டாக்கா: வங்கதேச கலவரத்தின் பின்னணியில் பாகிஸ்தானின் ஐஎஸ்ஐ உளவு அமைப்பு இருப்பதாக குற்றம் சாட்டப்பட்டு உள்ளது.
இதுகுறித்து வங்கதேசத்தின் முன்னணி வார இதழான `பிளிட்ஸ்’ ஆசிரியர் சலா உதின் சோகிப் சவுத்ரி எழுதிய தலையங்க கட்டுரையில் கூறியிருப்பதாவது:
வங்கதேச மாணவர்கள் போராட்டத்தை 157 பேர் ஒருங்கிணைந்து நடத்தினர். இந்தப் போராட்டத்தில் அல்-காய்தா தீவிரவாத அமைப்புடன் தொடர்புடைய பிஎன்பி கட்சிக்கு முக்கிய தொடர்பு உள்ளது. பிஎன்பி கட்சியின் மூத்த தலைவர் டேவிட் பெர்க்மான் போராட்டத்தை தூண்டினார். பிரிட்டனுக்கு தப்பியோடிய பிஎன்பி கட்சியின் தலைவர் தாரிக் ரகுமான், அங்கிருந்து கொண்டு வங்கதேச போராட்டத்தை வழிநடத்தினார். இவர் வங்கதேச முன்னாள் பிரதமர் கலீதா ஜியாவின் மகன் ஆவார்.
வங்கதேச மாணவர் போராட்டத்தின் பின்னணியில் பாகிஸ்தானின் ஐஎஸ்ஐ உளவு அமைப்பு, அமெரிக்காவின் சிஐஏ உளவு அமைப்பும் இருக்கிறது. மாணவர்களின் பெயர்களில் ஏராளமான தீவிரவாதிகளும் களமிறங்கி, போராட்ட களத்தை போர்க்களமாக மாற்றினர்.
வங்கதேசம் தற்போது செழுமையாக இருக்கிறது. இதை பாகிஸ்தான் போன்று திவாலான நாடாக மாற்ற பழமைவாத முஸ்லிம்களும், தீவிரவாதிகளும் சதி செய்து வருகின்றனர்.
இவ்வாறு தலையங்க கட்டுரையில் தெரிவிக்கப்பட்டு உள்ளது.
வங்கதேசத்தில் கலவரத்தை தூண்டுவது தொடர்பாக லண்டனில் ஐஎஸ்ஐ உளவு அதிகாரிகள் சில மாதங்களுக்கு முன்பு ரகசிய கூட்டத்தை நடத்தினர். இதில் வங்கதேசத்தை சேர்ந்த பல்வேறு தீவிரவாத குழுக்களின் பிரதிநிதிகள் பங்கேற்றனர்.
அப்போது கலவரத்தில் பலரை கொலை செய்தால் பல கோடி ரூபாய் பரிசாக வழங்கப்படும் என்று ஐஎஸ்ஐ சார்பில் உறுதி அளிக்கப்பட்டது. இதன்காரணமாகவே வங்கதேச போராட்டத்தில் கணிசமான உயிரிழப்பு ஏற்பட்டதாகக் கூறப்படுகிறது.
ஷேக் ஹசீனா அண்மையில் கூறும்போது, “வங்கதேசம், மியான்மரின் சிலபகுதிகளை ஒன்றிணைத்து புதிய கிறிஸ்தவ நாட்டை அமைக்க அமெரிக்கா விரும்புகிறது. வங்கக் கடலில் புதிய கடற்படைத் தளம் அமைக்கவும் அந்த நாடுமுயற்சி செய்கிறது. இதற்கு நான் சம்மதிக்கவில்லை. இதன் காரணமாகவே எனக்கு எதிராக சதி நடக்கிறது” என்று குற்றம் சாட்டினார்.
