இங்கிலாந்து அணியின் முன்னாள் நட்சத்திர வீரரான கிரஹாம் தோர்ப் காலமாகி இருக்கிறார்.
இங்கிலாந்து அணியின் நட்சத்திர வீரராகத் திகழ்ந்தவர் கிரஹாம் தோர்ப். இங்கிலாந்திற்காக 100 டெஸ்ட் போட்டிகளிலும், 82 ஒருநாள் போட்டிகளிலும் விளையாடி இருக்கிறார். டெஸ்ட் கிரிக்கெட்டில் 6,744 ரன்களையும், ஒருநாள் போட்டிகளில் 2,380 ரன்களையும் குவித்திருக்கிறார். 1996 மற்றும் 1999 உலகக் கோப்பை தொடர்களில் விளையாடி இருக்கும் கிரஹாம் தோர்ப் இங்கிலாந்து அணியின் கேப்டனாகவும் செயல்பட்டிருக்கிறார்.
கடையாக 2005 இல் இங்கிலாந்திற்காக டெஸ்ட் கிரிக்கெட்டில் விளையாடி இருக்கிறார். இந்நிலையில் 55 வயதாகும் கிரஹாம் தோர்ப் உடல் நலக்குறைவால் உயிரிழந்திருக்கிறார். இவரின் மறைவை இங்கிலாந்து கிரிக்கெட் வாரியம் அதிகாரப்பூர்வமாக அறிவித்திருக்கிறது. இங்கிலாந்து கிரிக்கெட் வாரியம் வெளியிட்டிருந்த பதிவில், “கிரஹாம் தோர்ப் காலமானார் என்ற செய்தியை மிகுந்த வருத்தத்துடன் பகிர்ந்து கொள்கிறோம்.
கிரஹாம் தோர்ப் மரணம் தந்த ஆழ்ந்த அதிர்ச்சியை விவரிக்கப் பொருத்தமான வார்த்தைகள் இல்லை என்றே தோன்றுகிறது” என்று குறிப்பிடப்பட்டு இருக்கிறது. கிரஹாம் தோர்ப் மறைவிற்கு கிரிக்கெட் வீரர்கள் பலரும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.