விஜய்யின் ‘கோட்’ படத்தின் ‘ஸ்பார்க்’ பாடல் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் தீப்பொறியைப் பற்றவைத்துக்கொண்டிருக்கிறது.
‘அவ கண்ணால பார்த்தா ஒரு ஸ்பார்க்கு… என் முன்னால நடந்தா கேட் வாக்கு…ஹே ஃபீல் இட்… ஹே டச் இட்’ என 2கே கிட்களை வைப் ஆக்கி சமூக வலைதளத்திலும் வைரல் ஆகிக்கொண்டிருக்கிறது. ’கோட்’ படத்தின் ஃபர்ஸ்ட் சிங்கிள் மதன் கார்க்கி, இரண்டாவது பாடல் கபிலன் வைரமுத்து வரிகளில் வெளியான நிலையில், தற்போது மூன்றாவது பாடலான ‘ஸ்பார்க்’ கங்கை அமரனின் வரிகளில் வெளியாகியிருக்கிறது. ”இப்படி, விஜய் ரசிகர்களையும் 2கே கிட்ஸ்களையும் ஆட்டம் போடவைக்கும் அளவுக்கு இளைமை துள்ளலோடு எழுதியது எப்படி?” என கங்கை அமரனிடம் கேட்டேன்.
”‘ஸ்பார்க்’ பாடலை எல்லோரும் கொண்டாடுறது ரொம்ப சந்தோஷமா இருக்கு. நான் ஆயிரக்கணக்கான பாடல்களை எழுதியிருக்கேன். அந்த வரிசையில இந்தப் பாட்டும் ஒண்ணு. அவ்ளோதான். மற்றபடி, விஜய்ங்குற ஒரு பெரிய ஹீரோவுக்கு நான் முதன் முதலா எழுதுற பாட்டு இது. அதுதான், இந்தப் பாட்டோட ஸ்பெஷல். விஜய்யும் எனக்கு ஒரு மகன் மாதிரிதான். அதனால, அவருக்கு எழுதினதுல மகிழ்ச்சி.
இந்தப் பாட்டு எழுதினதை நான் மறந்தே போய்ட்டேன். ஏன்னா, பாட்டு ரெக்கார்ட் பண்ணி ரொம்பநாள் ஆச்சு. ரிலீஸானபிறகு இப்போதான், திரும்பக் கேட்டேன். ரொம்ப சூப்பரா இருக்கு. ரைமிங், வார்த்தைகள் எல்லாமே கரெக்டா இருக்கு. பாட்டு ரெக்கார்டு பண்ணும்போதே பாட்டு நல்லாருக்குன்னு விஜய் சொல்லிட்டாரு. இந்தப் பாடல் எழுதும் வாய்ப்பு எனக்கு வந்தப்போ, உடம்பு சரியில்லாததால எனக்கு இந்த ஒரேயொரு பாட்டு போதும்ப்பா. மற்றவங்களை எழுத வைன்னு சொல்லிட்டேன். அதுக்கப்புறம்தான், வைரமுத்து மகன்கள் எழுதினாங்க.
அதேமாதிரி, 2கே கிட்ஸுக்குன்னு மையப்படுத்தி எழுதல. யுவன் பாடலுக்கான சூழலைச் சொல்லி இப்படி வேணும் அப்படி வேணும்னு என்கிட்ட பாடல் வரிகள் கேட்கல. ட்யூனை அனுப்பி அதுக்கு ஏத்தமாதிரி வரிகள் வேணும்னு கேட்டார். அதுக்கேத்தமாதிரி, 10 நிமிடத்துல எழுதி அனுப்பிட்டேன்.
நான் பொதுவாவே, பத்து பதினஞ்சு நிமிசத்துலயே பாடல்களை எழுதிடுவேன். என் எல்லா பாடல்களும் அப்படித்தான். எனக்கு எப்படி படம் இயக்க வருதோ, இசையமைக்க வருதோ அப்படித்தான் பாட்டு எழுதுறதும். இது, என்னோட வேலை. ரசிகர்களுக்காகத்தான் எழுதுறோமே தவிர, எங்களுக்காக எழுதுறது இல்ல. நாம எழுதுறதை மக்கள் கொண்டாடுறது சந்தோஷம்தானே? ” என்கிறார்.