கேஎல் ராகுல் நீக்கம்! பிளேயிங் 11ல் ரியான் பராக்! 3வது போட்டிக்கான இந்திய அணி!

India vs Sri Lanka: இந்திய கிரிக்கெட் அணி இலங்கைக்கு எதிரான ஒருநாள் தொடரில் மோசமாக விளையாடி வருகிறது. மூன்று போட்டிகள் கொண்ட டி20 தொடரை 3-0 என்று வென்று இருந்த போதிலும், ஒருநாள் போட்டியில் தோல்வியை சந்தித்துள்ளது. அடுத்த ஆண்டு சாம்பியன்ஸ் டிராபி நடைபெற உள்ள நிலையில், இந்த தொடரில் தோல்வி அடைந்தால் பெரிய பாதிப்பாக அமையும். வரும் புதன்கிழமை ஆகஸ்ட் 7ம் தேதி இலங்கைக்கு எதிராக கடைசி ஒருநாள் போட்டியில் இந்திய அணி விளையாட உள்ளது. இந்த போட்டியில் கண்டிப்பாக வெற்றி பெற வேண்டிய கட்டாயத்தில் இந்தியா உள்ளது. ஆகஸ்ட் 2ம் தேதி நடைபெற்ற முதல் ஒருநாள் போட்டி எதிர்பாராத விதமாக டையில் முடிந்தது.

 

இதனை தொடர்ந்து ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற இரண்டாவது ஒருநாள் போட்டியில் 32 ரன்கள் வித்தியாசத்தில் இந்தியா தோல்வியடைந்தது. இதனால் தொடரில் இலங்கை அணி 1-0 என முன்னிலையில் உள்ளது. கடந்த 27 ஆண்டுகளில் ஒருமுறை கூட இலங்கை அணி ஒருநாள் தொடரை இந்தியாவிற்கு எதிராக வென்றதில்லை. கடைசியாக 1997ம் ஆண்டு தான் இலங்கை அணி ஒரு ஒருநாள் தொடரில் இந்தியாவை வீழ்த்தி இருந்தது. எனவே இந்த சாதனையை ரோஹித் ஷர்மா தலைமையிலான இந்திய அணி முறியடிக்க விடாமல் பார்த்து கொள்ளும். மூன்றாவது ஒருநாள் போட்டியில் வெற்றி பெற்று தொடரை 1-1 சமன் செய்ய அதிக முயற்சிகளை மேற்கொள்ளும். முதல் இரண்டு போட்டிகளில் மாற்றம் இல்லாமல் களமிறங்கிய இந்திய அணியில் 3வது போட்டியில் சில மாற்றங்கள் இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. 

இந்திய அணியின் தோல்விக்கு காரணமாக பேட்டிங் ஆர்டரை மாற்றியது தான் என்று கூறப்படுகிறது. ஒருநாள் தொடரின் முதல் இரண்டு ஆட்டங்களில் வாஷிங்டன் சுந்தர் நான்காவது இடத்தில் களமிறங்கினார். அதே சமயம் ஷிவம் துபே தாமதமாக களமிறங்கினார். மேலும் இரண்டாவது போட்டியில் அக்சர் படேல் ஐந்தாவது இடத்தில் களமிறங்கினார். இதனால் ஷ்ரேயாஸ் ஐயர் மற்றும் கேஎல் ராகுல் மாற்றி களமிறக்கப்பட்டனர். ஆனால் இந்த மாற்றம் தோல்வியில் தான் முடிந்தது. இந்நிலையில் 3வது ஒருநாள் போட்டியில் மிடில் ஆர்டரில் ரிஷப் பண்ட் மீண்டும் களமிறங்க வாய்ப்புள்ளது. சமீபத்தில் நடந்து முடிந்த டி20 உலக கோப்பையில் பந்த் சிறப்பாக விளையாடி இருந்தார்.

ரிஷப் பந்த் கேஎல் ராகுல் அல்லது ஐயருக்கு பதில் அணியில் இடம் பெற வாய்ப்புள்ளது. மேலும் முதல் போட்டியில் எட்டாவது இடத்தில் களமிறங்கிய சிவம் துபே சில முக்கியமான சிக்சர்களை அடித்தார். ஆனால் இரண்டாவது போட்டியில் டக் அவர் ஆனார். இந்நிலையில் அவருக்கு பதில் ரியான் பராக் அணியில் இடம் பெற வாய்ப்புள்ளது. மேலும் இலங்கை மைதானம் ஸ்பின்னர்களுக்கு உதவுவதால் ரியான் பராக் சிறந்த தேர்வாக இருப்பார். பவுலிங்கில் அர்ஷ்தீப்க்கு பதிலாக ஹர்ஷித் ராணா அறிமுகமாக வாய்ப்புள்ளது. ஐபிஎல் 2024ல் கொல்கத்தா அணிக்காக விளையாடிய இவர் சிறப்பாக பந்து வீசி இருந்தார்.

இந்தியாவின் உத்ததேச அணி: ஷுப்மான் கில், ரோஹித் சர்மா, விராட் கோலி, ரிஷப் பந்த், ஷ்ரேயாஸ் ஐயர், ரியான் பராக், வாஷிங்டன் சுந்தர், அக்சர் படேல், குல்தீப் யாதவ், ஹர்ஷித் ராணா, சிராஜ்

 

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.