இந்திய அணியில் மிடில் ஆர்டர் பேட்ஸ்மேன்கள் சரியில்லை – ரோகித் சர்மா ஓபன் டாக்

Rohit Sharma Latest News : இலங்கை அணிக்கு எதிரான 2வது ஒருநாள் போட்டியில் இந்திய அணி அதிர்ச்சி தோல்வியை சந்தித்தது. எளிதாக வென்றிருக்க வேண்டிய முதல் போட்டியையும் டையில் முடிந்தது. இதனால் இலங்கை அணிக்கு எதிரான ஒருநாள் போட்டி தொடரை 27 ஆண்டுகளுக்குப் பிறகு வெல்லும் வாய்ப்பையும் இந்திய அணி இழந்திருக்கிறது. ஆகஸ்ட் 7 ஆம் தேதி நடைபெறும் மூன்றாவது மற்றும் கடைசி ஒருநாள் போட்டியில் கட்டாயம் வெற்றி பெற்றால் மட்டுமே தொடரை சமன் செய்ய முடியும். இல்லையென்றால் இலங்கை அணிக்கு எதிரான ஒருநாள் போட்டி தொடரை இழக்க நேரிடும்.

இரண்டாவது ஒருநாள் போட்டியில் தோல்விக்குப் பிறகு பேசிய கேப்டன் ரோகித் சர்மா இந்திய அணியின் மிடில் ஆர்டர் பேட்டிங் சரியில்லை என தெரிவித்துள்ளார். இந்த தோல்வி என்னை காயப்படுத்தியிருக்கிறது என்றும் அவர் வெளிப்படையாகவே கூறினார். “கிரிக்கெட்டில் தோல்வி என்பது நிச்சயம் வலிக்கும். ஒருநாள் போட்டியை பொறுத்தவரை சீரான ஆட்டத்தை கடைசி வரை வெளிப்படுத்த வேண்டும். ஓப்பனிங்கில் அதிரடியாக ஆட வேண்டும் என்பது தான் என்னுடைய எண்ணம். அதனை மாற்றிக்கொள்ள நான் விரும்பவில்லை. 

மிடில் ஆர்டரில் பேட்டிங்கிற்கு பிட்ச் கொஞ்சம் கடினமாக இருக்கும் என்றாலும், சில ரிஸ்குகளை எடுக்க வேண்டும். உங்களுடைய எல்லையை தாண்டி ஆடாமல் விட்டால் இதுபோன்ற ரிசல்டுகளை தவிர்க்க முடியாது. ஒட்டுமொத்தமாக பார்க்கும்போது நாங்கள் சிறப்பாக ஆடவில்லை. அதனால் இது குறித்து அதிகம் பேச விரும்பவில்லை. அதேநேரத்தில் மிடில் ஓவர்களில் எங்களுடைய பேட்டிங்கில் இருக்கும் தவறுகளை கட்டாயம் திருத்த கவனம் செலுத்துவோம்” என தெரிவித்தார்.

மூன்றாவது ஒருநாள் போட்டியில் இந்திய அணியின் பிளேயிங் லெவனில் மாற்றம் இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. பேட்டிங்கில் சொதப்பல் இருப்பதால் பேட்ஸ்மேன்களில் யாரேனும் ஒருவர் வெளியே உட்கார வைக்கப்பட வாய்ப்பு இருக்கிறது. சுப்மன் கில் எதிர்பார்த்த ஆட்டத்தை வெளிப்படுத்தவில்லை. அதேபோல் ஷிவம் துபே, கேஎல் ராகுல் ஆகியோரும் சிறப்பாக ஆட்டத்தை வெளிப்படுத்த தவறியுள்ளனர். அவர்களில் யாரேனும் ஒருவர் வெளியே உட்கார வைக்கப்பட்டாலும் ஆச்சரியப்பட வாய்ப்பில்லை. 

1997 ஆம் ஆண்டு முதல் இரு நாடுகளுக்கு இடையே நடைபெற்ற 11 ஒருநாள் போட்டி தொடர்களையும் இந்திய அணியே கைப்பற்றியிருக்கிறது. கடைசி ஒருநாள் போட்டியில் இந்திய அணி வெற்றி பெற்றால்கூட தொடர் சமனில் முடியும் என்பதால், 27 ஆண்டு கால சாதனை முடிவுக்கு வந்திருக்கிறது.    

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.