சென்னை: தமிழகம், கேரளா ஆகிய இரு மாநிலங்களும் பயன்பெறும் பம்பா – அச்சன்கோவில் – வைப்பாறு இணைப்பு திட்டத்தை நிறைவேற்ற சாத்தியக்கூறு இருப்பதாக மத்திய அரசு கூறுகிறது. தமிழக அரசும் இத்திட்டத்துக்கு ஒப்புதல் அளித்துள்ள நிலையில், கேரள அரசு இதற்கு கடந்த 30 ஆண்டுகளாக முட்டுக்கட்டை போட்டு வருகிறது .
கேரளாவின் பம்பா, அச்சன்கோவில் ஆறுகளில் இருந்து ஆண்டுதோறும் 110 டிஎம்சி தண்ணீர் வீணாக கடலில் கலக்கிறது. அதில் 22 டிஎம்சி தண் ணீரை தமிழகத்தின் வைப்பாறுக்கு திருப்பிவிடுவதுதான் பம்பா – அச்சன்கோவில் – வைப்பாறு இணைப்பு திட்டம். இதற்கான சாத்தியக்கூறு அறிக்கையை தேசிய நீர் மேம்பாட்டு முகமை கடந்த 1994-ம் ஆண்டு வழங்கியது.
இத்திட்டம் நிறைவேறினால், தமிழகத்தின் தென்காசி, சங்கரன்கோவில், கோவில்பட்டி, சிவகிரி, ஸ்ரீவில்லிபுத்தூர், ராஜபாளையம், சாத்தூர் ஆகிய 7 தாலுகாக்களில் உள்ள 91,400 ஹெக்டேர் நிலங்கள் பாசன வசதி பெறும். அத்துடன், கேரள மாநிலம் 500 மெகாவாட் மின்சாரம் உற்பத்தி செய்ய முடியும்.
இத்திட்டத்துக்கான விரிவான திட்ட அறிக்கை தயாரிக்க தமிழக அரசு ஒப்புதல் அளித்துள்ளது. ஆனால், கேரள அரசு இதற்கு ஒப்புதல் அளிக்காமல் கடந்த 30 ஆண்டுகளாக முட்டுக்கட்டை போட்டுவருவதாக விவசாயிகள் வேதனை தெரிவிக்கின்றனர்.
‘‘பம்பா – அச்சன்கோவில் – வைப்பாறு நதிகள் இணைப்பு திட்டத்தை நிறைவேற்ற கேரள அரசுக்கு தமிழக அரசு தீவிர அழுத்தம் கொடுக்குமாறு தென்காசி, தூத்துக்குடி, விருதுநகர் ஆகிய 3 மாவட்டங்களை சேர்ந்த எம்எல்ஏக்கள், எம்.பி.க்கள் வலியுறுத்த வேண்டும். இதுதொடர்பாக தமிழக அரசு சட்டரீதியாகவும் நடவடிக்கை எடுக்க வேண்டும்” என்று விவசாயிகள் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.
தலைவர்கள் வலியுறுத்தல்: ‘‘விவசாயிகள் நலனை கருத்தில் கொண்டு இத்திட்டத்தை நிறைவேற்ற இண்டியா கூட்டணியில் உள்ள தமிழக அரசும், கேரள அரசும் முன்வர வேண்டும்’’ என்று பாமக நிறுவனர் ராமதாஸ், தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை உள்ளிட்ட தலைவர்களும் வலியுறுத்தியுள்ளனர்.
இதுகுறித்து தமிழக நீர்வளத் துறை அதிகாரிகள் கூறும்போது, ‘‘டெல்லியில் கடந்த 2021 நவம்பர் 12-ம் தேதி சிறப்பு குழு கூட்டம் நடைபெற்றது. அதில், கேரளாவின் பம்பா, அச்சன்கோவில் நதிகளில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டதை சுட்டிக்காட்டி, பம்பா – அச்சன்கோவில் – வைப்பாறு இணைப்பு திட்டத்தை செயல்படுத்துவதற்கான விரிவான திட்ட அறிக்கை தயாரிக்க தேசிய நீர் மேம்பாட்டு முகமையிடம் வலியுறுத்தினோம். இத்திட்டத்தை நிறைவேற்றுமாறு மத்திய அரசின் ஜல்சக்தி அமைச்சகத்தையும், தேசிய நீர் மேம்பாட்டு முகமையையும் தமிழக அரசு தொடர்ந்து வலியுறுத்தி வருகிறது’’ என்று தெரிவித்தனர்.