மாக மாற்ற தமிழ் மீது பார்வை, நாட்டம், ஈர்ப்பு வர வேண்டும். இன்றைய தொலைக்காட்சி, பத்திரிகைகள், மேடை பேச்சாளர்களை நம்பி தமிழ் மீது நாட்டம் கொள்ள முடியுமா? அவர்கள் பேசுவது முழுவதும் தமிழ் அல்ல. முழுக்க முழுக்க தமிழில் பேசுவது, உரையாடுவது, அலுவல் பணி தவிர அனைத்து செயல்களையும் தமிழில் செய்வதும், தமிழை பரப்புவதும் இலங்கையை சேர்ந்த யாழ்ப்பாண தமிழர்கள் தான். யாழ்ப்பாபண தமிழர்களை போல் தமிழ் மண்ணில் பிறந்தவர்கள் தமிழை நேசிக்கவில்லை, கொண்டாடவில்லை.
இந்த நிலை மாற பொதுக் கருத்தை உருவாக்க வேண்டும். அந்த பொறுப்பு வழக்கறிஞர்களுக்கு உள்ளது. வழக்கறிஞர்கள் தான் அனைத்து துறைகளிலும் கோலோச்ச முடியும். பல பரிமாணங்களில் இருப்பவர்கள் வழக்கறிஞர்கள் மட்டுமே. சமூகத்தை வழிநடத்தும் வல்லமை கொண்டவர்கள் வழக்கறிஞர்கள். அப்படிப்பட்ட வழக்கறிஞர்கள் தாய் மொழி மீதான நாட்டததை முன்னெடுத்து செல்ல வேண்டும். தமிழை உள்வாங்கவும், ஈடுபாடு கொள்ளவும் வேண்டும்.
தமிழ் இலக்கியங்களை படிக்க வேண்டும். திருக்குறளை படித்தால் கொஞ்சம் கொஞ்சமாக தமிழ் மீது பற்றும், ஈர்ப்பும் வரும்.. இவ்வாறு நீதிபதி பேசினார்.
நீதிபதிகள் நக்கீரன், பரதசக்கரவர்த்தி, அருள்முருகன் மற்றும் வழக்கறிஞர்கள் பங்கேற்றனர். எம்பிஏ பொருளாளர் சுரேஷ்குமார் ஐசக் பால் நன்றி கூறினார்.