சென்னை: மத்திய அரசின் நாபெட் (என்ஏஎப்இடி) நிறுவனத்தில் தமிழக விவசாயிகளிடம் இருந்து கொள்முதலான கொப்பரை தேங்காய்களுக்கு ரூ.150 கோடி நிலுவை உள்ளது. இந்த தொகையை ஒரு வாரத்தில் தராவிட்டால், சென்னை நாபெட் அலுவலகம் முன் போராட்டம் நடத்துவதாக தமிழக விவசாயிகள் பாதுகாப்பு சங்கம் எச்சரித்துள்ளது.
இது குறித்து தமிழக விவசாயிகள் பாதுகாப்பு சங்கத்தின் தலைவர் வழக்கறிஞர் ஈசன் முருகசாமி விடுத்துள்ள அறிக்கையில், “20 ரூபாய்க்கு விற்று வந்த தேங்காயின் விலை தற்போது 10 ரூபாய்க்கு விற்று வருவதால் தென்னை விவசாயிகளின் வாழ்வாதாரம் தொடர்ந்து மிகக் கடுமையான சிக்கலில் இருந்து வருகிறது.
மத்திய அரசு கொள்முதல் செய்யக்கூடிய கொப்பரை தேங்காய்களை பாரத் கோகனட் ஆயில் திட்டமாக அறிவித்து செயல்படுத்த கோரி தொடர்ச்சியாக தமிழக விவசாயிகள் பாதுகாப்பு சங்கம் போராடி வருகிறது. விவசாயிகளுக்கு கொப்பரை தேங்காய்க்கு ரூ.150 மட்டுமே கட்டுப்படியான விலை ஆகும். ஆனால் அரசு கொடுப்பது வெறும் 111.60 பைசா மட்டுமே.
இந்நிலையில், மத்திய அரசின் நாபெட் நிறுவனம் கடந்த மூன்று மாதங்களுக்கு முன் தமிழகம் முழுவதும் 18,000 விவசாயிகளிடமிருந்து ரூ.150 கோடிக்கு கொப்பரைகளை கொள்முதல் செய்துள்ளது. ஆனால் இதுவரை விவசாயிகளுக்கு பணத்தை தராமல் காலம் தாழ்த்தி வருகிறது, கொள்முதல் செய்ததிலிருந்து மூன்று நாட்களுக்குள் பணம் தர வேண்டும் என்பது விதியாகும்.
கடந்த மூன்று மாதங்களாக பணம் தராமல் உள்ளதை கண்டித்தும், நிலுவை பணத்தை விவசாயிகள் அனைவருக்கும் உடனடியாக நாபெட் நிறுவனம் வழங்க வேண்டும் என தமிழக விவசாயிகள் பாதுகாப்பு சங்கம் கேட்டுக்கொள்கிறது. ஒரு வார காலத்திற்குள் தமிழக விவசாயிகளுக்கு பணத்தை வழங்காவிட்டால், தமிழக விவசாயிகள் பாதுகாப்பு சங்கத்தின் சார்பில் போராடுவோம்.
தென்னை விவசாயிகளையும் திரட்டி கோரிக்கை நிறைவேறும் வரை சென்னை, எழும்பூரில் உள்ள நாபெட் அலுவலகத்தின் முன்பு தொடர் காத்திருப்பு போராட்டம் நடைபெறும் என்பதை தெரிவித்துக் கொள்கிறோம்” என்று அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.