சென்னை: அமைச்சர் உதயநிதிக்கு துணை முதல்வர் பதவி வழங்கப்படுமா என்பது குறித்து கேட்டதற்கு, ‘‘கோரிக்கை வலுத்துள்ளதே தவிர, இன்னும் பழுக்கவில்லை’’ என்று முதல்வர் ஸ்டாலின் கூறினார். இதன்மூலம், அதற்கான காலம் கனியவில்லை என்று அவர் சூசகமாக தெரிவித்துள்ளார்.
தமிழகத்தில் முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையில் திமுக அரசு பொறுப்பேற்று 3 ஆண்டுகள் நிறைவடைந்து விட்டன. கடந்த 2022 டிசம்பர் 14-ம் தேதி உதயநிதி ஸ்டாலினுக்கு அமைச்சர் பதவி வழங்கப்பட்டது. அப்போ திருந்தே அவருக்கு துணை முதல்வர் பொறுப்பு வழங்கப்படும் என்ற பேச்சு அவ்வப்போது எழுந்து வருகிறது.
இந்த சூழலில், இம்மாத இறுதியில் அமெரிக்கா செல்லும் முதல்வர் ஸ்டாலின், அங்கு 15 நாட்களுக்கும் மேலாக தங்க உள்ளார். அவர் புறப்பட்டு செல்லும் முன்னர், அமைச்சரவை மாற்றத்துடன், அமைச்சர் உதயநிதிக்கு துணை முதல்வர் பதவியும் வழங்க உள்ளதாக பரவலாக பேசப்பட்டு வந்தது. ஆகஸ்ட் 19-ம் தேதி இதுபற்றிய அறிவிப்பு வெளியாகும் என்றும் கூறப்பட்டது.
இந்நிலையில், முதல்வர் ஸ்டாலின் தனது தொகுதியான கொளத்தூரில் நேற்று நடைபெற்ற நிகழ்ச்சியில் பங்கேற்றார். நிகழ்ச்சியின் முடிவில் செய்தியாளர் ஒருவர், ‘‘அமைச்சர் உதயநிதி ஸ்டாலினை துணை முதல்வராக்க வேண்டும் என்று கோரிக்கைகள் வலுத்துள்ளது. முதல்வர் பரிசீலிப்பாரா?’’ என்று கேட்க, அதற்கு முதல்வர் ஸ்டாலின், ‘‘வலுத்துள்ளதே தவிர, இன்னும் பழுக்கவில்லை’’ என்று பதில் அளித்தார். உதயநிதியை துணை முதல்வராக்க இன்னும் காலம் கனியவில்லை என்பதையே முதல்வர் ஸ்டாலின் சூசகமாக தெரிவித்ததாக அரசியல் வட்டாரத்தில் பேசப்படுகிறது.
திமுகவில் உதயநிதி ஸ்டாலின் 3-ம் தலைமுறை தலைவராக உருவெடுத்துள்ளார். அவர் கட்சியின் இளைஞர் அணி தலைவராக இருப்பதால், அந்த அணியில் உள்ள இளம் தலைமுறையினர், அவருக்கு துணை முதல்வர் பதவிவழங்கப்பட வேண்டும் என்று விரும்புகின்றனர்.
அதேநேரம், மூத்த அமைச்சர்கள் துரைமுருகன், கே.என்.நேரு, ஐ.பெரியசாமி உள்ளிட்டோர் இருக்கும்போது, உதயநிதிக்கு துணை முதல்வர் பதவி அளிப்பது சரியாக இருக்குமா என்று முதல்வர் ஸ்டாலின் தயங்குவதாக கூறப்படுகிறது. அத்துடன், உதயநிதிக்கு துணை முதல்வர் பதவி வழங்கும் யோசனை குறித்து எதிர்க்கட்சியினரும் விமர்சித்து வருகின்றனர். இவற்றை கருத்தில் கொண்டே, உதயநிதிக்கு துணை முதல்வர் பதவி வழங்குவது குறித்து முடிவெடுப்பதை முதல்வர் ஸ்டாலின் சற்று தள்ளிவைத்திருப்ப தாகவும் கூறப்படுகிறது. இருப்பினும், முதல்வரின் அமெரிக்க பயணத்துக்கு முன்பு இதுதொடர்பான அறிவிப்பு வெளியாகக்கூடும் என்ற எதிர்பார்ப்பில் திமுக வட்டாரங்கள் உள்ளன.