அகர்தலா,
மாணவர்கள் போராட்டம் காரணமாக வங்காளதேசம் நாட்டின் பிரதமர் ஷேக் ஹசீனா தனது பதவியை ராஜினாமா செய்துவிட்டு டாக்காவில் இருந்து வெளியேறி இந்தியா வந்தடைந்துள்ளார். இந்தியா வந்துள்ள அவரை தேசிய பாதுகாப்பு ஆலோசகர் அஜித் தோவல் சந்தித்து பேசியுள்ளார். இங்கிலாந்திடம் அடைக்கலம் கேட்பதாக தகவல் வெளியாகியுள்ளது.
இதனிடையே வங்காள தேசத்தில் சலிமுல்லா கான் தலைமையில் இடைக்கால அரசு அமைவதாக ராணுவ தளபதி தெரிவித்துள்ளார். இடைக்கால அரசின் பிரதமராக சலிமுல்லா கான் செயல்படுவார் என அவர் கூறியுள்ளார். ஓய்வுபெற்ற நீதிபதி ஓய்வு பெற்ற ராணுவ ஜெனரல்கள் என 10 பேர் கொண்ட அமைச்சரவை அமைகிறது.
வங்காளதேசத்தில் பதற்றமான சூழ்நிலை நிலவுவதால், டாக்காவுக்கான விமான சேவைகளை ஏர் இந்தியா நிறுத்தி உள்ளது. இதேபோல் இந்தியா – வங்காள தேசம் இடையேயான ரெயில் போக்குவரத்தும் ரத்து செய்யப்பட்டுள்ளது. உத்தரபிரதேசத்தில் உள்ள ஹிண்டன் விமானப்படை தளத்தில் ஷேக் ஹசீனாவை அஜித் தோவல் நேரில் சந்தித்தார்.
வங்காளதேசத்தில் அசாதாரண சூழ்நிலை நிலவி வரும் நிலையில் இந்தியாவுக்கு வங்காளதேசத்தில் இருந்து ஊடுருவல் நடைபெற வாய்ப்புள்ளதாக தகவல் வெளியானது. இதனைத்தொடர்ந்து எல்லை பாதுகாப்புப்படை எச்சரிக்கை விடுத்துள்ளது. எல்லை பாதுகாப்புப்படை உயர் அதிகாரிகள் மேற்கு வங்காள மாநிலத்தில் ஆலோசனைக் கூட்டம் நடத்தினர்.
இந்நிலையில் திரிபுரா எல்லை வழியாக ஊடுருவலை அனுமதிக்கமாட்டோம் என மத்திய உள்துறை மந்திரி அமித்ஷா உறுதி அளித்துள்ளதாக திப்ரா மோதா தலைவர் பிரத்யோத் கிஷோர் மாணிக்யா தெப்பர்மா தெரிவித்துள்ளார்.
இதுதொடர்பாக அவர் தனது பேஸ்புக் பதிவில், “உள்துறை மந்திரி அமித்ஷா உடன் தொலைபேசியில் பேசினேன். இந்தியா எல்லைகள் சிறந்த வகையில் பாதுகாக்கப்பட்டுள்ளது. ஒருவரை கூட ஊடுருவ அனுமதிக்கமாட்டோம். சூழ்நிலையை அவர் கண்காணித்து வருவதாகவும், எல்லையில் படைகள் தொடர்ந்து விழிப்புணர்வுடன் இருக்கவும் கேட்டுக்கொண்டுள்ளதாகவும் தெரிவித்தார்” என்று அவர் தெரிவித்துள்ளார்.