விஜய் மில்டன் இயக்கத்தில் விஜய் ஆண்டனி நடிப்பில் ‘மழை பிடிக்காத மனிதன்’ படம் வெளியாகி இருக்கிறது.
இந்த படத்திற்கு அச்சு ராஜாமணியுடன் விஜய் ஆண்டனி இசையமைத்திருக்கிறார். மேகா ஆகாஷ் படத்தில் விஜய் ஆண்டனிக்கு ஜோடியாக நடித்திருக்கிறார். இந்நிலையில் இந்த படத்தின் சென்சாருக்கு பிறகு ஒரு நிமிட காட்சி சேர்க்கப்பட்டுள்ளதாகவும் அதில் விஜய் ஆண்டனி கேரக்டரின் பின்கதை அதில் முன்கூட்டியே சொல்லப்படுவதாகவும் விஜய் மில்டன் குற்றம் சாட்டியிருந்தார். தன்னுடைய கவனத்திற்கு வராமலேயே இந்த காட்சி சேர்க்கப்பட்டதாகவும் அவர் கூறியிருந்தது பெரும் சர்ச்சையைக் கிளப்பி இருந்தது.
இதனிடையே விஜய் ஆண்டனிக்கும் தயாரிப்பு தரப்பிற்கும் இருந்த பிரச்னை காரணமாகவே இந்த காட்சி படத்தில் சேர்க்கப்பட்டுள்ளதாகக் கூறப்பட்டது. இது குறித்து விளக்கம் அளிக்கத் தயாரிப்பு தரப்பு பத்திரிகையாளர் சந்திப்பு ஒன்றையும் ஏற்பாடு செய்து, கடைசியில் அது ரத்து செய்யப்பட்டது. பிறகு அந்த காட்சியைப் படத்திலிருந்து தயாரிப்பு தரப்பு நீக்கியது.
இந்நிலையில் இந்த காட்சி நீக்கப்பட்டது குறித்துப் படத்தின் இயக்குநர் விஜய் மில்டன் நன்றி தெரிவித்து வீடியோ ஒன்றை வெளியிட்டிருந்தார். இந்த விஷயத்தில் தலையிட்டு சமரசம் செய்து வைத்த நடிகர் சரத்குமாருக்கு நன்றியைத் தெரிவித்து இருந்தார். இந்நிலையில் இயக்குநர் விஜய் மில்டன் முன்வைத்த குற்றச்சாட்டிற்கு ‘அதைச் செய்தது நான் இல்லை’ என்று பதிலளித்து டிவிட்டரில் அறிக்கை ஒன்றை வெளியிட்டிருக்கிறார் விஜய் ஆண்டனி.
அவர் வெளியிட்டிருக்கும் அந்த அறிக்கையில், “மழை பிடிக்காத மனிதன் படத்தின் துவக்கத்தில் வரும் இரண்டு நிமிடக்காட்சியை, தனது ஒப்புதல் இல்லாமல் யாரோ இணைத்து உள்ளதாக, என் நண்பர், படத்தின் இயக்குநர் திரு.விஜய் மில்டன் வருத்தம் தெரிவித்திருந்தார். அது நான் இல்லை. இது சலீம் 2 இல்லை” என்று விளக்கம் அளித்திருக்கிறார்.