திருப்புல்லாணி கோயில் நகைகள் மாயமான விவகாரம்; ஸ்தானிகரின் முன்ஜாமீன் மனுவைத் தள்ளுபடி செய்த கோர்ட்!

ராமநாதபுரம் அருகே உள்ளது திருப்புல்லாணி. இங்குள்ள ஆதிஜெகநாத பெருமாள் கோயில் பிரசித்தி பெற்றதாகும். ராமநாதபுரம் சமஸ்தானத்திற்கு சொந்தமான இந்த கோயிலில் சுமார் 75 லட்சம் மதிப்பிலான தங்கம் மற்றும் வெள்ளியிலான நகைகள் மாயமாகின. நகைகள் உள்ள கருவூல பெட்டகத்தின் சாவி கோயிலின் ஸ்தானிகர் (பூசாரி) ஶ்ரீனிவாச அய்யங்கார் வசம் இருந்த நிலையில் நகைகள் மாயமானதால், அவர்மீது சமஸ்தான திவான், குற்றப்பிரிவு போலீஸில் புகார் அளித்தார். இதையடுத்து ஶ்ரீனிவாச அய்யங்கார் மீது வழக்கு பதிவுசெய்யப்பட்டது. இந்நிலையில் தனக்கு முன்ஜாமீன் கோரி ஶ்ரீனிவாச அய்யங்கார் மதுரை உயர் நீதிமன்றக் கிளையில் மனு தாக்கல் செய்திருந்தார்.

இந்த மனுவை விசாரித்த நீதிபதி புகழேந்தி, “ராமநாதபுரம் சமஸ்தான நிர்வாகத்தின் கீழ் மாநிலம் முழுவதும் 111 கோயில்கள் உள்ளன. வழக்கமான பூஜைகளுக்குத் தேவையான நகைகள் தவிர மற்றவை சமஸ்தான கருவூலத்தில் தனி பெட்டகத்தில் பராமரிக்கப்படுகிறது. இதன் சாவிகள் கோயில் ஸ்தானிகர்களிடம் உள்ளன. மேலும் கோயிலில் தினசரி பயன்படுத்தும் நகைகளும் ஸ்தானிகர் வசம் உள்ளது. அனைத்து கோயில் நகைகளும் சமஸ்தான பாதுகாப்பு அறையில் வைக்கப்பட்டிருக்கும் நிலையில், ஸ்தானிகர் மட்டுமே அங்கு சென்று திருப்புல்லாணி ஆதிஜெகநாத பெருமாள் கோயிலின் நகை பெட்டகத்தை திறப்பது வழக்கம். நகைகள் எடுக்கும் போதும், திரும்ப அங்கு வைக்கும் போதும் நகைகள் கோயில் அலுவலர்களால் பதிவு செய்யப்பட்டு சரி பார்க்கப்படுகின்றன.

திருப்புல்லாணி ஆதிஜெகந்நாத பெருமாள் கோயில்

ஸ்தானிகர் பதவியில் இருப்பவர் பரம்பரை வழியாக அந்த பதவியை வகிப்பதால் அவர் பெட்டக அறையில் இருந்து வெளியே வரும் போது தனிப்பட்ட முறையில் சோதனை நடத்தப்படுவதில்லை. இந்த வாய்ப்பை பயன்படுத்தி ஸ்தானிகர், கோயில் நகைகளை அபகரித்துள்ளார். நகைகள் காணாமல் போனதற்கு பொறுப்பேற்பதாகவும், அவற்றை திரும்ப ஒப்படைப்பதாகவும் புகார்தாரரிடம் ஸ்தானிகர் கடிதம் கொடுத்துள்ளார். ஆனால் அவர் நகைகளை திரும்ப தரவில்லை. இதையடுத்து அவர் சஸ்பெண்ட் செய்யப்பட்டார்.

ஆதிஜெகநாத பெருமாள் கோயில்

ஏற்கெனவே அசல் நகைகளுக்கு பதிலாக போலி நகைகளை ஸ்தானிகர் வைத்தது கண்டுபிடிக்கப்பட்டது. அப்போது மன்னிப்பு கோரிய ஸ்தானிகர் அசல் நகைகளை திருப்பி கொடுத்துள்ளார். அப்போது அவர்மீது வழக்கு பதிவு செய்யப்படவில்லை. இந்நிலையில் ஸ்தானிகர் கடந்த ஆண்டு மார்ச் 27-ல் சுவாமியை அலங்கரிக்க 19 பொருள்களை எடுத்துள்ளார். அவருக்கு தெரியாமல் கோயில் நகைகள் காணாமல் போக வாய்ப்பில்லை. அவரிடம் உள்ள சாவியை கொண்டுதான் நகைபெட்டகத்தை திறக்க முடியும். அவர் தனது அதிகாரத்தை தவறாக பயன்படுத்தி 75 லட்சம் மதிப்புள்ள கோயில் நகைகளை அபகரித்துள்ளார் என தெளிவாகிறது. அவரை காவலில் எடுத்து விசாரித்தால்தான் நகைகளை மீட்க முடியும். எனவே அவரது முன்ஜாமீன் மனு தள்ளுபடி செய்யப்படுகிறது.

உயர் நீதிமன்ற மதுரைக் கிளை

கடவுளுக்குச் சொந்தமான சொத்துகளை முறையாக பராமரிக்கும் பொறுப்பு சமஸ்தானத்திற்கு உள்ளது. எனவே இது போன்ற சம்பவங்களை தடுக்க கருவூல நுழைவு வாயிலுக்கு இரட்டை பூட்டு முறை இருந்தாலும் ஸ்தானிகர்கள் நகைகளை கையாள்வதை கண்காணிக்க, கண்காணிப்பு கேமராக்களை நிறுவ வேண்டும். மேலும் அந்தந்த கோயில்களில் தனித்தனி பாதுகாப்பு லாக்கர்கள் ஏற்படுத்த வேண்டும். கோயில் சொத்துகளை பாதுகாக்கும் பொறுப்புள்ள அறநிலையத்துறை அவ்வப்போது நகைகள் மற்றும் பொருள்களை ஆய்வு செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும்” என உத்தரவிட்டார்.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.