திருவாரூர்: முள்ளியாற்றில் ஆறாக வழிந்தோடும் குப்பைகள்… வேதனையில் விவசாயிகள்! – கவனிக்குமா அரசு?

திருவாரூர் மாவட்டம், வரம்பியம் ஊராட்சிக்குட்பட்ட பகுதியில் ஓடுகிற முக்கியமான ஆறு, முள்ளியாறு. இந்த ஆற்று நீரை நம்பித்தான் கடைமடை விவசாயிகள் சுமார் 12,000 ஏக்கர் பரப்பளவில் சாகுபடி செய்கின்றனர்.

இத்தகைய சூழலில், முள்ளியாற்றின் நிலை காண்போரை முகம் சுளிக்க வைக்கும்படியாக இருக்கிறது. வணிக நிறுவனக் கழிவுகள், மருத்துவக் கழிவுகள், பிளாஸ்டிக் கழிவுகள் உள்ளிட்டவை இந்த ஆற்றங்கரையில் கொட்டப்பட்டு வருகின்றன. பசுமையான முள்ளியாறு, இப்படி மாசடைந்து குப்பை மேடாகக் காட்சியளிப்பது, வேதனையளிப்பதாக மனம் குமுறுகிறார்கள் சுற்றுச்சூழல் ஆர்வலர்கள். இத்தனைக்கும், இந்த முள்ளியாற்றின் ஆற்றங்கரையோரம் மக்கும் குப்பை, மக்கா குப்பை எனக் கழிவுகளைத் தரம் பிரிக்கும் நகராட்சி திடக்கழிவு மேலாண்மை வளாகமும் செயல்பட்டு வருகிறது. ஆனால், அந்த வளாகத்திலோ குப்பைகள் அளவுக்கு அதிகமாகத் தேங்கி, சிதறி… பெரும் சுகாதார சீர்கேடு நிலவி வருகிறது.

மேட்டூர் அணையிலிருந்து காவேரி டெல்டா பாசனத்துக்காக, கடந்த ஜூலை 28-ம் தேதி தண்ணீர் திறக்கப்பட்டது. இந்த நிலையில் பாசனத்துக்கு நீர் திறக்கப்பட்டதையொட்டி டெல்டா மாவட்ட ஆட்சியர்களுடன் முதல்வர் மு.க.ஸ்டாலின், தலைமைச் செயலகத்திலிருந்து காணொளிக் காட்சி மூலம் ஆலோசனை மேற்கொண்டார். தற்போது பயிரிடப்பட்டுள்ள குறுவைப் பயிர்களுக்கும் ஆடிப்பெருக்கு விழாவை மக்கள் உவகையோடு கொண்டாடுவதற்கும், ஏரிகள் மற்றும் குளங்களில் சேமிப்பதற்கு ஏற்றவாறும் காவிரி நீர் திறந்து விடப்பட்டுள்ளது. இந்த நீரை விவசாயிகள் நல்ல முறையில் பயன்படுத்தவும், ஏரிகள் மற்றும் குளங்களில் நீரை சேமித்து வைக்கவும், நிலத்தடி நீரை செறிவூட்டவும் தேவையான அனைத்து நடவடிக்கைகளையும் உடனடியாக மேற்கொள்ள வேண்டும் என மாவட்ட ஆட்சியர்கள் மற்றும் பல்வேறு துறை அலுவலர்களுக்கு முதல்வர் கூட்டத்தில் அறிவுரை வழங்கினார்.

ஆனால், அதிகாரிகளோ இந்த முள்ளியாற்றின் அவல நிலையைக் கண்டும் காணாமல் அலட்சியமாக இருந்து வருவதாக அந்த ஊர் மக்கள் குற்றம்சாட்டுகிறார்கள். மேட்டூர் அணையிலிருந்து திறந்துவிடப்பட்ட நீரை முறைப்படுத்தி, சாகுபடி செய்ய விவசாயிகள் எதிர்நோக்கிக் காத்திருக்கின்றனர். ஆனால், இந்த முள்ளியாற்றின் நிலை, விவசாயிகளை வேதனையில் ஆழ்த்தியிருக்கிறது.

இது குறித்து திருத்துறைப்பூண்டி சி.பி.எம் கட்சி சார்ந்த அகில இந்திய விவசாய தொழிலாளர் சங்க ஒன்றியச் செயலாளர் சி.வீரசேகரன் நம்மிடம் பேசியபோது, “இந்த முள்ளியாத்தை நம்பித்தான் கடைமடை வரை உள்ள விவசாயிங்க, சுமார் 12,000 ஏக்கர்ல சாகுபடி செஞ்சுகிட்டு வர்றாங்க. ஆனா, இந்த ஆத்தோட நிலைமை ரொம்ப வருத்தமளிக்குது. சம்பந்தப்பட்ட அரசு அதிகாரிங்க உடனே இந்த நடவடிக்கை எடுக்கணும்” என்றார்.

திருத்துறைப்பூண்டி நகராட்சி சுகாதார ஆய்வாளரிடம் பேசியபோது, “நகராட்சி தரப்புல அந்த ஆத்துல யாரும் குப்பைக் கொட்டுறது கிடையாது. இருந்தாலும், இன்னும் சில நாள்கள்ல தண்ணி வருதுன்னு சொல்றீங்க… அதனால எங்க சேர்மன் கிட்ட பேசி கலந்து ஆலோசிச்சிட்டு, இன்னும் இரண்டு நாள்கள்ல சுத்தம் பண்ணி தர்றோம்” என்றார்.

இது குறித்து திருத்துறைப்பூண்டி நகராட்சி சேர்மனிடம் கேட்டபோது, “அப்பப்போ ஜே.சி.பி வெச்சு கிளீன் பண்ணிக்கிட்டுத்தான் இருக்கோம். இன்னும் இரண்டு நாள்கள்ல சுத்தம் பண்ணிடுவோம்” என்று விளக்கம் அளித்தார்.

குப்பைகள் கொட்டப்பட்டு, மாசடைந்து காணப்படும் முள்ளியாற்றை தண்ணீர் அந்தப் பகுதியை வந்து சேர்வதற்குள் சுத்தம் செய்து, சீரமைக்க வேண்டும் என்பதே அந்த ஊர் மக்களின் கோரிக்கையாக இருக்கிறது.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.