மலை உச்சியில் செல்ஃபி; 100 அடி பள்ளத்தில் விழுந்து `உயிர் தப்பிய' இளம்பெண்! – மீட்கப்பட்டது எப்படி?

மகாராஷ்டிரா மாநிலத்தில், மீண்டும் கனமழை பெய்து வருகிறது. புனேயில் நேற்று பெய்த கனமழையால் மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது. மழை நீர் பொதுமக்கள் குடியிருப்புக்குள் புகுந்தது. இதனால் மாவட்ட நிர்வாகமும், தேசிய பேரிடர் மீட்புப் படையும் இணைந்து படகுகள் மூலம் பொதுமக்களை மீட்டன.

புனேயில் பெரும்பாலான ஆறுகளில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. இதனால் ஆற்றில் தவறி விழுந்து 5 பேர் உயிரிழந்தனர். தாழ்வான பகுதிகளில் வசிக்கும் மக்கள் பத்திரமாக வேறு இடத்திற்கு மாற்றப்பட்டுள்ளனர். சதாரா மாவட்டத்தில் உள்ள வார்ஜே என்ற இடத்தைச் சேர்ந்த நஸ்‌ரீன் அமீர் (29) என்ற பெண், தனது தோழிகளுடன் சதாராவில் உள்ள தோசேகர் நீர்வீழ்ச்சிக்குச் சென்றார். அவர்கள் நீர்வீழ்ச்சியில் குளித்து விளையாடிவிட்டு மலையில் இருந்து கீழே இறங்கிக் கொண்டிருந்தனர். வரும் வழியில் பொர்னே கட் என்ற இடத்தில் நின்று அவர்கள் புகைப்படம் எடுத்துக்கொண்டிருந்தனர். அவர்கள் அங்குள்ள மலை உச்சியில் நின்று செல்ஃபி எடுத்துக்கொண்டிருந்தனர்.

மீட்பு

அந்நேரம் கால் தவறி நஸ்‌ரீன் 100 அடி பள்ளத்திற்குள் விழுந்தார். உடனே அவரது தோழிகள் உதவி கேட்டு கத்தினர். ஊர்க்காவல் படையினரும், உள்ளூர் மக்களும் சம்பவ இடத்திற்கு வந்தனர். பள்ளத்தில் விழுந்த நஸ்‌ரீன் ஒரேடியாக கீழே விழுாமல் மரக்கிளை ஒன்றை பிடித்துக்கொண்டு தொங்கிக்கொண்டிருந்தார். எந்நேரமும் கீழே விழலாம் என்ற சூழ்நிலை இருந்தது. ஊர்க்காவல் படை வீரர் அவினாஷ் தனது உயிரைப் பற்றி கவலைப்படாமல் கயிறு கட்டி கீழே இறங்கினார். கீழே மரத்தில் தொங்கிக்கொண்டிருந்த பெண்ணை பத்திரமாக மேலே கொண்டு வந்தார்.

அப்பெண் உடனே மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். அதிஷ்டவசமாக நஸ்‌ரீன் உயிர் தப்பித்து இருக்கிறார். ஆனால் அவரது உடல் நிலை மருத்துவமனையில் மோசமாக இருக்கிறது. மழை அதிகமாக பெய்வதால் சுற்றுலா பயணிகள் மலைகளில் இருக்கும் நீர்விழ்ச்சிக்குச் செல்லவேண்டாம் என்று மாநில அரசு கேட்டுக்கொண்டுள்ளது. ஆனால் சுற்றுலா பயணிகள் தடையை மீறி மாற்றுப்பாதையில் மலைக்குச் சென்றுவிடுகின்றனர்.

கடந்த மாதம் ராய்கட் மாவட்டத்தில் இதே போன்று சோசியல் மீடியா பிரபலம் அன்வி என்ற பெண் மலை உச்சியில் இருந்து பள்ளத்தில் விழுந்து பரிதாபமாக உயிரிழந்தார். மழைகால சுற்றுலா சென்ற போது இந்த துயரச் சம்பவம் நடந்தது.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.