தூத்துக்குடி, மாப்பிளையூரணி கிராமத்தைச் சேர்ந்தவர் கணேசன். இவரது வீட்டில் 18 அடி ஆழமுள்ள உறை கிணறு ஒன்று உள்ளது. நீண்ட நாளாக இக்கிணறு சுத்தம் செய்யப்படாமல் இருந்துள்ளது. மேலும், அருகில் உள்ள செப்டிக் டேங்க் தண்ணீரும் அக்கிணற்றினுள் இறங்கியதால் அதிக துர்நாற்றம் வீசியுள்ளது.
இதைத் தொடர்ந்து கணேசன், தன் உறவினரான மாரிமுத்து என்பவருடன் சேர்ந்து கிணற்றிலிருந்து மின் மோட்டார் மூலம் நீரை வெளியேற்றும் பணியில் ஈடுபட்டார். அப்போது கிணற்றிற்குள் வாளி ஒன்று தவறி விழுந்துள்ளது. இதனையடுத்து கணேசன், அந்த வாளியை எடுப்பதற்காக கிணற்றிற்குள் கயிறு கட்டி இறங்கியுள்ளார். அப்போது விஷவாயு தாக்கியதில் கணேசன் மயக்கமடைந்துள்ளார்.
இதனால், பதறிய மாரிமுத்து உடனே கிணற்றிற்குள் இறங்கியுள்ளார். இதில், மாரிமுத்துவும் விஷவாயு தாக்கி மயக்கமடைந்தார். இதனையடுத்து கணேசனின் உறவினர்களான பவித்ரன், ஜேசுராஜ் ஆகியோர் கிணற்றிற்குள் இறங்கியுள்ளனர். அவர்களும் மேலே வராததால் அருகில் இருந்தவர்கள் கூச்சலிட்டுள்ளனர். இருவருக்கும் மூச்சுத்திணறல் ஏற்பட்டு மயக்கம் அடைந்தனர்.
இதனையடுத்து தீயணைப்புத்துறையினருக்கு அளிக்கப்பட்ட தகவலின் பேரில் தீயணைப்பு வீரர்கள் சிறப்பு முகக்கவசம் மற்றும் ஆக்சிஜன் சிலிண்டர் உதவியுடன் கிணற்றினுள் இறங்கி நால்வரையும் மீட்டனர். இதில், கணேசன், மாரிமுத்து ஆகியோர் உயிரிழந்த நிலையில் மீட்கப்பட்டனர். மற்ற இருவரும் மயக்கமடைந்த நிலையில் மீட்கப்பட்டனர். அவர்களுக்கு தூத்துக்குடி அரசு மருத்துவமனையில் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. கிணற்றிற்குள் விழுந்த வாளியை எடுக்க முயன்றபோது 2 பேர் உயிரிழந்த சம்பவம், சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.