அரசியலுக்கு முழுக்கு: ஷேக் ஹசீனாவின் மகன் ஷாஜிப் வாஸத் ஜாய் அமெரிக்காவில் வசிக்கிறார். அவர் நிருபர்களிடம் கூறியதாவது: எனது தாயார் வங்க தேச மக்கள், நாட்டின் வளர்ச்சிக்காக மிகக் கடினமாக உழைத்தார். ஆனால் ஒரு சிறிய கூட்டம் அவருக்கு எதிராக சதி செய்து மிகப்பெரிய கலவரத்தை ஏற்படுத்திவிட்டது. கடந்த ஞாயிற்றுக்கிழமை வரை எனது தாயார் ராஜினாமா குறித்து சிந்தித்துகூட பார்க்கவில்லை. அவரது உயிருக்கு அச்சுறுத்தல் ஏற்பட்டதால் குடும்பத்தினரின் அறிவுரைப்படி வங்கதேசத்தை விட்டு அவர் வெளியேறி உள்ளார். அவர் மீண்டும் அரசியலுக்கு திரும்ப மாட்டார் என்றார்.
அதிகம் கண்காணிக்கப்பட்ட ஹசீனாவின் விமானம்: வங்கதேச பிரதமர் ஷேக் ஹசீனா தலைநகர் டாக்காவில் இருந்து ராணுவ ஹெலிகாப்டரில் புறப்பட்டார். பின்னர் வங்கதேச விமானப் படைத் தளத்துக்கு சென்ற அவர், அங்கிருந்து சி-130 விமானத்தில் புறப்பட்டார். அவரது விமானம் சென்ற பாதையை உலகம் முழுவதும் ஏராளமானோர் கண்காணித்தனர்.
பிளைட்ரேடார்24 என்ற இணையத்தில் உலகம் முழுவதும் இயக்கப்படும் விமானங்கள் வான்பரப்பில் எங்கு பறக்கின்றன, எந்தப் பாதையில் செல்கின்றன என்பன குறித்த விவரங்கள் வெளியிடப்படுகின்றன. இந்த இணையத்தில் ஹசீனாவின் விமானம் சென்ற பாதையை சுமார் 29,000-க்கும் மேற்பட்டோர் ஒரே நேரத்தில் கண்காணித்தனர். நேற்று மாலை 4.15 மணி அளவில் இந்தியாவின் வாராணசி அருகே விமானம் பறந்ததாக பிளைட்ரேடார்24 இணைய வரைபடத்தில் காட்டப்பட்டது.
தீவிரவாத குழுக்கள் உதவியுடன் இணைய சேவை: வங்கதேசத்தில் மாணவர்களின் போராட்டத்தை கட்டுப்படுத்த இணையசேவை, சமூக வலைதள சேவைகள் முற்றிலுமாக முடக்கப்பட்டன. ஆனால் சில தீவிரவாத குழுக்கள், பாக்கெட் ரவுட்டர்கள் மூலம் போராட்டக்காரர்களுக்கு இணைய வசதியை ஏற்படுத்திக் கொடுத்தன. இதற்காக பல கோடி ரூபாய் செலவிடப்பட்டது. இணைய வசதியின் மூலம் சமூக வலைதளங்களில் கலவரத்தை தூண்டும் வகையில் வீடியோக்கள் பரப்பப்பட்டன. கடந்த 2022-ம் ஆண்டில் இலங்கை அரசுக்கு எதிரான மிகப்பெரிய அளவில் போராட்டங்கள் நடைபெற்றன.
அப்போது இலங்கை நாடாளுமன்றம், இலங்கை அதிபரின் வீடுகள் முற்றுகையிடப்பட்டு, சூறையாடப்பட்டன. இதே பாணியில் வங்கதேச போராட்டம் வழிநடத்திச் செல்லப்பட்டது. வங்கதேச நாடாளுமன்றம், பிரதமரின் இல்லம் சூறையாடப்பட்டு உள்ளன. பல்வேறு அமைச்சர்களின் வீடுகள், அலுவலகங்கள் தீ வைத்து எரிக்கப்பட்டு உள்ளன. வங்கதேச உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதியின் வீட்டையும் வன்முறை கும்பல் சூறையாடியிருக்கிறது என்று அரசியல் நோக்கர்கள் தெரிவித்துள்ளனர்.