அமெரிக்காவின் லாஸ் ஏஞ்சல்ஸிலிருந்து நியூயார்க் புறப்பட்ட அமெரிக்கன் ஏர்லைன்ஸ் விமானம், ஒரு பெண்ணின் தலையில் பேன் இருந்ததால் தரையிறக்கப்பட்டதாக தகவல் வெளியாகியிருக்கிறது. இது தொடர்பாக அந்த விமானத்தில் பயணித்த பயணி ஜுடெல்சன் என்பவர் தன் டிக்டாக் பக்கத்தில் பகிர்ந்த வீடியோவில், “கடந்த மாதம் அமெரிக்காவின் லாஸ் ஏஞ்சல்ஸிலிருந்து நியூயார்க் செல்வதற்காக அமெரிக்கன் ஏர்லைன்ஸ் விமானத்தில் புறப்பட்டேன். விமானம் புறப்பட்ட சிறிது நேரத்தில், இரு பெண்கள், பணிப்பெண்ணை அழைத்து ஏதோ புகார் கூறும் வகையில் பேசினார்கள்.
சிறிது நேரத்தில் விமானத்தில் சலசலப்பு ஏற்பட்டது. அப்போதுதான் ஒரு பயணியின் தலையில் பேன் இருந்ததும், அதைப் பார்த்த இரண்டு பெண் பயணிகள், பணிப்பெண்ணிடம் கூறியதும், அவர்களும் அதை சோதித்து அறிந்துகொண்டதால் ஏற்பட்ட சலசலப்பு என்பதை அறிந்துகொண்டேன். அதன் பிறகு விமானம் பீனிக்ஸில் தரையிறக்கப்பட்டது. நாங்கள் தங்குவதற்கான ஹோட்டல் அறை தொடர்பான தகவல்கள் எங்கள் இமெயிலுக்கு வரும் எனக் குறிப்பிட்டார்கள்.
12 மணி நேர தாமதத்துக்குப் பிறகு நாங்கள் மீண்டும் நியூயார்க் நகரம் புறப்பட்டோம்” எனக் குறிப்பிட்டிருக்கிறார்.
இது தொடர்பாக அமெரிக்க ஏர்லைன்ஸ் அளித்த விளக்க அறிக்கையில், “ஜூன் 15 அன்று, அமெரிக்கன் ஏர்லைன்ஸ் விமானம் 2201, லாஸ் ஏஞ்சல்ஸிலிருந்து நியூயார்க் புறப்பட்டது. அப்போது பயணிக்கு ஏற்பட்ட மருத்துவ அவசரத் தேவை காரணமாக பீனிக்ஸ்க்கு திருப்பி விடப்பட்டது.” எனக் குறிப்பிட்டிருக்கிறது.