Reservation: உச்ச நீதிமன்ற உள் ஒதுக்கீடு தீர்ப்பும், விவாதமான `கிரீமிலேயர்' கருத்தும்! – ஒரு பார்வை

‘பட்டியலினத்தவர், பழங்குடியினருக்கான இட ஒதுக்கீட்டில் உள் ஒதுக்கீடு வழங்க மாநில அரசுகளுக்கு அதிகாரம் இருக்கிறது. அந்த வகையில், அருந்ததியர் உள் ஒதுக்கீடு தொடர்பான தமிழக அரசின் சட்டம் செல்லும்’ என்று உச்ச நீதிமன்றம் வழங்கியிருக்கும் தீர்ப்பை பல்வேறு தரப்பினரும் வரவேற்றிருக்கிறார்கள்.

தலைமை நீதிபதி சந்திரசூட்

உச்ச நீதிமன்றத் தலைமை நீதிபதி டி.ஒய்.சந்திரசூட் தலைமையிலான ஏழு நீதிபதிகள் கொண்ட அரசியல் சாசன அமர்வு இந்தத் தீர்ப்பை வழங்கியிருக்கிறது.

தீர்ப்பு வழங்கிய ஆறு நீதிபதிகளில் பி.ஆர்.கவாய், விக்ரம் நாத், பங்கஜ் மித்தல், சுபாஷ் சந்திர சர்மா ஆகிய நான்கு நீதிபதிகள், எஸ்.சி., எஸ்.டி பிரிவினருக்கான இட ஒதுக்கீட்டில் கிரீமிலேயர் நடைமுறையை அமல்படுத்துவது அவசியம் என்ற கருத்தைத் தெரிவித்திருக்கிறார்கள். நீதிபதி பி.ஆர்.கவாய், ‘எஸ்.சி., எஸ்.டி பிரிவில் கிரீமிலேயர் நடைமுறையை அமல்படுத்த புதிய கொள்கையை வரையறுக்க வேண்டும். இது தொடர்பாகச் சட்டம் இயற்றப்பட வேண்டும்’ என்று கூறியிருக்கிறார்.

உச்ச நீதிமன்றம்

நீதிபதி பங்கஜ் மித்தல், ‘முதல் தலைமுறையினருக்கு மட்டுமே இட ஒதுக்கீடு வழங்கப்பட வேண்டும். முதல் தலைமுறை உயர்ந்த நிலையை எட்டிவிட்டால், இரண்டாம் தலைமுறைக்கு இட ஒதுக்கீடு வழங்கக் கூடாது’ என்றும், நீதிபதி விக்ரம் நாத், ‘தற்போது ஓ.பி.சி பிரிவினருக்கு மட்டுமே கிரீமிலேயர் நடைமுறை அமலில் இருக்கிறது. இதே நடைமுறையை எஸ்.சி., எஸ்.டி பிரிவினருக்கும் அமல்படுத்த வேண்டும்’ என்றும் தீர்ப்பில் கூறியிருக்கிறார்கள்.

நீதிபதி சதீஷ் சந்திர சர்மா, ‘எஸ்.சி., எஸ்.டி பிரிவில் கிரீமிலேயர் நடைமுறையைக் கண்டிப்பாக அமல்படுத்த வேண்டும்’ என்று குறிப்பிட்டிருக்கிறார். கிரீமிலேயர் குறித்து தலைமை நீதிபதி சந்திரசூட், நீதிபதி மனோஜ் மிஸ்ரா ஆகியோர் கருத்து எதுவும் தெரிவிக்கவில்லை.

திருமாவளவன்

இட ஒதுக்கீட்டில் உள் ஒதுக்கீடு வழங்குவதற்கு ஆதரவாக உச்ச நீதிமன்றம் வழங்கியிருக்கும் தீர்ப்பை வரவேற்கும் பல அமைப்புகள், கிரீமிலேயர் முறை குறித்து தீர்ப்பில் இடம்பெற்றிருக்கும் அம்சத்தை எதிர்க்கின்றன. அந்த வகையில், கிரீமிலேயரை விடுதலைச் சிறுத்தைகள் கட்சியும் எதிர்க்கிறது.

இது தொடர்பாக வி.சி.க தலைவர் தொல்.திருமாவளவன் கருத்து தெரிவித்திருக்கிறார். அதில், ‘‘அருந்ததியருக்கு உள் இட ஒதுக்கீடு வழங்குவது தொடர்பாக அன்றைய முதல்வர் கருணாநிதி கூட்டிய அனைத்துக் கட்சிக் கூட்டத்தில், உள் இட ஒதுக்கீட்டை ஆதரித்து விடுதலைச் சிறுத்தைகள் கட்சி கருத்து தெரிவித்தது. தமிழ்நாடு அரசு இயற்றிய சட்டமும், அது தொடர்பாக விடுதலைச் சிறுத்தைகள் கட்சி எடுத்த நிலைப்பாடும் மிகச் சரியானவை என்பதை உச்ச நீதிமன்றத் தீர்ப்புப் புலப்படுத்தியிருக்கிறது.

கருணாநிதி – ஸ்டாலின்

எஸ்.சி பிரிவினருக்கும் கிரீமிலேயர் என்ற வருமான வரம்பை அளவுகோலாகக் கொள்ளும் ஒரு முறையை அறிமுகப்படுத்தும் கருத்தை சில நீதிபதிகள் தீர்ப்பில் குறிப்பிட்டிருக்கிறார்கள். முதல் தலைமுறையின் இட ஒதுக்கீட்டில் முன்னேறிவிட்டால், அவர்களுக்கு மீண்டும் இட ஒதுக்கீட்டுச் சலுகை வழங்கக் கூடாது என்ற கருத்து அதிர்ச்சி அளிப்பதாக இருக்கிறது” என்று திருமாவளவன் கூறியிருக்கிறார்.

வி.சி.க உட்பட பலரும் கிரீமிலேயர் முறையை எதிர்க்கிறார்கள். எஸ்.சி பிரிவினருக்கான இட ஒதுக்கீட்டை, மத்திய அரசு, மாநில அரசு என எந்த அரசும் முழுமையாக நடைமுறைப்படுத்தவில்லை. பட்டியலின மக்களுக்கான அரசுப் பணியிடங்கள் காலியாகக் இருக்கும் நிலையில், அவற்றை நிரப்புவதற்கு மத்திய, மாநில அரசுகள் உரிய நடவடிக்கை எடுக்கவில்லை என்ற குற்றச்சாட்டு பல ஆண்டுகளாக இருந்துவருகிறது.

உச்ச நீதிமன்றம்

அது மட்டுமல்ல, பட்டியலினத்தவருக்கான பணியிடங்களில் பிற பிரிவினரைக் கொண்டு நிரப்பபப்டுவதாக என்ற குற்றச்சாட்டும் உண்டு. பட்டியலினத்தவருக்கான காலிப் பணியிடங்கள் தொடர்பான வழக்குகள் நீதிமன்றங்களில் நிலுவையில் இருக்கின்றன. ஆகவே, இட ஒதுக்கீடு முழுமையாக நிறைவேற்றப்படாத நிலையில், கிரீமிலேயர் முறையைப் புகுத்தி இட ஒதுக்கீட்டுக்குத் தகுதியானவர்களை நீக்க முயற்சி நடக்கிறது என்ற விமர்சனமும் தற்போது எழுந்திருக்கிறது.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.