மூணாறு: மூணாறில் நிலச்சரிவு அபாயம் உள்ள பகுதியில் வசித்தவர்கள், பாதுகாப்பு காரணங்களுக்காக தற்காலிக முகாமுக்கு இடமாற்றம் செய்யப்பட்டனர்.
மூணாறு நல்லதண்ணீர் சாலையில் அந்தோணியார் காலனி உள்ளது. இங்கு சுமார் 23 குடும்பங்களைச் சேர்ந்த 50-க்கும் மேற்பட்டோர் வசித்து வருகின்றனர். இவர்கள் அனைவரும் கூலித் தொழிலாளிகள். சரிவான மலைப் பகுதியில் இவர்களது குடியிருப்புகள் அமைந்துள்ளன. கடந்த 2005 ஜூலை 25ம் தேதி ஏற்பட்ட கனமழையினால் இப்பகுதியில் நிலச்சரிவு ஏற்பட்டது. இதில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 3 பேர் உட்பட நான்கு பேர் உயிரிழந்தனர்.
இதனைத்தொடர்ந்து இப்பகுதியை ஆய்வு செய்த புவியியல் வல்லுநர்கள் இங்குள்ள நிலத்தடியில் நீரோட்டம் அதிகம் உள்ளதாக கண்டறிந்தனர். இதனால் மழைக் காலங்களில் நிலச்சரிவுக்கு அதிகம் வாய்ப்புள்ள பகுதியாக அறிவிக்கப்பட்டது. மேலும் அமிர்தா விஸ்வ வித்யா பீடம் சார்பில் நில அதிர்வுகளை முன்கூட்டியே கண்டறியும் கருவி கடந்த 2009ம் ஆண்டு பொருத்தப்பட்டது. இதன் சமிக்ஞைகள் கொல்லத்தில் உள்ள தலைமை அலுவலகத்துக்கு இணையம் மூலம் அனுப்பப்பட்டு கண்காணிக்கப்படுகிறது.
இதற்கேற்ப முன்னெச்சரிக்கை விடுக்கப்பட்டு நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. இதன்படி ஒவ்வொரு ஆண்டும் தென்மேற்கு பருவமழை தீவிரம் அடையும் போதெல்லாம் இப்பகுதி மக்கள் இடமாற்றம் செய்யப்படுவது வழக்கம். தற்போது இப்பகுதியில் கனமழை பெய்து வருவதாலும், நிலச்சரிவு அபாயம் ஏற்பட்டுள்ளது. இதனைத் தொடர்ந்து இப்பகுதி மக்கள் மூணாறு சர்ச்சில் உள்ள ஆடிட்டோரியத்துக்கு இடமாற்றம் செய்யப்பட்டுள்ளனர். சிலர் அவர்களது உறவினர்கள் வீடுகளில் பாதுகாப்பாக தங்க வைக்கப்பட்டுள்ளனர்.
இது குறித்து இப்பகுதியைச் சேர்ந்தவர்கள் கூறுகையில், “கடந்த 19 ஆண்டுகளாக மழைக்காலங்களில் நிம்மதி இழந்து பரிதவித்து வருகிறோம். நிரந்தர தீர்வாக மாற்று இடத்தில் சிறிய அளவிலாவது வீடு கட்டித் தந்தால் இப்பிரச்னை தீரும். முகாம், உறவினர்கள் வீடு என்று அலைவதால் எங்களின் இயல்பு வாழ்க்கை, குழந்தைகளின் கல்வி போன்றவை பாதிக்கப்படுகிறது என்றனர். மூணாறு கிராம ஊராட்சி அதிகாரிகள் கூறுகையில், அரசுதான் மாற்று இடத்துக்கான ஏற்பாடுகளை செய்ய வேண்டும்” என்று அப்பகுதி மக்கள் கூறுகின்றனர்.