சென்னையில் மெரினா கடற்கரையைத் தொடர்ந்து அதிக அளவு மக்கள் கூடும் இடமாக இருப்பது பெசன்ட் நகர் கடற்கரை. இங்கு 2013-ல் சுமார் 245 கடைகள் இருந்த நிலையில், 2021-க்கு பிறகு இதன் எண்ணிக்கை 1,200 கடைகளாக அதிகரித்ததாகக் கூறப்படுகிறது. இதனால், கடற்கரைக்கு வரும் பொதுமக்கள் நிம்மதியாக வந்து அமர்ந்து பேசவோ அல்லது இயற்கையை ரசிக்கவோ இடமில்லாமல் கடைகள் போடப்பட்டிருப்பதாகவும், கடல் நீருக்கு மிக அருகில் கடைகள் இருப்பதால் சுற்றுச்சூழலுக்கு அதிக பாதிப்புகள் ஏற்படும் என்பதாலும் மாநகராட்சி நிர்வாகம் நடவடிக்கை எடுக்க தாமாக முன்வந்தது.
அதன்படி, கடற்கரையை ஒட்டி 20 மீட்டருக்கு அருகிலிருக்கும் கடைகளை காலி செய்யுமாறும், இல்லையெனில் மாநகராட்சி சார்பில் கடைகள் நீக்கப்படும் என்றும் மூன்று வாரங்களுக்கு முன்பாகவே தகவல் தெரிவிக்கப்பட்டிருக்கிறது. அதற்கேற்றவாறு, சென்னை மாநகராட்சி சார்பில் கடற்கரையிலிருந்து 20 மீட்டர் இடைவெளியில் 5 அடி உயரத்தில் 50 மீட்டர் தூரத்துக்கு சவுக்கு கம்பால் தடுப்பு அமைக்கப்பட்டது.
இருப்பினும், இதைக் கண்டுகொள்ளாமல் அவர்கள் கடைகளை நடத்தி வந்த நிலையில் மாநகராட்சி அதிகாரிகள் கடந்த சனிக்கிழமை (03.08.2024) காலையில் போலீஸ் பாதுகாப்புடன் பெசன்ட் நகர் பீச்சுக்கு வந்து பஜ்ஜி, ஐஸ்கிரீம், மீன், கரும்பு ஜூஸ் உள்ளிட்ட 40-க்கும் மேற்பட்ட கடைகளை அப்புறப்படுத்தினர்.
இதனால், அந்த பகுதியில் கடை வைத்திருக்கும் அனைவரும் சனிக்கிழமை முதல் கடைகளை மூடிவைத்த நிலையில், செவ்வாய் கிழமை வரை இது நீடிக்கும் என்று தெரிவித்திருக்கின்றனர். மேலும், பாதிக்கப்பட்டவர்களுக்கு மாற்று இடம் அளிக்கப்பட வேண்டும் என்று மாநகராட்சி நிர்வாகத்துக்கு அவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.