பா.ரஞ்சித் இயக்கத்தில் விக்ரம் நடிப்பில் உருவாகியுள்ள திரைப்படம் ‘தங்கலான்’.
இப்படத்தில் தங்கலானின் மனைவியாக ‘கெங்கங்கம்மா’ கதாபாத்திரத்தில் பார்வதி நடித்துள்ளார். தங்கமும், புழுதியும், ரத்தமும் கலந்து உருவாகியிருக்கும் இப்படத்தில் இதுவரை நடித்திராத வித்தியாசமான தோற்றத்தில் சூனியக்காரியாக ‘ஆரத்தி’ கதாப்பாத்திரத்தில் நடித்திருக்கிறார் நடிகை மாளவிகா மோகனன். மேக் அப் போட 5 மணி நேரம், அதே மேக் அப்பில் 10 மணி நேரம் என அர்ப்பணிப்புடன் நடித்திருக்கிறார்.
இத்திரைப்படம் ஆகஸ்ட் 15ம் தேதி திரையரங்குகளில் வெளியாவதையொட்டி நேற்று இசை வெளியீட்டு விழா சென்னையில் நடைபெற்றது. இதில் பார்வதி, மாளவிகா மோகனன் இருவரும் ‘தங்கலான்’ அனுபவம் குறித்து பேசியிருந்தனர்.
இதுகுறித்து பேசியிருக்கும் நடிகை பார்வதி, “இங்க எல்லாமே அரசியல்தான். சினிமா பொழுதுபோக்காக இருக்கலாம். ஆனால், இங்கே எல்லாமே அரசியல்தான். அரசியல் இல்லாமல் எதுமே கிடையாது. ‘தங்கலான்’ ஆகஸ்ட் 15ம் தேதி ரிலீஸ் ஆவது எதார்த்தமாக நடந்தது அல்ல. ஒடுக்குமுறைக்கு எதிராக சமூக சுதந்திரத்தை, சமத்துவத்தை எடுத்துரைக்கும் திரைப்படமாக ‘தங்கலான்’ இருக்கும். சமத்துவமின்மை ஏன் நிலவுகிறது என்பதை நாம் தொடர்ந்து படித்துக் கொண்டேயிருக்க வேண்டும். அந்த உரையாடல்கள் உங்களுக்கு அசௌகரியத்தைக் கொடுத்தாலும் நீங்கள் அதை ஒப்புக் கொண்டுதான் ஆக வேண்டும். கலை என்பது அரசியல். அந்த அரசியலை படையாக ஒன்று திரட்டி முன்னெடுத்துச் செல்கிறார் பா.ரஞ்சித். அவரது படையில் நான் ஒரு வீராங்கனையாக இருப்பதை நினைத்து பெருமைப்படுகிறேன்” என்று பேசியிருக்கிறார்.
இதையடுத்துப் பேசிய மாளவிகா மோகனன், “பா ரஞ்சித் மிகப்பெரிய ஆர்மியை தன்னுடைய பின்னால் வைத்திருக்கிறார். என்னுடைய இதயத்தின் ஒரு பகுதிதான் ‘தங்கலான்’. எமோஷனல் ஆகாமல் இந்த ஆரத்தி கதாபாத்திரம் குறித்து என்னால் பேச முடியாது. இந்த கதாபாத்திரதை எனக்குக் கொடுத்த ரஞ்சித் சாருக்கு நன்றி” என்று பேசியிருக்கிறார்.