டெல் அவிவ்: கடந்த 1972- ஆண்டு ஆகஸ்ட், செப்டம்பரில் ஜெர்மனியின் முனிச் நகரில் ஒலிம்பிக் போட்டிகள் நடைபெற்றன. அங்கு அமைக்கப்பட்டிருந்த ஒலிம்பிக் கிராமத்தில் பல்வேறு நாடுகளின் வீரர்கள் தங்கியிருந்தனர்.
கடந்த 1972 செப்டம்பர் 5-ம் தேதி அதிகாலை, இஸ்ரேல் வீரர்கள் தங்கியிருந்த விடுதியில் பாலஸ்தீன விடுதலை இயக்கத்தை சேர்ந்த 8 தீவிரவாதிகள் ஏகே47 துப்பாக்கிகளுடன் நுழைந்து திடீர் தாக்குதல் நடத்தினர். இதில் இஸ்ரேல் பயிற்சியாளர், வீரர் என 2 பேர் உயிரிழந்தனர். 9 பேர் பிணைக்கைதிகளாக பிடித்து வைக்கப்பட்டனர்.
பிணைக்கைதிகளை விடுவிக்க இஸ்ரேல் சிறையில் இருந்த 234 பாலஸ்தீன தீவிரவாதிகளை விடுதலை செய்ய தீவிரவாதிகள் நிபந்தனை விதித்தனர். இதை அப்போதைய இஸ்ரேலிய பிரதமர் கோல்டா மேயர் ஏற்கவில்லை. பல்வேறு கட்ட பேச்சுவார்த்தைகளுக்குப் பிறகு பிணைக்கைதிகளோடு எகிப்து தலைநகர் கெய்ரோவுக்கு தீவிரவாதிகள் தப்பிச் செல்ல ஏற்பாடு செய்யப்பட்டது.
இதனிடையே விமான நிலையத்தில் தீவிரவாதிகள் மீது தாக்குதல் நடத்தி பிணைக்கைதிகளை மீட்க ஜெர்மன் காவல் துறை ரகசிய திட்டத்தை தீட்டியிருந்தது. ஆனால் இந்த திட்டம் தோல்வியில் முடிந்தது. தீவிரவாதிகளுக்கும் ஜெர்மனி காவல் துறையினருக்கும் இடையே கடுமையான துப்பாக்கி சண்டை நடைபெற்றது. இதில் தீவிரவாதிகளில் 5 பேர் கொல்லப்பட்டனர். 3 பேர் பிடிபட்டனர். ஆனால் இஸ்ரேலின் ஒலிம்பிக் வீரர்கள், பயிற்சியாளர்கள் அனைவரையும் தீவிரவாதிகள் கொலை செய்துவிட்டனர். ஒட்டுமொத்தமாக 6 இஸ்ரேலிய பயிற்சியாளர்கள், 5 வீரர்கள் உயிரிழந்தனர். ஜெர்மனி காவல்துறை அதிகாரி ஒருவரும் உயிரிழந்தார்.
முனிச் ஒலிம்பிக் படுகொலைக்கு பழிவாங்க இஸ்ரேலின் அப்போதைய பிரதமர் கோல்டா மேயர் உத்தரவிட்டார். இந்த பணி இஸ்ரேலின் உளவுப் படையான மொசாட்டிடம் ஒப்படைக்கப்பட்டது. மொசாட் டின் ரகசிய நடவடிக்கைக்கு ‘கடவுளின் கடும் கோபம்’ என்று பெயரிடப்பட்டது.
பாலஸ்தீன விடுதலை இயக்கத்தின் கருப்பு செப்டம்பர் பிரிவை சேர்ந்த தீவிரவாத தலைவர்கள் அடுத்தடுத்து குறிவைத்து கொல்லப்பட்டனர். கடந்த 1972-ம் ஆண்டு தொடங்கி பல ஆண்டுகள் பழிவாங்கும் நடவடிக்கை நீடித்தது. கடந்த 1972 அக்டோபர் 16-ல் இத்தாலி தலைநகர் ரோமில், கருப்பு செப்டம்பர் தீவிரவாத பிரிவை சேர்ந்த அப்தெல் வால் ஸ்வைட்டர் சுட்டுக் கொல்லப்பட்டார்.
கடந்த 1972 டிசம்பர் 8-ம் தேதி பிரான்ஸ் தலைநகர் பாரிஸில் மஹ்முத் ஹம்சாரி என்பவர் வெடிகுண்டு தாக்குதல் மூலம் கொல்லப்பட்டார். கடந்த 1973 ஜனவரி 24-ம் தேதி சைப்ரஸ் நாட்டில் ஹுசைன் அயாத் அல்-சிர் என்பவர் வெடிகுண்டு தாக்குதல் மூலம் கொல்லப்பட்டார். கடந்த 1972 ஏப்ரல் 10-ம் தேதி லெபனான் நாட்டின் தலைநகர் பெய்ரூட்டில் முகமது யூசுப் அல்-நஜார், கமல் அட்வான், கமல் நாசர் ஆகியோர் ஒரே நேரத்தில் கட்டுக் கொல்லப்பட்டனர். கடந்த 1979-ம் ஆண்டு ஜனவரி 22-ம் தேதி லெபனான் தலைநகர் பெய்ரூட்டில் அலி ஹாசன் சலாமே என்பவர் கார் வெடிகுண்டு மூலம் கொல்லப்பட்டார்.
பிரான்ஸ், சிரியா, நார்வே. சைப்ரஸ். லெபனான் என பல்வேறு நாடுகளில் மொசாட் உளவாளிகள் பழிவாங்கும் நடவடிக்கையை மேற்கொண்டனர். கடந்த 1988-ம் ஆண்டு வரை ‘கடவுளின் கடும் கோபம்’ ஆபரேசன் நீடித்தது. தற்போது இதே பாணியில் கடந்த ஆண்டு அக்டோபர் 7-ம் தேதி ஹமாஸ் தீவிரவாதிகள் நடத்திய படுகொலைக்கு மொசாட் பழிவாங்கும் நடவடிக்கையை மேற்கொண்டு வருகிறது.