‘கூழாங்கல்’ திரைப்படம் பல அங்கீகாரங்களை இயக்குநர் பி.எஸ்.வினோத் ராஜுக்குப் பெற்றுத் தந்தது. கிராமப் புறங்களில் நடக்கும் ஆணாதிக்கத்தையும், பெண்களில் நிலையையும் கண் முன் காட்சிப்படுத்திப் பாராட்டுக்களைப் பெற்றிருந்தது.
இதற்குப் பிறகு, இவர் சூரியை வைத்து இயக்கியிருக்கிற ‘கொட்டுக்காளி’ திரைப்படத்திற்கும் எதிர்பார்ப்பு நிலவி வருகிறது. பெர்லின், ரோட்டர்டேம் ஆகிய சர்வதேச திரைப்பட விழாக்களில் திரையிடப்பட்டு அங்கீகாரத்தைப் பெற்றிருக்கிறது. இத்திரைப்படத்தில் சூரியுடன் மலையாள நடிகை அனா பென் நடித்திருக்கிறார். இதுதான் இவர் நடிக்கும் முதல் தமிழ்த் திரைப்படம். இத்திரைப்படம் வருகிற ஆகஸ்ட் 23-ம் தேதி திரையரங்குகளில் வெளியாகவிருக்கிறது.
கதைநாயகனாக அவதாரம் எடுத்துள்ள சூரிக்கு ‘விடுதலை’, ‘கருடன்’ திரைப்படங்கள் நல்ல வரவேற்பைப் பெற்று தந்திருக்கிறது. இதையடுத்து சூரியின் ‘கொட்டுக்காளி’ திரைப்படமும் சர்வதேச திரைப்பட விழாக்களில் அங்கீகாரத்தைப் பெற்று திரைக்காணவிருக்கிறது. இந்தப் படமும் சூரியின் நடிப்பும், அவர் ஏற்று நடித்துள்ள ‘பாண்டி’ கதாப்பத்திரமும் நல்ல உரையாடலை நிகழ்த்தும் என எதிர்ப்பார்க்கப்படுகிறது.
இப்படம் இந்த மாதம் இறுதியில் ஆகஸ்ட் 23ம் தேதி வெளியாகவிருக்கும் நிலையில் இப்படம் குறித்து சூரி தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில், “என்னுடைய முந்தைய படங்களான விடுதலை, கருடனிலிருந்து முற்றிலும் வேறுப்பட்ட திரைப்படமாக ‘கொட்டுக்காளி’ இருக்கும். இது ஒரு Mainstream Content Oriented திரைப்படம். உண்மைக்கு மிக நெருக்கமான படம். இதில் வரும் என்னுடைய ‘பாண்டி’ என்கிற கதாபாத்திரம் எல்லா குடும்பங்ளிலும் இருக்கும் ஒருவன் தான். இந்த சமூகம் சொல்லிக்கொடுத்த உறவு முறைகளையும், நம்பிக்கைகளையும் பெரிதும் நம்புகிற ஒரு கதாபாத்திரம் தான் பாண்டி.
இந்தப் படத்தில் வரும் பயணத்தில், இந்த சமூகம் உருவாக்குன பாண்டிக்கும், பாண்டி என்கிற தனிப்பட்ட ஒருவனுக்கும் நடக்குற மன போராட்டத்த சரியா பிரதிபலிக்கனும்னு ரொம்ப கவனமா இருந்தேன். அதை சரியாவும் பண்ணி இருக்கேன்னு நம்புறேன். நீங்க அவசியம் பார்க்கவேண்டிய திரைப்படமாக கொட்டுக்காளி நிச்சயம் இருக்கும்” என்று பதிவிட்டிருக்கிறார்.
கதைநாயகன் சூரிக்கு அடுத்தடுத்த பெரும் ஹிட்களைக் கொடுக்க வரிசை கட்டி நிற்கிறது ‘கொட்டுக்காளி’, ‘ஏழு கடல் ஏழு மலை’ மற்றும் ‘விடுதலை – 2’ திரைப்படங்கள்.