டாக்கா: வங்கதேச பயணத்தைத் தவிர்க்கும்படி இந்தியர்களுக்கு வெளியுறவு அமைச்சகம் பயண எச்சரிக்கை விடுத்துள்ளது. மேலும், வங்கதேசத்தில் இருக்கும் இந்தியர்களின் உதவிக்காக உதவி எண்களையும் அறிவித்துள்ளது.
பிரதமர் ஷேக் ஹசீனா பதவி விலகக் கோரி வங்கதேசத்தில் மாணவர்கள் நேற்று (ஞாயிற்றுக்கிழமை) நடத்திய போராட்டத்தில் போலீஸார் உள்பட 98 பேர் உயிரிழந்துள்ளனர். இந்நிலையில், வங்கதேச பயணத்தைத் தவிர்க்கும்படி இந்தியர்களுக்கு வெளியுறவு அமைச்சகம் பயண எச்சரிக்கை விடுத்துள்ளது.
இது தொடர்பான தகவலை வெளியுறவு அமைச்சக செய்தித் தொடர்பாளர் ரன்தீர் ஜெய்ஸ்வால் தனது எக்ஸ் சமூகவலைதளத்தில் பகிர்ந்துள்ளார். அதில், “வங்கதேசத்தில் நிலவும் தற்போதைய சூழலைக் கருத்தில் கொண்டு அடுத்த அறிவிப்பு வரும் வரை இந்தியர்கள் வங்கதேசத்துக்குச் செல்வதை தவிர்க்கும்படி கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள். மேலும் வங்கதேசத்தில் இப்போது இருக்கும் இந்தியர்கள் மிகுந்த எச்சரிக்கையுடன் இருக்கும்படி கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள். வெளியில் செல்வதைத் தவிர்க்கும்படி அறிவுறுத்தப்படுகிறார்கள். டாக்காவில் உள்ள இந்திய துணை தூதரகத்துடன் தொடர்பில் இருக்கும்படி வலியுறுத்தப்படுகிறார்கள். தேவைப்படும் நபர்கள் +8801958383679, +8801958383680 +8801937400591 எண்களைத் தொடர்பு கொள்ளலாம்.” எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஐ.நா. மனித உரிமைகள் அமைப்பு கவலை: வங்கதேசத்தில் நிலவும் அதிர்ச்சியூட்டும் வன்முறை உடனடியாக முடிவுக்குக் கொண்டுவரப்பட வேண்டும் என ஐ.நா.வின் மனித உரிமைகள் அமைப்பின் தலைவர் வோல்கர் டர்க் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக வோல்கர் டர்க் வெளியிட்டுள்ள அறிக்கையில், “வங்கதேசத்தின் அதிர்ச்சியூட்டும் வன்முறை உடனடியாக நிறுத்தப்பட வேண்டும். அரசாங்கம் அமைதிப் போராட்டங்களை ஒடுக்கக் கூடாது” என்று வலியுறுத்தியுள்ளர்.
கலவர பின்னணி: கடந்த 1971-ம் ஆண்டு வங்க தேசத்தின் விடுதலைப் போராட்டத்தில் உயிரிழந்த படைவீரர்களின் குடும்பத்தினருக்கு அரசு வேலை வாய்ப்புகளில் 30 சதவீதம் இடஒதுக்கீடு வழங்க வேண்டும் என்ற நீதிமன்றத்தின் தீர்ப்பை எதிர்த்து கடந்த ஜூலை மாதம் மாணவர்கள் போராட்டத்தில் குதித்தனர் போராட்டக்காரர்கள் மீது காவல்துறையினர் நடத்திய தாக்குதலில் 200-க்கும் மேற்பட்டோர் உயிரிழந்தனர்.
இந்நிலையில், போலீஸை ஏவி போராட்டக்காரர்களைக் கொன்றதற்கு நீதி கேட்டு நேற்று பல்லாயிரக்கணக்கான மாணவர்கள், வங்கதேச தலைநகர் டாக்காவின் மத்திய சதுக்கத்தில் குவியத் தொடங்கினர். மேலும், பல்வேறு நகரங்களிலும் வங்கதேச போராட்டம் வெடித்தது. பிரதமர் ஷேக் ஹசீனா பதவி விலக வேண்டும் என்று கோரிக்கை விடுத்துள்ள போராட்டக்காரர்கள், இனி மக்கள் யாரும் அரசுக்கு வரி செலுத்தக் கூடாது என்றும், அரசு ஊழியர்கள் மற்றும் மற்றும் ஜவுளித் துறை தொழிலாளர்கள் வேலை நிறுத்தம் மேற்கொள்ள வேண்டும் என்றும் நாடு தழுவிய ஒத்துழையாமை போராட்டத்துக்கு அழைப்பு விடுத்தனர்.
கட்டிடங்கள், வாகனங்களுக்கு போராட்டக்காரர்கள் தீவைத்தனர். போராட்டத்தைக் கட்டுப்படுத்த காவல் துறையினர் கையெறி குண்டுகளை வீசினர். போராட்டக்காரர்களும் போலீஸார் மீது பதில் தாக்குதல் நடத்தினர். இதில் 14 போலீஸார் உயிரிழந்தனர்.
இந்நிலையில், நேற்று முப்படை தளபதிகள், காவல் துறை தலைவர் உட்பட பல்வேறு பாதுகாப்பு அதிகாரிகளை சந்தித்து ஆலோசனை நடத்திய பிரதமர் ஷேக் ஹசீனா “அரசுக்கு எதிராக போராட்டத்தில் ஈடுபட்டிருப்பவர்கள் மாணவர்கள் இல்லை. அவர்கள் தீவிரவாதிகள். நாட்டை சீர்குலைக்கும் நோக்கில் அவர்கள் இந்தப் போராட்டத்தில் இறங்கியுள்ளனர். மக்கள் இந்த நாச வேலையை இரும்புக் கரம் கொண்டு அடக்க வேண்டும்” என தெரிவித்துள்ளார். நாடு முழுவதும் ஊரடங்கு உத்தரவு அமல்படுத்தப்பட்டுள்ளது.